ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் மற்றும் இலங்கை அரசியல்
ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் வை.என் ஜெயரத்ன
கடற்படை தளவாடங்கள் என்பது, குறிப்பாக போட்டித்தன்மையான கடற்பரப்பில் ஓர் நாட்டின் புவிசார் அரசியல் நிலைப்பாடு தொடர்ந்து பரிசோதிக்கப்படும் கருவிகளாகும்.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடாத்திய பிறகு, அமெரிக்கா உடனடியாக வளைகுடா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு இரண்டு துருப்புக்காவி குழுக்களை அனுப்பியது.
இதன் நோக்கம் இஸ்ரேலைத் தாக்கும் சாத்தியமான இஸ்ரேலிய எதிர்ப்பு சக்திகளைத் தடுப்பதாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கடற்படை தளவாடங்களை நிலைநிறுத்துவதன் மூலமாக தங்களின் நோக்கங்களை வெளிப்படுத்துவதற்கு உலகளாவிய அதிகாரங்கள் தொடர்ந்து தங்களது கடற்படை திறனைப் பயன்படுத்துகின்றன.
பெரும்பாலான நேரங்களில் இந்த கடற்படை தளவாடங்கள் குறிப்பான தேசிய நலன்களை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். அதற்கு இலங்கையும் வேறுபட்டதல்ல. கடந்த காலத்திலும் அதையே மேற்கொண்டதுடன், எதிர்காலத்திலும் அதையே மேற்கொள்ளும்.
ஹூத்தி குழுவின் தாக்குதல்களில் இருந்து சர்வதேச கப்பல் வழித்தடங்களை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படை கப்பலை பாப் எல் மாண்டேப்பிற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை, குறிப்பாக உள்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது செயற்பாட்டு செலவீனங்கள், கண்காணிப்பு உபகரணம் மற்றும் ஆதரவு தளவாடங்கள் மூலமாக இந்த கப்பல்களில் முதலீடு செய்வதற்கு அரசியல் தலைமை எந்தளவிற்கு தயாராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றாலும், அதே நேரத்தில் இது கடற்படை தவறவிடக் கூடாத ஒரு வரவேற்கத்தக்க சந்தர்ப்பமாகும்.
இலங்கை கடற்படையும் தேசிய நலனும்
இலங்கை கடற்படையானது முன்னைய சந்தர்ப்பங்களிலும் தேசிய நலன்களை நிறைவேற்றும் வகையில் கடற்படையின் நிலைநிறுத்தங்களை நிறைவேற்றியுள்ளது. 1950ஆம் ஆண்டு புத்தரின் புனித தந்ததாதுவை கப்பல் மூலம் மியான்மருக்கு பரிமாற்றும் பணியில் அப்போதைய அரச இலங்கை கடற்படை ஈடுபட்டது.
சமீப காலங்களில் இருந்து, 2007 முதல் 2008 வரை பிரிவினைவாத பயங்கரவாதிகளின் மிதக்கும் களஞ்சியசாலைகளை வேட்டையாடுவதில் கடற்படை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நிலைநிறுத்தலை மேற்கொண்டது.
இராணுவ விருப்பமும் அரசியல் விருப்பமும் ஒருங்கிணைக்கப்பட்டவுடன், பிரிவினைவாத பயங்கரவாதிகளின் மையத்தின் பின்செல்வதற்கு ஓர் துணிச்சலான தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடலோர சரக்குக் கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதுடன் ஆழ்கடல் எல்லைகளில் தஞ்சம் புகுந்தது. இந்தக் கடல்களை கடற்படை அணுகத் துணியவில்லை என்று எதிரி தவறாக உணர்ந்தான்.
பின்னர், போதைப்பொருள் அச்சுறுத்தலால், கடற்படை மீண்டும் கடலுக்குச் சென்றது. அது இம்முறை இலங்கை மீன்பிடிக் கப்பல்களுக்கு போதைப்பொருள் கடத்தும் தாய்க் கப்பலாகச் செயற்பட்ட ஈரானிய பாய்மரக் கப்பலைத் தேடி அரபிக்கடலின் தெற்கே சென்றது.
