இலங்கையில் எங்களுக்கு ஏன் பெண்ணியம் தேவைப்படுகின்றது?
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எரிக் லாவெர்டு, ஐ.நா. பெண்கள் அமைப்பின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் முகமது நசிறி மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதியான ரமாயா சல்காடோவுடனான ஓர் உரையாடல்
2020 இல் உலகம் ஸ்தம்பித்தது. அவ்வருடத்திலிருந்து, COVID-19 பால்நிலை சமத்துவமின்மைகளை வெளிப்படுத்தியதுடன் மோசமாக்கியது. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான அதன் தாக்கம் கடுமையானதாகவும் விகிதாசாரமற்றதாகவும் இருப்பதுடன், இது ஏற்கனவே பால்நிலை சமத்துவத்தின் பல தசாப்த கால முன்னேற்றத்தை தலைகீழாக மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது
இலங்கையின் சனத்தொகையில் 50%ற்க்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். ஆயினும், பாராளுமன்றத்தில் உள்ள 225 சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே பெண்களாவர். வீட்டு வேலைகள் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளில் பெண்களின் ஈடுபாடு ஆண்களை விட 27 சதவீதம் அதிகமென்பதுடன் பெருந்தொற்றுக்காலத்திலிருந்து இது அதிகரித்திருக்கின்றது.
கல்வி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமடைந்தபோதிலும், பெண்கள் தொடர்ந்து ஊடகங்களில் காட்சிப்பொருளாக்கப்படுவதுடன், தங்களைப் பற்றி தீர்மானமெடுப்பதிலிருந்தும் தடுக்கப்படுகிறார்கள். விரைவாக மோசமடைந்து வரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் கூட விகிதாசாரமற்ற விதத்தில் பெண்களைப் பாதிக்கின்றன.
இதனால்தான் நமக்கு பெண்ணியம் தேவைப்படுகின்றது. பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் சமமான சமூக, அரசியல், சட்ட மற்றும் பொருளாதார உரிமைகள் மற்றும் வாய்ப்புகளுக்காக வாதிடும் ஒரு நடவடிக்கையாகும்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் இலங்கை நாட்டிற்கான பிரதிநிதி ஆகியோர் பெண்ணியத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியது பாரிஸின் தலைமுறை சமத்துவ மன்றத்தின் பால்நிலை சமத்துவத்திற்கான வழிநடத்தலில் ஒரு முக்கிய உலகளாவிய திரும்பற்புள்ளியாகும்.
பால்நிலை சமத்துவத்தில் நீங்கள் ஏன் தனிப்பட்ட முறையில் ஈடுபடுகின்றீர்கள்? ஏன் உங்களை ஒரு பெண்ணியவாதி என்று வரையறுக்கின்றீர்கள்?
முகமது நசிறி, பிராந்திய பணிப்பாளர், ஐ.நா. பெண்கள் அமைப்பு - ஆசியா மற்றும் பசிபிக்
"1919 ஆம் ஆண்டில், என் தாத்தா தனது நிலத்தை விற்றதன் மூலமாக, அவர் தனது மூன்று மகன்களை மட்டுமல்லாது, அவரது இரண்டு மகள்களையும் ஜேர்மனிக்கு கல்வி பெறுவதற்காக அனுப்பினார். எனது பெற்றோர் வீட்டு வேலைகளை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் சூழலில் நான் வளர்ந்தேன்.
எங்கள் குடும்பத்தில், பெண்ணியம் மிகவும் இயல்பான விடயமாகும். ஒரு மனிதனாக இருப்பதா, அராபியனாக இருப்பதா, பெண்ணியவாதியாக இருப்பதா என்பது ஒருபோதும் நான் கேள்வி எழுப்பிய விடயமல்ல. ஆனால் என்னைச் சுற்றியுள்ள வெளி உலகத்திடம் நான் கேள்வியெழுப்பி இருக்கின்றேன்.
ஆசியா பசிபிக் பிராந்தியத்திலும், நான் வளர்ந்த அரபு நாடுகளிலும், ஆணாதிக்கம் காணப்படுவதுடன், அது ஆண்கள் மற்றும் சிறுவர்களின் மனதில் மட்டுமல்லாது, பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனதிலும் காணப்படுகிறது, இன்று அது மிகவும் உயிர்ப்பாக காணப்படுகின்றது.
