இந்தியா - இலங்கை மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம்
இந்தியா – இலங்கை மன்றத்தின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர்கள் 10 பேர் அடங்கிய குழு ஒன்று டிசம்பர் 09 முதல் 15 ஆம் திகதி வரை இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. முன்னதாக கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்களுக்கும் இந்தியாவின் சனாவர் லோரன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் ஒன்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விஜயத்தின் போது இலங்கை மாணவர்கள் அபீஜே பாடசாலையின் (Apeejay School) ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்திருந்தனர். அவர்களால் யோகா, பகிரங்க உரையாடல்கள் மற்றும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆகியவை தொடர்பான சிறந்த விடயங்கள் பகிரப்பட்டன.
இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகியவை தொடர்பான செயன்முறைப் பயிற்சிகளிலும் இம்மாணவர் குழாம் கலந்துகொண்டது. அத்துடன் STEM ரோபோ முறைமை, 2D-3D அச்சிடுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய விடயங்கள் தொடர்பாக கற்பதற்கான சந்தர்ப்பமும் உருவாகியிருந்தது.
டில்லியில், யுனெஸ்கோவால் உலகப்பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு விஜயம் செய்ததன் மூலமாக அவர்கள் வரலாற்று தலங்கள் குறித்த அறிவையும் பெற்றிருந்தனர்.
இந்திய மாணவர்களின் வீடுகளுக்கு சென்றதன் பயனாக இந்திய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையினை அறிவதற்கும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கலாசார நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் இரு நாடுகளினதும் கலாசாரங்களை காண்பித்திருந்தனர்.
நட்புறவின் பிணைப்பினை மேலும் வலுவாக்கும் வகையில் இரு பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்ட போட்டிகளுடன் இந்த மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.
காலி மற்றும் கண்டியை சேர்ந்த பாடசாலைகளையும் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான பேச்சுக்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இளைஞர் பரிமாற்ற திட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் அதேசமயம் கலாசார, கல்வி மற்றும் மக்களிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றது.
Comments (0)
Facebook Comments (0)