தேர்தல் முடிந்தவுடன் கல்முனைக்கே எனது முதல் படையெடுப்பு: ஞானசார தேரர்

தேர்தல் முடிந்தவுடன் கல்முனைக்கே எனது முதல் படையெடுப்பு: ஞானசார தேரர்

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் கல்முனைக்கே எனது முதல் படையெடுப்பு என எமது மக்கள் சக்தி கட்சியின்  இணைத் தலைவரும் பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழர் பிரதேச செயலகத்தினை உருவாக்க தமிழர்களுக்கு நான் கைகொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை என்பது முற்று முழுதாக அராபிய தேசம் போன்று உள்ளது. அது முஸ்லிம்களின் கலாசாரம் என்பதனால் அதை நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் தமது கலாசாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க முடியாது என அவர் கூறினார்.

தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்திசெய்து கொடுக்கக் கூட கல்முனை பிரதேச சபை செயற்படுவதில்லை. கல்முனை வடக்கில்  முஸ்லிம்கள் வாழும் பகுதிகள்  மாளிகைகள்  போன்றும் தமிழர்கள் வாழும் பிரதேசம் பாதாளம் போன்றும் காட்சியளிக்கின்றது, தேர்தல் முடிந்தவுடன் எனது முதல் பயணம் கல்முனைக்கே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் வழங்கிய செவ்வியின் முழுமை:

கேள்வி:- கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன்  உங்களின் செயற்பாடுகளுக்கு அவசியம் இருக்காது என்றீர்கள், இப்போது மீண்டும் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன?

பதில்:- நாம் அரசாங்கம் ஒன்றினை உருவாக்கவில்லை, பெரும்பான்மை சிங்கள மக்களினதும் நாட்டினை நேசிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தமிழ் மக்களின் வாக்குகளில் நாட்டிற்கு ஒரு தலைவரை உருவாக்கிக்கொண்டோம்.

அத்துடன் நிறுத்திக்கொள்ளாது இந்த நாட்டின் பிரச்சினைகளை முறையாக தீர்க்கக்கூடிய, நாடு வீழ்ச்சி கண்ட இடத்தில்  இருந்து மீட்டெடுக்கும் மற்றும் நாட்டினை நேசிக்கும் அரசாங்கம் ஒன்றினை உருவாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்பினோம்.

ஆனால் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிடும் நபர்களை பார்த்தவுடன் எமக்கு அந்த நம்பிக்கை போய்விட்டது. அதே பழைய மோசடிக்காரர்களும், பாராளுமன்றத்தை நாசமாக்கிய அதே குழுக்களே மீண்டும் இணைந்துள்ளது. இவ்வாறான ஒரு குழுவைக் கொண்டு நாட்டினை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.

அரசியல்வாதி என்பவர்கள் நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், அவ்வாறான நபர்கள் பாராளுமன்றத்தில் இல்லாத காரணத்தினால் தான் இந்த நாடே வீழ்ந்துள்ளது. மக்கள் பாதாளத்தில் வீழ்ந்துள்ள்ளனர், அரசியல் வாதிகள் போசாக்காக உள்ளனர்.

இது ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் அல்ல, இந்த கலாசாரத்தை மாற்றி இந்த நாட்டிற்கான அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்க வேண்டும், அதற்காகவே நாம் தேர்தலில் களமிறங்க தீர்மானம் எடுத்துள்ளோம்.

கொடி சின்னத்தில் பொதுத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம், இதன்போது எமக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்தாலும் அது எமக்கு கிடைத்த வெற்றியாகும், அந்த ஒருவரைக் கொண்டு எம்மால் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.

கேள்வி:- அப்படியென்றால் ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லையா?

