நோன்புகால இலவச பேரீச்சம் பழ விநியோகம்: திணைக்களம் முறையாக நிர்வகிக்குமா?
றிப்தி அலி
புனித ரமழான் மாதம் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாதம் மாத்திரமே உள்ளது. இந்த புனித மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் ஈரான் போன்ற முஸ்லிம் நாடுகள் ஒவ்வொரு வருடமும் பேரீச்சம் பழங்ளை அன்பளிப்புச் செய்வது வழமையாகும்.
இதற்கமைய, இந்த வருடம் வழமை போன்று சவூதி அரேபியா முதலாவதாக 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை அன்பளிப்புச் செய்துள்ளது. இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவையான பேரீச்சம் பழத்தில் 10 சதவீதமே இந்த நன்கொடை எனக் கணிக்கலாம்.
இதனால், முஸ்லிம் நாடுகளிலிருந்து இன்னும் பல மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை நன்கொடையாக பெற வேண்டியுள்ளது. இதற்காக அரசாங்கத்தினால் 199 ரூபா வரிச் சலுகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு மாத்திரமே இந்த வரிச் சலுகை பொருந்தும்.
எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை அமுலிலுள்ள இந்த வரிச் சலுகையினை பெறுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிபாரிசுக் கடிதம் அவசியமாகும்.
இதனால் பேரீச்சம் பழ விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பாரிய பொறுப்புள்ளது. அண்மையில் சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கின்ற சமயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வினைத்திறனமாக செயற்படவில்லை என அதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அதேவேளை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நன்கொடையாக கிடைக்கப் பெறும் பேரீச்சம் பழங்களை விடுவிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் தேவையான Standard Operating Procedures (SOP) இல்லை என்ற குற்றச்சாடொன்று ஆளும் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் இல்யாஸினால் முன்வைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட ரீதியாக உள்ள பள்ளிவாசல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குடும்பங்களின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளும் திணைக்களத்தில்லை என புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி காரணங்களினால் இந்த வருடம் பேரீச்சம் பழ விநியோகம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் அவதானம் செலுதியுள்ளனர். இதனால், அன்பளிப்பு செய்யப்படுகின்ற பேரீத்தம் பழங்களை வினைத்திறனாக விநியோகிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருட பேரீத்தம் பல விநியோகம் வெளிப்படைத் தன்மையாகவும், நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
இதற்காக விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக 25 மாவட்டங்களிலுள்ள 2,741 பள்ளிவாசல்கள் ஊடாக அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பேரீத்தம் விநியோக விடயத்தில் அமைச்சரின் இக்கருத்து வரவேற்கத்தக்கதாகும். கடந்த பல தசாப்தங்களாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாகவே பேரீத்தம் பழ விநியோக இடம்பெற்று வருகின்றது.
எனினும் ஒவ்வொரு வருடமும் இந்த விடயத்தில் புதுப் புதுப் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், பேரீச்சம் பழ விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியது இன்றியமையாததொன்றாகும்.
இவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுவது இந்த வருடத்திற்கு மாத்திரமல்லாது, எதிர்காலத்திற்கு பொருத்தமானதாக அமைய வேண்டும். இதன் ஊடாக பேரீத்தம் பழ விநியோகத்தினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முறையாக நிர்வகிக்க முடியும்.
அதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்களை பதிவுசெய்கின்ற நடவடிக்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளது. இதனால் பள்ளிவாசலின் கீழுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கணக்கிடப்பட வேண்டும். இதன் ஊடாகவும் பேரீச்சம் பழ விநியோகத்தினை ஒழுங்குபடுத்த முடியும்.
நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் பேரீச்சம் பழ விநியோகத்தினை ஒழுங்குபடுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கைகளிலேயே உள்ளது. கடந்த காலங்களில் திணைக்களத்திற்கு கிடைக்கும் பேரீச்சம் பழங்களில் ஒரு தொகை முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பெற்றுக்கொண்ட சம்பவங்களும் நடந்தன. எனினும் இம்முறை முஸ்லிம் எம்.பிக்கள் இது விடயத்தில் தலையிடமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழத்தினை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னரே விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டியது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கடப்பாடாகும்.
இந்தப் பணியை இப்போதே ஆரம்பிப்பதுடன் ரமழான் ஆரம்பிக்கும் தருணத்திலேயே அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் காலத்தின் தேவையாகும்.
Comments (0)
Facebook Comments (0)