வட, கிழக்கில் கண்ணிவெடி அகற்ற ஜப்பான் 238 மில்லியன் ரூபா நிதியுதவி

வட, கிழக்கில் கண்ணிவெடி அகற்ற ஜப்பான் 238 மில்லியன் ரூபா நிதியுதவி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை மேலும் நீடிக்க ஜப்பான், முன்வந்துள்ளது.

இதற்கமைய, MAG மற்றும் HALO Trust ஆகியவற்றுடனான இந்த இரு திட்டங்களுக்காக 729,925 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 238 மில்லியன்) ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி இரு கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டங்களுக்கான நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் Mines Advisory Group (MAG) இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லென்னன் மற்றும் HALO Trust இன் நிகழ்ச்சி முகாமையாளர் ஸ்டீபன் ஹோல் ஆகியோருடன் கடந்த திங்கட்கிழமை (27) கைச்சாத்திட்டார்.

“Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” இன் கீழ் இந்த நிதி உதவி வழங்கப்படுகின்றது. 2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் பெருமளவு நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரையில் வழங்கியுள்ள மொத்தத் தொகை 44 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாகும்.

MAG மற்றும் HALO இனால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டங்களினூடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 10,977 தற்காலிகமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை தமது சொந்தப் பகுதிகளில் மீளக் குடியமர்த்தவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையின் முக்கியத்துவம் பெற்றுள்ள பகுதிகளில் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதும் அடங்கியுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் முன்னணி நன்கொடை வழங்குநர் எனும் தனது நிலையை ஜப்பானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், “கண்ணிவெடி தாக்கமற்ற இலங்கை” என்பதை எய்துவதற்கு அவசியமான ஆதரவை தொடர்ந்தும் வழங்கும் என ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டார்.

இந்த நன்கொடை உதவி தொடர்பில் Mines Advisory Group (MAG) இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லென்னன் கருத்துத் தெரிவிக்கையில்,

"2002ஆம் ஆண்டில் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பமானது முதல், இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் ஜப்பான் பிரதான பங்களிப்பு வழங்குநராக அமைந்துள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியினூடாக மாத்திரம், MAG இனால் 3,300,000 சதுர மீற்றர்களுக்கு அதிகமான பாதிக்கப்பட்ட பிரதேசங்களை விடுவிக்க முடிந்துள்ளதுடன், 16,500க்கு அதிகமான வெடிப்பொருட்களை அகற்றவும் முடிந்துள்ளது.

இந்த புதிய திட்டத்தினூடாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்க பிரதேசங்களின் மேலும் 194,896 சதுர மீற்றர் பகுதியை விடுவிக்க எதிர்பார்ப்பதுடன், தமது சொந்தப் பகுதிகளுக்கு மீளத் திரும்பும் மக்களுக்கு ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படும் அவதானத்தை தணித்து, 5,577 மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தினூடாக விடுவிக்கப்படும் காணியினூடாக, விவசாய அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என்பதுடன், இயற்கை வளங்களை அணுகும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

2002ஆம் ஆண்டு முதல் MAG இலங்கையில் பணியாற்றுவதுடன், கண்ணிவெடி பாதிப்பிலிருந்து நாட்டை விடுவிடுப்பதற்காக பங்களிப்பு வழங்குகின்றது. நாட்டின் எட்டு மாவட்டங்களில் 1,000க்கும் அதிகமான ஊழியர்களை பணிக்கமர்த்தியுள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து இந்த முக்கியத்துவம் வாய்ந்த, தொடர்ச்சியான ஆதரவை பெற்றுக் கொள்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், இலங்கை கண்ணிவெடி பாதிப்பிலிருந்து விடுபடும் வரை எமது பங்காண்மை தொடரும் என எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

HALO Trust இன் நிகழ்ச்சி முகாமையாளர் ஸ்டீபன் ஹோல் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜப்பானிய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கும் ஆதரவுக்காக HALO Trust நன்றி தெரிவித்துக் கொள்கின்றது. எமது நீண்ட கால ஆதரவளிக்கும் நன்கொடை வழங்குநராக அமைந்திருப்பதுடன், 21 வருட காலமாக இலங்கையின் வடக்கு பகுதியில் மனிதநேய உதவி விடுவிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆதரவளித்துள்ளது.

இதுவரையில் HALO இனால் 283,000 கண்ணிவெடிகளை இனங்கண்டு அழிப்பதற்கு உதவியுள்ளதுடன், 117 km2 பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்கவும் முடிந்துள்ளது. இதனூடாக 280000 உள்ளக இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்த்த முடிந்துள்ளது.

இவ்வாறு குடியமர்த்தப்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் உறுதியான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் ஜப்பானின் நிதியுதவி ஏதுவாக அமைந்துள்ளது.

HALO Trust மற்றும் இதர மூன்று கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவினூடாக, 2028 ஜுன் 1ஆம் திகதியளவில் கண்ணிவெடி தாக்க பாதிப்பில்லாத இலங்கையை கொண்டிருப்பது எனும் இலங்கை அரசாங்கத்தின் இலக்கை நெருங்குவதற்கு உதவியாக அமைந்துள்ளது” என்றார்.