"என் கணவர் என்னை அடிக்கவில்லை என்றால், அவர் என்னை நேசிப்பதில்லை" என்பது இப்பிராந்தியத்தில் உள்ள பெண்களிடமிருந்து நான் கேள்விப்பட்ட வார்த்தைகளாகும். இது இலங்கைக்கும் பொருந்தக்கூடியது, நாட்டில் 35 சதவீத பெண்கள் தங்கள் மனைவியைத் தாக்க ஆண்கள் ஒரு நல்ல காரணத்தைக் கொண்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
எச்சரிக்கையூட்டும்விதமாக, 2013 ஆம் ஆண்டில் நாட்டின் 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, ஆண் பாலியல் வன்முறை குற்றவாளிகளில் 69% வீதமானோர் அதன் பின்னர் எந்த குற்ற உணர்வையும் உணரவில்லை என்பதனை வெளிப்படுத்தியது.
இத்தகைய உள்வாரியான வெறுப்பு நம்பிக்கைகள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை இயல்பாக்குவதோடு நமது சமூகங்களில் முன்னேற்றத்தையும் தடுக்கின்றன.
இப்பிராந்தியத்தில் தேர்வு செய்வதற்கும் குரல் எழுப்புவதற்குமான சுதந்திரம் குறைந்து வருவது சமத்துவமின்மைகளுடன் மிகவும் நேரடியான இடைத்தொடர்பைக் கொண்டுள்ளது. பெண்ணியம் என்பது சமத்துவத்தைப் பற்றியது என்பதுடன், இது என் மிகுதி வாழ்நாளில் நான் தொடர்ந்து செயற்படப்போகும் விடயமாகும் ”.
பால்நிலை சமத்துவம் என்பது மேற்குலகிற்கு ஒரு பிரச்சினை அல்ல என்று சிலர் நினைக்கலாம் - அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? இதற்காக பிரான்ஸ் குரல் கொடுக்குமளவிற்கு இது ஏன் உலகளாவிய பிரச்சினையாகும்?
எரிக் லாவெர்டு, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்
"பால்நிலை சமத்துவமின்மை எல்லா இடங்களைப் போலேவே பிரான்சிலும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நிலைத்திருக்கின்றது. 2019ம் ஆண்டில் இரு மடங்களவில் பெண்கள் கீழ்நிலைப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததுடன் ஆண்கள் இன்னமும் அரச மற்றும் தனியார் துறையில் தலைமைத்துவ பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
முதலாவது நடமாட்ட முடக்கத்தின் போது, 2020 மார்ச் - ஜூன் மாதங்களுக்கு இடையில் வீட்டு வன்முறை பற்றிய முறைப்பாடுகள் மூன்று மடங்காக அதிகரித்தன. பால்நிலை சமத்துவமின்மை என்பது பெருமளவில் ஒரு உலகளாவிய பிரச்சினையாகும்.
இன்று, ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காண்பதில் நிறைய தவறான எண்ணங்கள் உள்ளன (பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவஞானியுமான சிமோன் டி பியோவோயரின் படைப்புகளிலிருந்து வரும் ஒரு கருத்து). சமத்துவம் என்பது பெண்ணியத்தின் மையத்தில் காணப்படுவதுடன், இது ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் கிடைப்பதைப் போல வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வது பற்றியதாகும்.
ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து பால்நிலை சமத்துவத்தை அடைவதில் நிலையான அர்ப்பணிப்புக்களை உருவாக்குவதற்கு, பிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோவின் இணைத்தலைமையுடன் ஐ.நா. பெண்கள் அமைப்பால் தலைமுறை சமத்துவ மன்றம் பாரிஸில் ஒன்றுகூட்டப்படும்.
பால்நிலை சமத்துவத்திற்கான உறுதியான, லட்சிய மற்றும் நிலைமாற்ற அர்ப்பணிப்புக்களைப் பாதுகாப்பதை இம்மன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், அவை செயற்பாட்டுக் கூட்டணிகளால் வடிவமைக்கப்பட்டு பால்நிலை சமத்துவத்திற்கான உலகின் வரைபடம் உருவாக்கப்படும்.
"உடலியல் சுயாட்சி மற்றும் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் உரிமைகள்" குறித்த ஒரு செயற்பாட்டுக் கூட்டணியை பிரான்ஸ் வழிநடத்துவதுடன் இந்த வரலாற்று நிகழ்வின் வெற்றியை உறுதி செய்வதற்காக அடுத்துவரும் மாதங்களில் அதன் அனைத்து பங்காளர்களையும் அழைத்து வர உள்ளது. பால்நிலை சமத்துவம் மீதான பொது சுகாதார நெருக்கடியின் விளைவுகள் மன்றத்தின் செயற்பாட்டுக் கூட்டணிகளின் பணியில் முழுமையாக வெளிப்படுத்தப்படும்.
இலங்கையில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான நிலைமாற்ற செயன்முறையை நோக்கிய இந்த உலகளாவிய உந்துதலைப் பிரதிபலிக்கவும் ஆதரிக்கவும் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளது.
