மட்டு. – சென்னை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்: பிரதமர்
மட்டக்களப்பு விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு – 03 இலுள்ள அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"இந்தியாவின் ஏலையன்ஸ் ஏயர் விமான நிறுவனம் மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. எனினும் மட்;டக்கப்பு விமான நிலையத்தின் ஒடு பாதை 60 ஆசனங்களைக் கொண்ட விமானங்கள் தரையிறங்குவதற்கு போதுமானதாகவுள்ளது. ஆனால் இந்தியன் ஏலையன்ஸ் விமானம் 70 ஆசனங்களைக் கொண்டதாகும்.
இதனால் ஒடுபாதையினை விஸ்தரிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பான சாத்தியகூறு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும் பெப்ரவரி மாதமே இந்தியாவிலிருந்து சுற்றுலா பிரயாணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது வழமையாகும். இதற்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்னும் சில தினங்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, மத்தள விமான நிலையத்தினை இந்திய கம்பனிகளுடன் இணைந்து ஆரம்பிப்பதற்கான பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில் அடுத்த வருடம் முற்பகுதியில் மத்தளை விமான நிலையத்தினை செயற்படுத்த முடியும்.
அதேபோன்று நவம்பர் மாதம் யாழ்;ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் சென்னைக்கான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது" என்றார்.
-றிப்தி அலி-
Comments (0)
Facebook Comments (0)