2019 இல் அந்த தீர்மானம் எடுக்கப்படுவதற்கு முன்னராக, இலங்கை கடற்படை அரபிக் கடல் தங்களுக்கான செயற்பாட்டு பகுதியல்ல என்று முடிவு செய்ததால், இலங்கை கடற்படை இந்திய கடற்படை மற்றும் பஹ்ரைனை தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த கடல்சார் படை (CMF) ஆகியவற்றின் உதவியை நாடியது.
ஆனால் இந்தியா மற்றும் CMF இரண்டும் கப்பல்கள் கிடைக்காத காரணத்தால் உதவி வழங்க மறுத்தமையால், NHQ தானே நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்தது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல தாய் கப்பல்கள் மற்றும் இலங்கை மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டமை பின்னைய வரலாறாகும்.
கடற்படை தளவாடங்களை பயன்படுத்துவதில், கருத்திற் கொள்ள வேண்டிய முதன்மையான காரணி, எதற்காக? அவசியம் என்ன? இது நமது தேசிய நலனுக்காகவா? என்பனவாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், குறிப்பாக தெற்கு அரபிக் கடல் செயற்பாட்டு நலன்களின் ஒரு பகுதியாக கருதுவதில் ஓர் தெளிவான தேசிய நலன் இருந்தது.
அதே நேரத்தில், பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு நோக்கிய பரந்த கடற்பகுதி, அவுஸ்திரேலிய பிரத்தியேக பொருளாதார வலயத்தின் உடனடுத்த சுற்றளவு பகுதிவரை, நலனளிக்கும் பகுதியாக இருந்தது.
இங்கே கேட்க வேண்டிய வினா என்னவென்றால், பாப்-எல்-மண்டேப்பும் ஓர் தேசிய நலனை உருவாக்குமா? இந்த பகுப்பாய்வானது, செயற்பாட்டு செலவினங்களின் செலவை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியத்திற்கு எதிராக அந்த வாய்ப்பைப் பற்றி கலந்துரையாட விரும்புகிறது.
"கழக உறுப்பினராக" இருப்பதன் நோக்கம்
பிராந்திய கடற்படை விவகாரங்களில் பங்கேற்பது நல்லது, ஏனெனில் இவை நமது நம்பகத்தன்மையை அதிகரிப்பதுடன் பிராந்திய பங்காளராக எங்களை ஏற்றுக்கொள்ளும்.
இருப்பினும் இதனை நிரூபிப்பதற்கு நாம் அதிக தூரம் செல்ல வேண்டுமா? ஏற்கனவே பல கடற்படை மன்றங்களில் பாராட்டப்பட்டிருக்கின்ற எங்களின் கடற்படை முக்கிய வகிபங்கை ஆற்றி வருவதால் நாம் போக வேண்டிய அவசியமில்லை என்று எழுத்தாளர் நம்புகிறார்.
எங்கள் கடல்சார் நியாயாதிக்க எல்லை பாதுகாப்பாகவும் பந்தோபஸ்துடனும் இருப்பதை உறுதிசெய்துள்ளதுடன், கடல்சார் விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் எங்களுடன் இணைந்துள்ள பிராந்தியங்களில் அனைத்து தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் ஒத்துழைத்துள்ளோம்.
மேலும், அவுஸ்திரேலியா, மாலைதீவுகள் மற்றும் BoB பிராந்தியத்திற்கான போதைப்பொருள் வழித்தடங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் ஏற்கனவே முனைப்பான பங்குதாரராக உள்ளோம்.
முக்கிய கடற்படைகள் சண்டையில் ஈடுபடாமல், தங்களது துருப்புகள் மற்றும் இயந்திரங்களைப் பயிற்றுவிப்பதற்காவே இந்த முக்கியத்துவமான இடங்களுக்குள் குதிக்க விரும்புகின்றன.
