பதவி நீக்கியமைக்கு எதிராக பெளஸி உயர் நீதிமன்றில் வழக்கு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட உபதலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.பெளஸி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக இன்று உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஏ.எச்.எம்.பெளஸி தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு உறுப்பினர்கள் என்போர் உட்பட 13 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான ஏ.எச்.எம்.பெளஸி அமைச்சராகவும், சிரேஷ்ட அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த கால நல்லாட்சி அரசாங்கம் பிளவுபட்டபோது அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தார். இதனையடுத்து அவர் கட்சியின் விதிகளை மீறியமைக்காக ஒழுக்காற்று குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெறவிருந்த நிலையில் அங்கு செல்வதற்கு மறுப்புத் தெரிவித்தார். பொதுவான ஒரு இடத்திலான விசாரணைகளுக்கே தன்னால் சமுகமளிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அவரை அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கியுள்ளதாக கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்தே தனது பதவி நீக்கத்துக்கு எதிராக அவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)