பட்டம் படுத்தின பாடு; பட்ட பின்னாவது திருந்துவோம்!
கியாஸ் ஏ. புஹாரி
சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று (09) பிற்பகல் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே தாயின் இரு பச்சிளம் பாலகச் சிறுவர்கள் காவுகொள்ளப்பட்ட துக்ககரமான சம்பவம் நம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் அமிழச் செய்துள்ளது.
இந்த நிகழ்வின் பின்னணி குறித்து இன்றைய தினம் பொலிஸ் தடவியல் விசாரணைக் குழு (SOCO) முன்னெடுத்த விசாரணையின் பிரகாரம் குறித்த நிகழ்வு பட்டம் விடும் காட்சியை பார்வையிடச் சென்ற சிறுவர்களே இவ்வாறு 'கொட்டில்' (கிணறு) தவறி விழுந்து மரணித்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நிகழ்ந்த அதே கனம், அதனை கேள்வியுற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபாவை தொடர்புகொண்ட போது,
அவர், மிகவும் கவலை தோய்ந்த நிலையில் “ஆம், இன்று பிற்பகல் இவ்வாறு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உண்மையிலேயே கவலைதரும் விடயம், பெற்றார்கள் பிள்ளைகள் விடயத்தில் மிகவும் கரிசனையெடுக்க வேண்டிய காலம் இது!
விடுமுறைகள் அதிகமான காலகட்டமான இக் கால கட்டத்தில் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் மிகவும் கரிசனையாக செயற்பட வேண்டும். அதே சமயம் இளைஞர்கள், பெரியோர்களும் இவ்வாறான சமூக விடயங்களில் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
எனவே, இதனை செய்தியாக மாத்திரமல்லாது, அறிவுபூர்வமான கருத்தாகவும் வெளியிடுங்கள்.” என்று கூறினார். உண்மையிலேயே வைத்திய அத்தியட்சகர் கூறிய விடயத்தை உற்று நோக்குகையில், கட்டாயம் சிந்திக்க வேண்டிய விடயம் இதுவாகும்.
அதாவது, உலகமே கொரோனா அச்ச நிலையில் இருக்கின்ற காலமான இக் கால கட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவ்வாறு மூடிய நிலையில் எமது மக்களை வீட்டில் இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்த போதிலும், எமது பிரதேசத்தை அண்டிய பல பிரதேசங்களில் மக்கள் திறந்துவிடப்பட்டுள்னர் போலுள்ளது.
இளைஞர்கள் வீதிகளில் கிரிகெட் விளையாடுதல், பெட்மினடன் இவையெல்லாம் மங்கி இப்போது புதிய பொழுதுபோக்காக பட்டம் விடுதல் வைரலாகியுள்ளது. இந்தப் பட்டம் விடும் படலத்தால் பல விதமான இடர்கள் சிறுவர் மத்தியில் ஏற்படவே அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
அந்நார்ந்து பார்த்துக் கொண்டு அப்படியே நகரும் தருணம் தவறினால் தாழிக்குழமும் விளங்காது என்பதை இச் சம்பவம் உணர்த்தி நிற்கின்றது. ஏதோ அந்தச் சிறார்களின் காலம் எனக் கூறி விட்டுவடுதை விட, இப்படியான சம்பவங்கள் சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். வேடிக்கைக்கான காலம் இதுவல்ல.
இதே நேரம் குறித்த கிணறானது நிலத்தோடு மட்டமாக பதிக்கப்பட்டுள்ளமையும் தவறான விடயம்தான். கட்டாயம் இவ்வாறான செயற்பாடுகளில் நாம் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
சாதாரண காலங்களில் கடற்கரை ஓரங்களில் கழிக்கும் விளையாட்டுக்களை நடு வீதிகளில் குறுக்கிட்டு விளையாடும் புதிய தவறை பட்டம் விடும் பலர் பழக்குகின்றனர்.
இப்படி விளையாட்டு வேடிக்கைகள் சமூகத்தில் ஊடுறுவுகின்ற சந்தர்ப்பத்தில் அவற்றை சாதனையாக சித்தரித்து செய்தி வெளியிட்டு ஊக்கம் கொடுத்த ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இவற்றை சாதனையாக கொள்வதை விட சாபமாகக் கொள்வதே சிறப்பு!
விளையாட்டு வேடிக்கைகளை விமர்சிக்கவில்லை. அவைகளுக்கு இக்காலம் பொருத்தமற்றது. சிந்தித்து செயலாற்ற வேண்டிய பொற்காலமாகும் இது!
எனவே, இவ்வாறான விளையாட்டுக்களை கட்டுப்படுத்துவதில் சிவில் குழுக்கள், பொலிஸார் முன்முரமாக செயற்பட வேண்டும். நாட்டின் இக் கால சூழல் கருதி அவற்றுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சற்று சிந்திப்போம், இன்று இரண்டு உயிர்கள். அதுவும் ஒரு தாயின் சிசுக்கள். முழு சமூகத்தையும் துயரத்தில் ஆழ்த்திய சம்பவம். இறைவன் அச் சிறார்களின் மறுமை வாழ்வை பொருந்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உயர் சுவனமான ஜென்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக!
Comments (0)
Facebook Comments (0)