இந்த "முக்கியத்துவமான இடங்களில்" செயற்படுவதன் மூலமாக நீங்கள் எந்தளவு கற்றுக்கொள்கிறீர்கள் என்பது இந்த கடற்படையினரால் அறியப்படுவதுடன் எந்த உருவகப்படுத்தப்பட்ட முறைமையாலும் அதனை ஈடு செய்ய முடியாது. இது முக்கியத்துவமான இடங்களுக்கு அருகில் செயற்படும் விடயமேயன்றி முக்கியத்துவமான இடங்களுக்குள் செய்யப்படுவதல்ல.
1980களின் நடுப்பகுதியில், ஈரானிய சிறிய படகுகளால் ஹார்முஸ் ஜலசந்தியில் அவர்கள் நடாத்திய சண்டைகளில் அமெரிக்க கடற்படை சில கடினமான பாடங்களைக் கற்றுக் கொண்டது. அமெரிக்க தந்திரோபாயங்கள் கடற்படை சக்தியை விட விமான சக்தியை (முதன்மையாக ஹெலிகொப்டர்கள்) சார்ந்ததாகும்.
இத்தகைய உயர் ஸ்தாயியில், தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க மோதல்களில், இயந்திரங்களும் படையினரும் மிகவும் வேறுபட்டு நடந்து கொள்கிறார்கள்.
பல நிகழ்வுகளில் ஒன்றில், ஜூலை 3, 1988 அன்று ஈரானிய விமானம் 655 ஐ USS வின்சென்ஸ் சுட்டு வீழ்த்தியமையாகும். பந்தர் அப்பாஸிடம் இருந்து புறப்பட்ட இந்த விமானம் வேகமாக வரும் வேகப்படகு என தவறாக அடையாளம் காணப்பட்டது.
செப்ரெம்பர் 1, 1983 அன்று கொரியன் விமானச்சேவை விமானம் 007 சாகலின் தீவுகளில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யர்கள் மூது குற்றம் சாட்டப்பட்டதால், அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கு இது பதிலடி கொடுக்கும் தருணமானது.
கடற்படை தளவாடங்கள் திரும்பப் பெறப்பட்ட சில நாட்களில், அமெரிக்க கடற்படை நிலைப்படுத்துகை மாற்றப்பட்டதுடன், ஹார்முஸ் ஜலசந்தியில் விரோதங்கள் படிப்படியாக குறைந்துவிட்டன.
நாம் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு தயாரா? நமது சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் போது, அதிகமான சர்வதேச ஈடுபாடுகள் மற்றும் புவி மூலோபாய அழுத்தங்களில் ஈடுபடுவதற்கு நாம் தயாராக உள்ளோமா?
உலகளாவிய விவகாரங்களை அடைவதற்கான இந்த "அசாதாரண" தீர்மானங்களின் நோக்கங்கள் இருபக்க விளைவை உடையன என்று வரலாறு குறிப்பிடுகிறது.
ஒருபுறம், இவை உள்ளக அரசியல் பிரச்சினைகளிலிருந்தான திசைதிருப்பல்களையும், மறுபுறம், அவை ஒரே நேரத்தில் நீங்கள் இருக்கக்கூடிய மற்றும் இல்லாத சூழ்நிலைகளையும் கொண்டுள்ளன! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை நாம் சொற்களின் மூலமாக மட்டுமே எதையாவது மேற்கொள்ளக்கூடிய வசதியான வழிவகைகள், செயல்கள் மூலமாக அல்ல!
ஜனாதிபதியின் சிந்தனை செயன்முறையை ஊடக பிரசுரம் மூலமாக ஆய்வு செய்த எழுத்தாளர், அதனை வெற்று வார்த்தைகளின் தொகுப்பாக உணர்கிறார், அங்கு அடிப்படை சிந்தனை புத்திசாலித்தனமாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் சரியான செயற்திட்டம் அல்லது உத்தி இருக்கவில்லை.
ஜனாதிபதி அவர் பேசியபடி நடந்திருந்தால், கடல்சார் விவகாரங்களால் வழிநடாத்தப்படும் உலகளாவிய போட்டியின் சூழலில் இந்த தீவு தேசம் இப்படி இருந்திருக்காது.