பதில்:- இல்லை, அரசியல் வாதிகளை நம்பியே நாடு நாசமாகியுள்ளது. ஒரு தலைவரை உருவாக்கியவுடன் நாடு சகல விதத்திலும் மீண்டுவிடும் என கருத முடியாது. ஜனாதிபதிக்கு ஏற்ற அரசாங்கம் அமைய வேண்டும். இப்போது இருப்பவர்களை கொண்டு அவ்வாறான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க முடியும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி:- இந்த அரசாங்கதின் பயணம் ஜனநாயகத்திற்கு எதிரானதாக மிகப்பெரிய குற்றச்சாட்டொன்று தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது, நீங்கள் இந்த அரசாங்கத்தின் பயணத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- இந்த நாட்டின் இராணுவம் மனிதாபிமானமான இராணுவம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். யுத்தத்தை கையாண்டதை போல் நிருவாக செயற்பாடுகளில் செயற்படுவார்கள் என கூற முடியாது. கற்ற, ஒழுக்கமான, தூரநோக்கு  சிந்தனை கொண்ட நபர்கள் இராணுவத்தில் உள்ளனர்.

மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இராணுவத்தின் மீது நம்பிக்கை உள்ளது, தமிழ் மக்களுக்கும் இராணுவம் மீது  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாது அரசியல்வாதிகளின் ஊழலில் நாசமாக்கப்பட்டுள்ள அரச  நிறுவனங்களை மீட்டெடுக்க இராணுவத்தை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

கேள்வி:- இராணுவ ஆட்சியின் பக்கம் பயணித்தால் அது ஜனநாயகத்திற்கு பாதகமாக அமையுமே?

பதில்:- இராணுவமும் மனிதர்களே, விடுதலைப்புலிகளை அழிக்காது நாட்டினை மீட்காது இருந்திருந்தால் அது ஜனநாயகமாகியிருக்குமா. முப்பது ஆண்டுகள் யுத்தத்தில் தமிழர்கள் எதனை பெற்றுக்கொண்டனர், சிங்கள மக்கள் சாதித்தது என்ன.

முப்பது ஆண்டுகள் இந்த நாடு சகல விதத்திலும் நாசமாக்கப்பட்டு பின்னோக்கி பயணித்ததை தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை. இந்த யுத்தம் எமக்கு பல படிப்பினையை கற்றுக்கொடுத்துவிட்டது.

இன்னொரு யுத்தத்தை இந்த நாடு சந்திக்கக்கூடாது, அவ்வாறான அமைதியான நிலைமை ஒன்று இருக்க வேண்டுமென்றால் இராணுவத்தின் கைகளில் நிருவாகம் இருப்பதில் தவறில்லை என நான் நினைக்கிறேன்.

கேள்வி:- தமிழர்களின் பிரச்சினைகள் என நீங்கள் எதனை கருதுகின்றீர்கள்?

பதில்:- தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினையை தீர்க்க முன்வந்த தமிழ் தலைவர்கள் யார் உள்ளனர் என எனக்கு தெரியவில்லை. ஒரு சில உண்மையான தலைமைகள் இருக்கலாம் ஆனால் தமிழர்களின் தலைவர்கள் என கூறும் எவருமே அப்பாவி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்க்க நினைக்கவில்லை.

தமிழர்களை ஒரு தேசிய இனமாக நாம் கருதுகின்றோம் ஆனால் தமிழ் தலைமைகள் அவ்வாறு கருதவில்லை. தமிழ் மக்கள் எமது மக்கள், தமிழ் மக்களை இலங்கை இனமாக சிந்திக்க இடமளித்தால், இந்த மன்னின் சொந்தக்காரர்கள் என அங்கீகரிக்க இடமளிக்கப்பட்டால் இத்தனை ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

ஆனால், தமிழ் தலைமைகளே தமிழ் இனத்தை தேசிய இனமாக அங்கீகரிக்க இடமளிக்காது கிடைக்காத  ஒன்றை நோக்கி அவர்களை கொண்டு செல்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஈழவாதிகள் உண்மையில் தமிழர்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்கின்றனர்.

உண்மையான பிரச்சினையை மூடி மறைத்து இல்லாத ஒரு பிரச்சினையை தூண்டி விடுகின்றனர். தமிழ் தலைமைகள் மட்டுமல்ல சிங்கள தலைவர்களும் அதனையே செய்து வருகின்றனர்.

வடக்கிலும் கிழக்கிலும் நிருவாக பிரச்சினையே உள்ளது. அதற்கு முதலில் சிங்கள தமிழ் மக்களை கலாசார ரீதியில் ஒன்றிணைய இடமளிக்க வேண்டும். தமிழர்கள் மத்தியில் சிங்களவர்களையும், சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களையும் பிரிக்கும் அரசியல் கலாசாரம் கைவிடப்பட்டால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு என்றோ கிடைத்திருக்கும்.

கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு சிங்களவர்களால் ஏதும் பிரச்சினை ஏற்படுகின்றதா, அப்படியென்றால் வடக்கு கிழக்கில் மட்டும் ஏன்  அந்த அச்சம் ஏற்பட்டது. சரி அதிகார பகிர்வுதான் தமிழர்களின் பிரச்சினை என்றால் நாட்டை துண்டாடிக் கொடுத்துவிட்டால் அணைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடுமா.

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளின் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு இருந்ததில் வடக்கு கிழக்கிற்கு கிடைத்த அபிவிருத்தி வேலைத்திட்டம் ஏதேனும் ஒன்றினை கூற முடியுமா? ஒரு பாதணி தொழிற்சாலையேனும் உருவாக்கி தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாகிக்கொடுக்க முடிந்ததா.

அரசியல்வாதிக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே அதிகார பகிர்வை கேட்கின்றனர் அதிகார பகிர்வு மூலமாக சாதாரண மக்களுக்கு அதிகாரம் கிடக்க்கப்போவதில்லை.

கேள்வி:- அப்படியென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழர்களை ஏமாற்றுகிறார்களா?

பதில்:- நிச்சயமாக தமிழர்களை ஏமாற்றுவது தமிழ் தலைமைகளே. பிரபாகரம் என்ன செய்தாரோ அதனையே இன்றும் தமிழ் தலைமைகள் செய்ய நினைக்கின்றனர். இதனால் பாதிப்பு தமிழ் மக்களுக்கே.

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அதற்கு எதிராக என்றாவது ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா. வடக்கு மக்களுக்கும் வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி என சகலதும் கிடைக்க வேண்டும் என்றே நாமும் கூறுகின்றோம்.

மக்களுக்கு நல்லதை கொடுங்கள் என சிங்கள மக்கள் கூறினாலும் அது வேண்டாம் நாட்டினை துண்டாடுங்கள் என கூறுவதில் நியாயம் உள்ளதா. வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான பிரச்சினைகள் பல உள்ளன, அவர்களின் பிரதான பிரச்சினை என்ன என்பது எமக்கு நன்றாக தெரிகின்றது.

ஆனால் வடக்கு கிழக்கில் தமிழர்களின் தலைவர்கள் என கூறிக்கொள்ளும் நபர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளனர்.

கேள்வி:- தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கவென ஜனாதிபதி நியமித்துள்ள செயலணி  சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளை செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- கிழக்கில் என்ன நடந்து வருகின்றது என்பது தமிழர்களுக்கு தெரியுமா, தமிழர்களின் நிலங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றது என்பது குறித்து நீங்கள் அறிவீர்களா, நான் ஒன்றை மட்டுமே கூறுவேன், ஜனாதிபதி செயலணி அமைத்தாலும் இல்லாவிட்டாலும் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நான் கிழக்கின் கல்முனை தமிழர் பகுதிகளுக்கு வருவேன்.

சிங்கள மக்களை போன்றே பெரும்பான்மை தமிழ் மக்களின் நிலங்களும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதனை எதிர்க்கு தமிழ் மக்களுடன் இணைந்து நாம் போராடுவேன். குறிப்பாக முஸ்லிம் ஆக்கிரமிப்பில் நசுக்கப்பட்டு அழிந்துகொண்டுள்ள தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நான் அங்கு போராட்டத்தை ஆரம்பிப்பேன்.

தமிழ் மக்கள் அங்கு படும் வேதனைகளை நான் பார்த்தேன். என்னால் இவற்றை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தேர்தல் முடிந்தவுடன் எனது முதல் பயணம் கல்முனைக்கே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கேள்வி:- கல்முனை வடக்கு பிரதேசபை விடயத்தில் நீங்கள் அவதானித்தது என்ன?

பதில்:- முஸ்லிம் வாக்குகள் சிலவற்றை தக்கவைத்துக்கொள்ள அங்கு தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கல்முனை என்பது முற்று முழுதாக அராபிய தேசம் போன்று உள்ளது.

