20க்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த குமார், டயான கமகே, ஹாபீஸ் நசீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், அலி சப்ரி றஹீம், இஷாக் றஹ்மான் மற்;றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு கடந்த 22ஆம் திகதி ஆதரவளித்தனர்.
இதற்கு மேலதிகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், 20ஆவது திருத்தச் சட்டதிலுள்ள இரட்டை பிரஜாவுரிமைக்கு மாத்திரம் ஆதரவாக வாக்களித்தார்.
இதனால் குறித்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பக்கம் ஆசனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறாடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் எழுத்து மூலமான இந்த கோரிக்கை சபாநாயாகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
"இந்த கோரிக்கை சட்ட ரீதியற்றதாகும். நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்" என 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
"இதில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நேரடியான உறுப்பினர்கள் அல்ல. இதனால் அக்கட்சியினால் எங்களினை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது" எனவும் அவர் கூறினார்.
இதனை மீறி எங்களுக்கு எதிராக தேவையற்ற நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி முயற்சித்தால் நாங்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)