இந்த பதட்டமான கடற்பரப்பில் செயற்படுவதற்கு, எங்களது கடல் ரோந்து கப்பல்களுக்கு (OPVs) வெப்ப கமெராக்கள் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட தளங்களின் வடிவத்தில் புதிய நிறுவல்கள் தேவைப்படுவதுடன், அவை 2009 முதல் மாற்றப்படவில்லை. எங்களின் அனைத்து EW உபகரணங்களும் இப்போது செயற்படாமையால், எங்களுக்கு சிறந்த இலத்திரனியல் போர் உபகரணங்கள் தேவைப்படும்.
ஆயுதங்கள் தொடர்பில் பார்த்தால், OPVகள் இன்னும் மேற்பரப்பு மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை வினைத்திறனாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவையாகும். வான்வழி அச்சுறுத்தல்கள் மற்றும் சாத்தியமான ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் பயன்படுத்திய பழைய பயிற்சி நுட்பங்களை புத்துயிரூட்டவேண்டியது ஓர் விடயமாகும்.
எங்களது சொந்த அலகுகளை அணுகும் எந்தவொரு ட்ரோன் அல்லது மேற்பரப்பு கப்பல்களையும் ஒரு மிகப்பெரிய "நெருப்பு கூம்பின்" கீழ் கொண்டு வருவதுடன், இதனால் அவற்றை அழிக்கலாம்.
இருப்பினும், ஹூத்திகள் ஏவுகணைகளையும் அனுப்புகின்றனர். தொழில்நுட்ப அடிப்படையில் போரின் சமச்சீரற்ற தன்மை நிறைய மாறிவிட்டதுடன், அதனால் அமெரிக்க கடற்படையானது வணிக ரீதியான ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் சிறிய ஆளுடைய மற்றும் ஆளில்லா மேற்பரப்பு கப்பல்களைப் பயன்படுத்தும் அரச சார்பற்ற தரப்பினருடன் போட்டியிடுகிறது.
இது சமீபத்திய ஆண்டுகளில் அதிவேகமாக விரிவடைந்த இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான சிறந்த சோதனைக்களமாகும். இந்திய தேசிய நலன்களைப் பாதுகாப்பது என்ற சாக்கில், ரேடார்கள், சென்சார்கள், கண்காணிப்பு கருவிகள் மற்றும் புதிய போர் ஹெலிகொப்டர்கள் கூட போர் எந்தளவிற்கு வினைத்திறனாக இருக்கும் என்பதை சோதிக்க வேண்டிய நேரம் இதுவாகும். இந்த சூழ்நிலைகள் இவ் வடிவத்தில் அடிக்கடி இருப்பதில்லை என்பதுடன் இவ்வாறு இருக்கக்கூடாது.
கடற்படை இந்த தருணத்தை தவறவிடக் கூடாது
தீவு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் ஜனாதிபதியின் அறிக்கை கடற்படையினர் தவறவிடக்கூடாத ஒரு சந்தர்ப்பமாகும்.
2022 முதல், கடற்படை ஒருபுறம் இருக்க, ஆயுதப் படைகளில் எதுவித மூலதன முதலீடும் கடினமாக இருந்தது. பாரிய பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி பெருமையாகக் கூறினாலும், பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டமை அரச மூலதனச் செலவினங்களில் 30% க்கும் குறைவாக இருப்பதாகவே எழுத்தாளர் கருதுகின்றார்.
எனவே, இன்றைய செயற்பாட்டுத் தேவைகளுக்காக முதலீடுகளைப் பெறுவதற்கு, அரச தலைவரின் "விருப்பங்கள்" இறுதிவரை பயன்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை கடற்படை ஏன் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதற்கான இரண்டாவது காரணம், அது அரேபிய கடலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நமது போரில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கடற் பகுதியில் எமது கடற்படை செயற்படுவதற்கான காரணத்தை வழங்குகிறது.
எழுத்தாளர், ஒரு கடல்சார் செயற்பாட்டாளராக, இலங்கைக்கான அரேபிய கடலில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருட்களை இடைமறிப்பதில் ஆர்வமுள்ள எந்தவொரு பிராந்திய அல்லது பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட கடற்படையையும் சந்திக்கவில்லை.