இவ் அர்ப்பணிப்பிற்காக, அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகம் (AFD) மற்றும் மெடிசின்ஸ் டு மொன்டே (MDM) ஆகியன பல ஆண்டுகளாக இலங்கையின் மத்திய மாகாணத்தில் பெருந்தோட்டத் துறையில், பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் (SRH) மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) தொடர்பான சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும், தாய்மை இறப்பு மற்றும் நோய்களுக்காளாகும் தன்மையைக் குறைப்பதற்குமென ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை ஆதரித்தன. இது போன்ற புத்தாக்கமான திட்டங்களுடன் இணைந்து, தலைமுறை சமத்துவத்தை உருவாக்குவோம்".
நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கும் மாற்றமடைந்துள்ள பெண்ணிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் என்ன? COVID-19 இன் பின்னராக, பால்நிலை சமத்துவத்தை அடைவதற்கு இன்னும் என்ன செய்ய முடியும்?
ரமாயா சல்காடோ, நாட்டிற்கான பிரதிநிதி, ஐ.நா. பெண்கள் அமைப்பு இலங்கை
“அண்மைக் காலத்தில், உள்ளூராட்சி அரசாங்கத்தில் பெண்களுக்கு கட்டாய 25% ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலங்கையின் அரசியலில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் மற்றும் பங்களிப்பை நிவர்த்தி செய்வதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்பாட்டை முதலீடு செய்த பெண்ணிய நடவடிக்கைகளின் நேரடி விளைவாகும்.
பெண்ணிய நடவடிக்கைகள் காரணமாக, அதிகமான பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், அவர்களின் சமூகங்களுக்காகவும், சமூக ஒத்திசைவு மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகளிலும் குரல் கொடுப்பதனை நாங்கள் காண்கின்றோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடும்போது,தனியார் துறையில் அதிகமான பெண்கள் தலைவர்களாவதையும் நாங்கள் காண்கிறோம். முன்னேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் புள்ளிவிவரங்கள் இது மிகவும் மெதுவாக இருப்பதனைக் காட்டுகிறது.
COVID-19 போன்ற பெருந்தொற்றுகள் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்களை வித்தியாசமாக பாதிக்கின்றன. இதனால்தான் நாம் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும், தலைமுறைகளிடையேயான உள்ளூர் உரையாடல்கள் தூண்ட வேண்டும், பெண்களை வலுப்படுத்துவதில் அதிகரித்த அரச மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும், மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உறுதியான வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை வழங்க வேண்டும்.
எங்கள் முயற்சிகள் கட்டாயமாக வீட்டிலேயே தொடங்கப்பட வேண்டும். தீங்கு விளைவிக்கும் பால்நிலை நிலைப்பாடுகளுக்கு சவால் விடுங்கள், இதனால் இந்நெருக்கடி காலங்களில், சிறுமிகளோ அல்லது சிறுவர்களோ தங்கள் கல்வியைத் தவறவிடாமையை உறுதிப்படுத்தி கொள்வதற்காக குடும்பத்தில் பராமரிப்புப் பணிகள் சமமாக பகிரப்படுகின்றன.
அதிகாரம்மிக்க நிலைகளில் சமமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதை நோக்கி தொடர்ந்து செயற்படுங்கள். சீர்திருத்தத்திற்காக தொடர்ந்து வாதிடுங்கள், இதனால் சட்டத்தில் பால்நிலை, இயலாமை அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காணப்படாது.
பால்நிலை தரவு சேகரிப்பை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பிலுள்ள பாரிய இடைவெளிகளை நிரப்புவதற்கும் அரசாங்கங்களுக்கு விசேடமான பொறுப்பு உள்ளது, இதன் மூலம் ஒரு நாடென்ற ரீதியில் நாம் பெருந்தொற்றிலிருந்து நிலையாக மீண்டுவர முடியும்.
பெண்ணியம் என்பது ஆண்களை வெறுப்பதோ அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பாமையோ அல்லது பாரம்பரிய பால்நிலை விழுமியங்களுக்கு இணங்குவதோ என்று அர்த்தமல்ல. பெண்ணியம் என்பது அந்த தீர்மானத்தை எடுக்கும் சுதந்திரத்தைப் பற்றியதாகும்.
இதைச் சாத்தியமாக்குவதற்கு, நாம் அனைவருக்கும் ஒரு பங்கு உண்டு. பெண்ணியம் என்பது அனைவருக்குமானது. எல்லா இடங்களிலும் அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் ”.
Comments (0)
Facebook Comments (0)