அது முஸ்லிம்களின் கலாசாரம் என்றால் அதை நாம் விமர்சிக்கவில்லை, ஆனால் தமது கலாசாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எதற்காக தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க வேண்டும். முழுமையாக இனவாத மதவாத கொள்கையில் மாத்திரமே அங்கு அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகள்  மாளிகைகள்  போன்றும் தமிழர்கள் பாதாளத்தில் வாழ்வது போன்றும் காட்சியளிக்கின்றது. தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை செய்து கொடுக்கக்கூட கல்முனை பிரதேசசபை செயற்படுவதில்லை. தமிழர்கள் முற்று முழுதாக அழுத்தங்களை சந்தித்து வருகின்றனர்.

இதன் உள் நோக்கம் ஒன்றும் உள்ளது, இவ்வாறான அழுத்தங்களை கொடுத்து ஒன்று "தமிழர்களை முஸ்லிம்களாக மாற்றுவது அல்லது தமிழர்களை அவர்களின் பூமியில் இருந்து அகற்றி முஸ்லிம் பகுதியாக மாற்றுவது. இந்த உள்நோக்கத்தில் தான் அங்கு சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றது".

கேள்வி:- இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்க உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா?

பதில்:- நான் அங்கு பார்த்தவற்றை கூறுகின்றேன், கிழக்கில் எத்தனை தமிழர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர், ஒரு இனத்தின் கலாசாரமே அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களின் கலாசாரம் நாசமாக்கிக்கொண்டுள்ளது.

அதற்கு எதிராக எவரேனும்  தமிழ் அரசியல் தலைவர்கள் பேசியுள்ளனரா. முஸ்லிம், கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு இலக்காகி எத்தனை  தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரியமா.

தமிழ் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்களை எந்த தமிழ் தலைவரேனும்  தட்டிக்கேட்டுள்ளாரா. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்க தமிழ் தலைமைகளுக்கு வெட்கமாக இல்லையா. தமிழ் தலைவர்கள் கிழக்கிற்கு அஞ்சலாம் ஆனால் நாம் அஞ்ச மாட்டோம்.

தமிழர்களை கைவிடவும் மாட்டோம். இந்த பிரச்சினைக்கு நான் தீர்வு காண்பேன். தமிழர் பிரதேசசபை  ஒன்றினை உருவாக்கும் அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு நான் கை கொடுப்பேன்.

கேள்வி:- இதுவொரு  இனவாத செயற்பாடாக முஸ்லிம் தரப்பால் நோக்கப்படுகின்றதே?

பதில்:- நாம் எந்த இனவாத கொள்கையிலும் செயற்படவில்லை, தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்க்க எப்போதுமே எமது ஆதரவை நாம் பெற்றுக்கொடுப்போம்.

சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை நாம் குறைப்போம். இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றாக கைகோர்த்து நாட்டினை கட்டியெழுப்ப முடியும். ஆனால் அதனை அடிப்படைவாதம் தடுக்கின்றது.

இம்முறை தேர்தலில் கிழக்கு தமிழர்கள் எமக்கு ஆதரவு வழங்குங்கள், சந்தேகம் எதுவும் இல்லாது எம்மை ஆதரியுங்கள். நீங்கள் தமிழ் தலைவர்களை நம்பி ஏமாந்தது போதும். தமிழர்களின் தலைவர்கள் என கூறிக்கொண்டு தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாக கூறும் நபர்கள் கூறியதை தாண்டியும் நாம் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்போம்.

நம்பிக்கை தான் எமக்கிடையில் இருக்கும் பாலமாகும். புத்த பெருமானும் அதனைத்தான் கூறியுள்ளார். தமிழர், சிங்கள  மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல உறவுமுறை இருந்துள்ளது.

அராபிய வஹாபி வாத கொள்கையாளர்கள் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் மக்களும் தமிழ் சிங்கள மக்களுடன் நல்லுறவை கையாண்டனர். ஆனால் அரசியல்வாதிகளே இதனை மாற்றினர்.

