இலங்கையின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதில்லை: உயர் ஸ்தானிகர்
இலங்கையின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதில்லை
ஜனாஸா அடக்கம், நிகாப் விடயங்களில் எமது கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் கிடைத்தன
நிகாப் தடை அறிவிப்பு பாகிஸ்தானின் ஆதரவு திரட்டும் நடவடிக்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது
சமூகத்தின் நலன்களுக்காக ஆட்சியிலுள்ளவர்களுடன் ஓத்துழைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இம்ரான் கான் முஸ்லிம் எம்.பிக்களுக்கு அறிவுரை வழங்கினார்
இரண்டு தலைவர்களையும் பிரதமர் இம்ரான் கான் தனித் தனியாக சந்தித்து பேச்சு நடத்திய போது கொவிட் - 19 இனால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
நேர்காணல்: எம்.பி.எம். பைறூஸ், றிப்தி அலி
"இலங்கையின் நீண்ட கால நட்பு நாடான பாகிஸ்தான் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து வருகின்றது. பாகிஸ்தான் ஒருபோதும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட்டதில்லை.
கொவிட் 19 ஜனாஸா அடக்கம் விடயத்தில் எமது பிரதமர் இம்ரான் கான் தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியுடனும் பிரதமருடன் தனித்தனியே பேச்சு நடத்தினார். அதேபோன்றுதான் நிகாப் தடை குறித்த அறிவிப்பு வந்ததும் நாம் எமது கரிசனையை இலங்கை அரசுக்கு வெளிப்படுத்தினோம்.
அந்த வகையில் இலங்கை அரசாங்கம் இந்த விவகாரங்களில் சாதகமான பதில்களைத் தந்தமை மகிழ்ச்சியளிக்கிறது" என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்தார்.
விடிவெள்ளி மற்றும் விடியல் இணையத்தளம் ஆகியவற்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உயர்ஸ்தானிகருடனான நேர்காணலின் முழு விபரம் வருமாறு:
இலங்கையில் கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பவர்களை பலவந்தமாக தகனம் செய்தமைக்கு எதிராக பாகிஸ்தான் குரல்கொடுத்து வந்தது. இந்த பலவந்த தகனத்தினை இல்லாமலாக்க பாகிஸ்தான் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டது?
இலங்கையின் நீண்ட கால நட்பு நாடான பாகிஸ்தான் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து வருகின்றது. இலங்கை பிரச்சினைகளை எதிர்நோக்கிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாகிஸ்தான் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளது.
இந்த பலவந்த தகனம் தொடர்பில் எமது நாட்டின் கரிசனையினை மரியாதைக்குரிய வகையில் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினோம். எவ்வாறாயினும் இது உள்நாட்டு விவகாரம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கமே தீர்மானிப்பதற்கு விட்டோம்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான விஜயத்தின் போது இந்த கட்டாய தகனமே பிரதான பேசுபொருளாக விளங்கியது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் பேச்சு நடத்தினாரா?
ஆம். இலங்கை விஜயத்தின் போது பிரதமர் இம்ரான் கான் இதற்கு முக்கியத்துவம் வழங்கியதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இரண்டு தலைவர்களையும் பிரதமர் இம்ரான் கான் தனித் தனியாக சந்தித்து பேச்சு நடத்திய போது கொவிட் - 19 இனால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு இரு தலைவர்களும் சாதகமாக பதிலளித்ததுடன் இந்த விடயத்தினை விரைவில் கருத்தில் எடுத்து மீளாய்வு செய்வதாக உறுதியளித்தனர். இதற்கமைய பிரதமர் இம்ரான் கான் நாட்டை விட்டுச் சென்ற 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது ஓர் உணர்வுபூர்வமான விடயம் என்பதால் தூதுக்குழு மட்டத்திலான சந்திப்பில் இந்த விடயம் கலந்துரையாடப்படவில்லை.
நாட்டில் நிகாப் தடை விதிப்பிற்கு எதிராக பாகிஸ்தான் மாத்திரமே குரல் கொடுத்திருந்தது. இதற்கான காரணம் என்ன?
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு தேடும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டிருந்தது.
