ஜம்இய்யதுல் உலமாவின் கடித தலைப்பில் போலிப் பிரச்சாரம்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கடித தலைப்பில் போலியான பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்படுவது தெரியவந்துள்ளது.
"முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இனவாத பிரச்சாரத்திற்கு எதிரான கண்டனம்" எனும் தலைப்பிலேயே இந்த போலிப் பிரச்சாரம் இடம்பெறுகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவரான ஏ.சீ. அகார் முஹம்மத்தினை மேற்கோள்காட்டி போலியான இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகமதிகமாக பரப்பப்டுகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை போன்று போலியாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை தெரிவித்து வருவதும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வெறுக்கத்தக்க விடயமாகும்.
முக்கியமாக முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று பெரும்பான்மை சமூகத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களுக்கு பேராப்பத்தை ஏற்படுத்தும்.
ஆகவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதை வண்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடாமல் இருக்கும் படி வேண்டிக்கொள்கின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிடப்படும் அனைத்து உத்தியோகபூர்வ அறிக்கைகளும் அதன் இணையத்தளம், உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய பக்கங்களில் பதிவேற்றப்படுவது வழமையாகும்.
எனினும் இந்த ஊடக அறிக்கை மேற்குறிப்பிட்ட எந்தவொரு உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டவில்லை. இதன் காரணமாக குறித்த ஊடக அறிக்கையின் உண்மைத் தன்மையினை அறிய விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் முயற்சித்தனர்.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முகாமையாளர் அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.பர்ஹானை விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் தொடர்புகொண்டு வினவிய போது "குறித்த ஊடக அறிக்கை போலியானது" என்றார்.
குறித்த போலிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் எந்தவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
* உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர்வதை தவிர்ப்போம்.
Comments (0)
Facebook Comments (0)