கொரோனாவை கட்டுப்படுத்த ராஜித தான் காரணம் என றிசாத் கூறினாரா?
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சேவைகள் காரணமாகவே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயினை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்து என ஒருபோதும் தான் கூறவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
"ராஜித சேனாரத்ன செய்த சேவைகள் காரணமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது" எனும் தலைப்பிலான செய்தியொன்று நேற்று (08) திங்கட்கிழமை தமிழ்வின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டிருந்த இந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சேவைகள் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்று நோயை இவ்விதமாகவேனும் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
"ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் சுகாதார துறைக்கு செய்த சேவை காரணமாகவே கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார துறைக்கு பல வசதிகளை செய்து கொடுத்ததுடன் மருந்து உட்பட மருத்துவ உபகரணங்களில் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனால், மருந்து மாஃபியாக்களின் எதிரியாக ராஜித சேனாரத்ன மாறியிருந்தார்.
அரசியல் பழிவாங்கல் காரணமாகவே ராஜித சேனாரத்ன தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" அவர் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தியினை இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி வரை 254 பேர் சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்கு மேலதிகமாக பலர் வட்ஸ்அப்களிலும் பகிர்ந்துள்ளனர்.
இந்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் விடியல் இணையத்தளத்தின் Fact Checking குழுவினர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை தொடர்புகொண்டு வினவிய போது, "குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எந்தவொரு ஊடகத்திற்கும் நான் கருத்து தெரிவிக்கவில்லை" என்றார்.
"அத்துடன், குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) எந்தவொரு செய்தியாளரையும் தான் சந்திக்கவில்லை" எனவும் அவர் கூறினார்.
இதனால் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் பொய்யானது என முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)