ஜூன் மாதத்திற்கான நிவாரணக் கொடுப்பனவை வழங்க வேண்டாம் என கூறவில்லை: தேர்தல்கள் ஆணைக்குழு
நாட்டில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5,000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தான் கூறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
"தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய ஜுன் மாதக் கொடுப்பனவை நிறுத்த அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பதாக" அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, நேற்று (21) வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
எனினும், இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, "குறித்த நிவாரணம் வழங்கும் செயற்பாடானது அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்புமாயின் ஜூன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண்டுமா என்பது குறித்து 'மீள் பரிசீலனை' செய்யுமாறும் கடிதமொன்றினூடாக அறிவித்தேன்" என்றார்.
மேலும், இந்நிவாரணத் தொகையை வழங்கும் போது பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலான அரசியல்வாதிகளின் தலையீட்டைத் தவிர்க்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)