உலகின் பாராட்டுக்களை பெற்றுள்ள அமைச்சர் ஆல் ஷைக்கின் பணிகள்
இலங்கை அல் ஹிக்மா நிறுவனம் 2024 இல் சவூதி அரேபிய அமைச்சர் ஆல் ஷைக்குக்கு "உலகின் முன்மாதிரி மிக்க அமைச்சர்" என்ற உயர் விருதும், ஹாஜிகளுக்கு அமைச்சர் அளித்துவரும் சேவைகளைப் பாராட்டி மற்றொரு கௌரவ விருதும் வழங்கி கௌரவித்துள்ளது
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்றும் அழைப்பு வழிகாட்டல் அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக், அந்நாட்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய விவகார மற்றும் வழிகாட்டல் அமைச்சராகத் திகழ்கிறார்.
இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவூதி மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஏழு வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய விவகார மற்றும் அழைப்பு வழிகாட்டல் அமைச்சராக இவரை நியமித்தார். இவர் தனது அமைச்சுப் பொறுப்பை திறம்பட மேற்கொண்டதால் அவருடைய பதவிக்காலம் முடிந்தும் சவூதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரால் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டார்.
சவூதி பிரபல்யமானதும், அந்நாட்டின் பாரம்பரிய, ஸ்தாபக, ஆரம்ப மன்னர்களுக்கு ஆட்சியமைக்க அரும் பாடுபட்ட, புனித தீனுல் இஸ்லாத்தை தூய வடிவில் போதித்த, மிகச் சிறந்த ஆல் ஷைக் பரம்பரையில் வந்தவர் தான் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக், இஸ்லாமிய அறிவில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், சவூதியின் முக்கிய பல பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு புனித தீனுல் இஸ்லாத்திக்கும் உலகலாவிய முஸ்லிம்களுக்கும் சவூதிக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்து வருகிறார்.
அதன் விளைவாக உள்நாடட்டிலும் சர்வதேச மட்டத்திலும் என அரச மற்றும் சர்வதேச அமைப்புகளால் விஷேட விருதுகள் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக "2025 இன் உலகில் மிகச் செல்வாக்கு மிக்க ஆளுமையான மனிதர்" என்ற விருதை தாய்லாந்து அரசாங்கம் வழங்கிக் கௌரவித்தது. எகிப்து நாட்டிலும் இவருக்கு உயரிய விருது வழங்கப்பட்டது.
இலங்கையின் அல் ஹிக்மா நலன்புரி நிறுவனம், 2024 இல் அமைச்சர் ஆல் ஷைக்கின் சேவைகளைப் பாராட்டி "முன்மாதிரி மிக்க அமைச்சர்" என்ற கெளரவ விருதை வழங்கி கௌரவித்துள்ளது. சவூதி அரேபியாவிலுள்ள அமைச்சின் தலைமை அலுவலகத்தில் அமைச்சரை நேரில் சந்தித்த நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி ஷைஹுத்தீன் இவ்விருதை அமைச்சருக்கு வழங்கி வைத்ததோடு புனித ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்ற மக்கா, மதீனா வரும் யாத்திரிகர்களுக்கு அமைச்சர் தலைமையில் அளிக்கப்பட்டுவரும் அளப்பரிய சேவைளைப் பாராட்டியும் கடந்த ஹஜ்ஜின் போதும் மற்றொரு விருதையும் அவர் வழங்கி கௌரவித்தார்.
இலங்கையின் ஹிக்மா நிறுவனம் ஒரே வருடத்தில் இரண்டு தடவைகள் அமைச்சருக்கு விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவிலும் இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பயங்கரவாத ஒழிப்பு மத நல்லிணக்கம் சகிப்புத் தன்மை போன்றவற்றில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், மாநாடுகள் நடாத்தி அதில் வெற்றி கண்டவர் அமைச்சர் அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக்.
அதே போன்று தேசிய, சர்வதேச மட்டத்தில் அல் குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா போட்டிகளை மிகச் சிறப்பாக நடாத்தி குர்ஆன், ஸுன்னா பக்கம் மக்களை ஈர்க்கச் செய்வதிலும் அவர் வெற்றி கண்டவராவார்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் இந்தியப் பிராந்திய இஸ்லாமிய விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் அல் அனஸி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இலங்கையில் அல் குர்ஆன் மனனப் போட்டிகள் இரு தடவைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இப்போட்டி இலங்கையில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இலங்கையில் அவரது நேரடி கண்காணிப்பில் மன்னர் சல்மானின் பெயரில் இப்தார், உலர் உணவு பொதிகள், பேரீச்சம் பழ விநியோகம் போன்ற சமூக நலப் பணிகளையும் அவர் வருடா வருடம் முன்னெடுத்து வருகிறார்.
சவூதி அரேபிய பத்வா மன்றத்தின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட அறிஞர்கள் பேரவையின் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கும் அமைச்சர், மன்னர் சல்மான் - ரியாத் அமீராக இருந்த போது அவரது பிரத்தியேக ஆலோசகராகப் 13 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
நன்மையை ஏவித் தீமையத் தடுக்கும் அதிகார சபையின் அமைச்சர் அந்தஸ்துள்ள பொதுத் தலைவர், இஸ்லாமிய விவகார மற்றும் அழைப்பு வழிகாட்டல் அமைச்சர் என பல முக்கிய பதவிகள் வகித்து சேவையாற்றக்கூடியவராக இவர் விளங்குகிறமை குறிப்பிடத்தக்கது.
அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் (மதனி, பீ.ஏ)
பணிப்பாளர் - அல் ஹிக்மா நலன்புரி நிறுவனம்
கொழும்பு
Comments (0)
Facebook Comments (0)