இந்த காலப் பகுதியிலேயே நாட்டில் நிகாப் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது பாகிஸ்தானின் ஆதரவு திரட்டும் நடவடிக்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது. எனினும் பின்னர் இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான பதிலைத் தந்தது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையின் போது இரண்டு முஸ்லிம் நாடுகள் மாத்திரமே பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக உள்நாட்டில் பேசப்படுகின்றது. இது தொடர்பில் தங்களின் கருத்து என்ன?
இதுவொரு பிழையான கருத்தாகும். ஜெனீவா பிரேரணையின்போது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக எந்தவொரு முஸ்லிம் நாடும் வாக்களிக்கவில்லை.
மாறாக பல முஸ்லிம் நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தன. பாகிஸ்தான் வெற்றிகரமாக அதை ஆதரித்தது. எவ்வாறாயினும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டாய தகன விடயம் ஜெனீவா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பிற்கு சில தினங்களுக்கு முன்னரே நீக்கப்பட்டது. இந்த நீக்கம் சில மாதங்களுக்கு முன்னர் அமுலாகியிருந்தால் மேலும் சில முஸ்லிம் நாடுகள் நிச்சயமாக இலங்கைக்கு ஆதரவு அளிப்பது குறித்து சிந்தித்திருக்கும்.
இலங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் கொண்டுள்ள உறவினை பாகிஸ்தான் எவ்வாறு அவதானிக்கின்றது?
இந்தியா இலங்கையின் பாரிய அண்டை நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியான உறவு காணப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை நாம் பார்க்கின்றோம்.
நல்லெண்ணம், ஒருவருக்கொருவர் ஒருமைப்பாடு இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இரு தரப்பு உறவு காணப்படுவதாக நாம் நம்புகின்றோம். அதுபோன்று இரு நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு இல்லாமல் இருப்பதாகவும் நாம் கருதுகின்றோம்.
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் அபிவிருத்தியின் பங்காளராகவும், நட்பு நடாகவும் கடந்த பல தசாப்தங்களாக காணப்படுகின்றன. அது மாத்திரமல்லாமல், பாகிஸ்தானைப் போன்று இலங்கையும் சீனாவின் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவின் பங்காளராக காணப்படுகின்றது.
இலங்கையின் வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற விடயங்களுக்காக இந்த செயற்திட்டத்தின் ஊடாக அதிகபட்ச நன்மையினை இலங்கை அடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது இலங்கை விஜயத்தின் இறுதி நேரத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை திடீரென சந்தித்தமைக்கான காரணம் என்ன?
பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பும் முன்னரே உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும் நேரப் பற்றாக்குறை, பல எண்ணிக்கையான சந்திப்புக்களின் காரணமாக இந்த சந்திப்பிற்கு பொருத்தமான நேரத்தினை ஒதுக்கீடு செய்வதற்காக பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பணியாற்றிக்கொண்டிருந்தது. இதற்கான சந்தர்ப்பம் கிடைத்த போது கூட்ட நேரம் இறுதி செய்யப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றதே?
இலங்கை தமது நாடு என்ற நோக்குடன் மற்ற சமூகங்களுடன் இணக்கமாக வாழ பிரதமர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். தங்கள் சமூகத்தின் நலன்களுக்காக ஆட்சியிலுள்ளவர்களுடன் ஓத்துழைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். நாட்டு சட்டத்தை மதித்து நாட்டின் அபிவிருத்திக்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும். இதனைத் தான் பாகிஸ்தான் பிரதமரும் கூறினார்.
பிரதமர் இம்ரான் கானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டமைக்கு ஏதேனும் விசேட காரணங்கள் உள்ளனவா?
பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. எனினும் கொவிட் – 19 சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உரை இலங்கை அரசாங்கத்தினால் இரத்துச் செய்யப்பட்டது.
யுத்த காலத்தில் இலங்கைக்கு பாகிஸ்தான் பாரிய உதவியினை வழங்கியது போன்று அடிப்படைவாதத்தினை ஒழிக்கவும் உதவுமா?
அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் எல்லா நாடுகளிலும் சமூகங்களிலும் உள்ளன. பாகிஸ்தானும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படைவாதத்தை ஒருபோதும் இஸ்லாத்துடன் இணைக்கக்கூடாது.
அடிப்படைவாதம் சில நாடுகளால் இஸ்லாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதன் உள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாகிஸ்தான் பாதுகாப்பு ரீதியாக உதவி வழங்கியுள்ளது. அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.
இஸ்லாத்தை ஒருபோதும் தீவிரவாதத்தை போதிக்கும் மதமாக பார்க்கக்கூடாது. அடிப்படைவாதத்திற்கு எல்லைகள் இல்லை. அனைத்து இனங்களிலும் ஒரு குறிப்பிட்ட சில எண்ணிக்கையிலான அடிப்படைவாதிகள் உள்ளனர். நாம் அனைவரும் கூட்டாக இணைந்து அவர்களை நடுநிலைவாதிகளாக மாற்ற முன் வர வேண்டும்.
பௌத்த சுற்றுலா மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பிரபல்யப்படுத்துவதில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அதிக கவனம் செலுத்துவதற்கான காரணம் என்ன?
பௌத்த சுற்றுல்லா மற்றும் கலாசாரத்திற்கான சிறந்த இடமாக பாகிஸ்தான் காணப்படுகின்றது. எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல வருடங்களாக இரு நாடுகளுக்கு இடையில் இந்த விடயம் ஆராயப்படவில்லை. இதுவொரு துரதிஷ்டமாகும்.
எனினும், இரண்டு நாடுகளும் இணைந்து இதனை மேம்படுத்துவதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது. பாகிஸ்தானிலுள்ள பௌத்த சுற்றுலாவினை மேம்படுத்துவதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் கட்டியெழுப்ப முடியும்.
இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு 2021 இன் ஊடாக ஏற்பட்ட நன்மைகள் என்ன?
பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் முக்கிய அம்சமாக இந்த மாநாடு இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவினை மேம்படுத்துவதற்கான தளத்தினை வழங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த மாநாடு காணப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமருடன் 38 முன்னணி வர்த்தகர்களைக்கொண்ட தூதுக் குழுவொன்று இலங்கை வந்தது. இந்த குழுவில் ஆடை, ஜவுளி, மருந்து உற்பத்தி, விவசாயம் உணவு, நிர்மாணம், வாகன உதிரிப்பாகங்கள், பாதணிகள் போன்ற பல துறைகளைச் சேர்ந்தோர் காணப்பட்டனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து வியாபாரிகளிடையே பிரத்தியேகமாக வலையமைப்பொன்றை உருவாக்கும் வகையில் சுமார் 200 கூட்டங்கள் இடம்பெற்றன. இது பாரியளவில் வெற்றியளித்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு வியாபார செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் உயர் கல்வியினை மேற்கொள்வதற்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில்கள் பற்றிக் கூற முடியுமா?
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 இலங்கையர்கள் பாகிஸ்தானில் உயர் கல்வி மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் ஏற்கனவே வழங்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, 100 இலங்கை மாணவர்கள் மருத்துவ துறையில் பாகிஸ்தானில் உயர் கல்வி மேற்கொவதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை பிரதமர் தனது விஜயத்தின் போது வெளியிட்டார். அவரின் விஜயத்தின் ஊடாகவே இவை கிடைக்கப் பெற்றமை விசேட அம்சமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி ரீதியான இராஜதந்திர தொடர்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த 100 புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்தே இந்த புலமைப் பரிசிலிற்கான தெரிவு மேற்கொள்ளப்படும். இவ்வறிவிப்பு விரைவில் விளம்பரப்படுத்தப்படும். இதற்காக அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
இது அனைத்து இலங்கையர்களுக்குமானதாகும். பாகிஸ்தானினால் வழங்கப்படும் புலமைப்பிரிசில் முஸ்லிம்களுக்கு மாத்திரமானது என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறானதாகும். அனைத்து இனத்தவர்களும் பாகிஸ்தானினால் வழங்கப்படும் அனைத்து உதவிகளிலும் உள்ளடக்கப்பட்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.
Comments (0)
Facebook Comments (0)