வக்பு சபையினால் பள்ளிவாயல்களின் சொத்துக்கள், ஆவணங்கள் திரட்டல்

வக்பு சபையினால் பள்ளிவாயல்களின் சொத்துக்கள், ஆவணங்கள் திரட்டல்

பள்ளிவாயல்களின் சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை திரட்டும் நடவடிக்கையில் வக்பு சபை ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பணிப்பாளரான ஏ.பீ.எம். அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பள்ளிவாயல்கள் எதிர்நோக்கும் பல்வேறு சட்டப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுள் மிகப் பிரதானமானது  பள்ளிவாயல்கள் அமைந்துள்ள காணி உட்பட பள்ளிக்குச் சொந்தமான அசையா சொத்துகளை உத்தரவாதப்படுத்தும் சட்டமுறையான  ஆவணங்கள் காணப்படாமையை குறிப்பிடலாம்.

இவ்வகையில் வக்பு சபையின் வழிகாட்டலின் கீழ் பள்ளிவாயல்களின் அசையாச் சொத்துக்கள் பற்றிய கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,350 பள்ளிவாயல்களுள், 1,683 மாத்திரமே இதுவரையில் தகவல்கள் வழங்கி பதிலளித்துள்ளன.  

ஏனைய பள்ளிவாயல்கள் தமது தகவல்களை தருவதில் தயக்கம் காட்டுகின்றன. அத்துடன் தகவல் தந்த 99 பள்ளிவாயல்களில் உறுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் 142 பள்ளிவாயல்களில் எந்தவித உறுதியும் இல்லை என அறியக் கிடைத்துள்ளது. 

மேலும் 48 பள்ளிவாயல்கள் காணி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிய வருகிறது. இந்த வகையில் மொத்தம் 289 பள்ளிவாயல்கள் தமது அசையா சொத்துக்களின் உரிமையை ஆவணப்படுத்த வேணடிய நிலையிலுள்ளன" என்றார்.

இதேவேளை, வக்பு சபையின் சட்ட அலுவலர் இப்பள்ளிவாயல்களின் ஆவணப்படுத்தலுக்கான ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.