4/21 அறிக்கை மீதான விவாதம்: முஸ்லிம் எம்.பி.க்கள் அக்கறை காட்டவில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக விவாதம் இடம்பெற்று வரும் நிலையில் இவ்விவாதத்தில் பங்கேற்று உரையாற்றவோ, முஸ்லிம் சமூகம் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்துவதற்கோ முஸ்லிம் எம்.பி.க்களில் கணிசமானோர் அக்கறை காட்டவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் நேற்றைய தினமும் ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது. இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் இந்த விவாதம் தொடரவுள்ளது. எனினும் கடந்த இரு நாட்கள் நடைபெற்ற விவாதங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா மற்றும் மரிக்கார் ஆகியோர் மாத்திரமே உரையாற்றியுள்ளனர்.
அது மாத்திரமன்றி இவ்விவாதம் இடம்பெற்ற வேளையில் முஸ்லிம் எம்.பி.க்களில் பெரும்பான்மையானோர் சபையில் கூட இருக்கவில்லை என எமது பாராளுமன்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதிகள் இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. அவை சபையில் உறுப்பினர்களின் மேசைகளின் மீது வைக்கப்பட்டிருந்தன. துரதிஷ்டவசமாக அரைவாசிக்கும் மேற்பட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் குறித்த அறிக்கையின் பிரதிகளைக் கூட திறந்து பார்க்கவில்லை என்றும் நீண்ட நாட்களாக குறித்த அறிக்கைகள் மேசைகளிலேயே இருந்ததாகவும் பிரமுகர் ஒருவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் மூன்றாவது நாளாக விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாவது ஆணைக்குழு அறிக்கையை முன்வைத்து சமூகத்தின் சார்பில் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vidivelli
Comments (0)
Facebook Comments (0)