ஆகவே, இது யேமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுக்கு (ஒருவேளை வடக்குப் பகுதியில் இல்லாவிட்டாலும்) எங்களது "செயற்பாட்டு ஆர்வத்தை" விரிவுபடுத்தும் நேரமென்பதுடன், அதே நேரத்தில் கடலில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் நமது தேசிய ஆர்வத்தை செங்கடலின் தெற்கில் உள்ள மற்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து செயற்படும் அரசியல் ஆர்வத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
எழுத்தாளர் முன்னறிவிக்கின்ற ஒரேயொரு குறைபாடு, அமெரிக்கத் தலைமையிலான முன்முயற்சிகளுக்கு இலங்கை ஒரு "பங்காளர்" என்று குறியிடப்படுவதுடன், இதன் மூலம் சீன முகாமின் இழப்பில் QUAD முகாமுடனான சாத்தியமான தொடர்பை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாகும்!
சுதந்திரமான ஊடக அபிப்பிராயதாரர்கள் இந்த முன்னோக்குகளை வலியுறுத்துவதுடன், சிலவேளை நமது சொந்த அரசியல் தலைவர்களை விட இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அதிகமாக வலியுறுத்துவார்கள்!
செங்கடலின் தெற்கில் செயற்படுவதால், நாம் எதனைப் பெறுவோம்? எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் முன்னோக்கிச் சென்று உண்மையில் தேவையான தொழில்நுட்பத் தேவைகளில் முதலீடு செய்தால், இலங்கை கடற்படையானது பிராந்திய மற்றும் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட கடற்படைகளுடன் இணைந்து செயற்பட முடியும்.
இது மற்றொரு பிரச்சினையை பொய்யாக்குகிறது. ஈரானும் வளைகுடா நாடுகளும் நமது வருகையை அங்கீகரிக்குமா? கடந்த ஐந்து ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் அரசியல் சிந்தனைகள் அதிகளவு மாற்றமடைந்துள்ளதுடன், சமீபத்திய இஸ்ரேல் - காசா போரின் விளைவாக உலகளாவிய பிளவுகள் குறிப்பிடத்தக்கவை என்பதுடன் வெறுமனே மறக்க முடியாதவையாகும்.
இந்த வளைகுடா நாடுகள் முழுவதுமாக அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தால், நாம் இப்போது வளைகுடா கூட்டணியைப் பார்த்திருப்போம். ஆனால் நாம் அவ்வாறு எதையாவது பார்க்கின்றோமா?
எழுத்தாளர் உலகளாவிய அபிப்பிராய அலை அதிகரித்து வருவதாகவும், இந்த அலை அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் எதிரானதே அன்றி இலங்கைக்கு எதிரானதல்ல என்று கருதுகிறார். அந்த வகையில், நாம் இதில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவைப் பற்றி இன்னமும் கவலைப்பட வேண்டியதில்லை என்று எழுத்தாளர் நம்புகிறார்.
மறுபுறம், ஒரு நாட்டின் கடற்படைத் தளவாடங்கள் பலிக்கடவாகவோ அல்லது தவறான அரசியல் கணக்கீடுகளுக்கான விலையாகவோ இருக்க முடியாது என்பதுடன் வரலாற்றில் இத்தகைய விலையுயர்ந்த தவறுகள் நிறைந்திருப்பதால் இது மிகவும் பொருத்தமான விடயமாகும்.
ரியர் அட்மிரல் வை.என்.ஜெயரத்ன இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியும் தலைமை நீரியல் படவரைஞரும் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டுத் தலைமை நீரியல் படவரைஞருமாவார்.
ஓய்வுபெற்ற போது ஐக்கிய நாடுகள் சபையால் கடலுக்கடியில் உள்ள கேபிள்களுக்கான சர்வதேச ஆலோசகராகப் நியமிக்கப்பட்டதன் மூலமாக அவரது சேவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவரை ynjayarathna@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)