இந்துக்கள் விடயத்தில் இந்து மதத் தலைவர்கள் இனியும் அமைதியாக இருந்து இறைவனை வணங்கிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. தமிழ் இனம் அழிந்து வருகின்றது, இந்து மக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனை வேடிக்கை பார்த்துகொண்டு இறைவனிடம்  மன்றாடி எதுவுமே கிடைக்கப்போவதில்லை. தமிழர்களின் உணர்வுகளை பாருங்கள், தமிழர்கள் மீண்டெழும் சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். நாம் அதனை விரும்புகின்றோம். தமிழர்களுக்கு எதிரான சகல பிரச்சினைகளில் இருந்தும் தமிழர்களை மீட்க நாம் முன்வருவோம் என்பதை மனதில் பதித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கேள்வி:- உங்களின் இந்த கடும்போக்கு செயற்பாடுகள் காரணமாகத்தானே கடந்த ஆட்சிக்காலத்தில் உங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, இப்போது மீண்டும் அதே கொள்கையை கையில் எடுப்பதை அரசாங்கம் அங்கீகரிக்குமா?

பதில்:- அரசாங்கம் என்பது கடவுள் அல்ல. இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து இந்த நாடு பிடுங்கப்படுகின்றது என்றால் அதனை வேடிக்கை பார்க்க வேண்டுமா. இந்த நாட்டையும் நாட்டின் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. அதில் இந்த அரசாங்கம்  யாருடையது, யார் ஆட்சியாளர்கள் என்பது எமக்கு அவசியமில்லாத விடயம்.

கேள்வி :- ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் வேலைத்திட்டத்தில் நீங்களும் ஒரு சூத்திரதாரி என்ற கருத்தொன்று நிலவுகின்றது, அது உண்மையா?

பதில்:- இல்லை, நான் எந்த ஆட்சியாளரையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை, ரணில் மைத்திரி ஆட்சியிலும் கூட நான் ஐக்கிய தேசிய கட்சி அடியாள் என்றார்கள். என்னை பொறுத்தவரையில் இந்த நாட்டிற்கு எதிராக செயற்படும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அந்த அரசாங்கத்தை வீழ்த்தி மக்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்க என்னாலான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுப்பேன். எனக்கு மக்களின் பலம் உள்ளது, நான் எந்த தலைமையையும் கண்டு அஞ்சும் நபரல்ல. எந்த இனத்தையும் கண்டு அஞ்சும் நபரும் அல்ல.

கேள்வி:- முஸ்லிம்கள் மீதான இந்த கடும்போக்கு கொள்கை உருவாக்க காரணம் என்ன?

பதில்:- நான் கடும்போக்காலன் அல்ல. நான் முஸ்லிம்களை ஒருபோதும் வெறுக்கவும் இல்லை. இந்த நாட்டினை நேசிக்கும் சகல மக்களையும் நாமும் நேசிக்கின்றோம். இந்த நாட்டினை எதிர்க்கும், நாசமாக்க நினைக்கும், மக்களை நாசமாக்க நினைக்கும் சகலரையும் வெறுக்கின்றோம்.

இன்று சிங்கள தமிழ் இனங்கள் இந்த நாட்டிலேயே பாரிய அழிவை சந்தித்து வருகின்றனர். அது யாரால்  எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது எமக்கு நன்றாக தெரிந்ததே. வஹாபி வாதத்திற்கு இந்த நாட்டில் இடமளிக்கக்கூடாது.

ஈஸ்டர் தாக்குதல் ஒன்று இந்த நாட்டுக்கு அவசியமா? மதமாற்றம் இந்த நாட்டில் இடம்பெற வேண்டுமா? மத்திய கிழக்கின் கீழ்த்தரமான செயற்பாடுகள் இந்த நாட்டில் அரங்கேற வேண்டுமா என்ற கேள்விகள் எம்மத்தியில் எழுந்துள்ளது.

அதற்கு விடை தேடி பயணித்துக்கொண்டுள்ளோம். அப்புறப்படுத்த வேண்டிய விடயங்களை அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றோம். அதில் எவர் மனதும் புண்படுத்தப்படுகின்றது  என்றால் அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல.

இந்த நாட்டினை அமைதியாகவும் அழகாளவும் சிங்கள பெளத்த கொள்கையில் மூவின மக்களையும் அமைதியாக வாழ இடமளிக்கும் நாடாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

நேர்காணல் :- ஆர் .யசி
படப்படிப்பு :- ஜே.சுஜீவகுமார்