கனடாவிலுள்ள ஆதிலின் சகோதரியிடமும் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை
யூ.எல். மப்றூக்
நியூசிலாந்து, ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதிலின் கனடாவில் வசித்து வரும் சகோதரியிடம் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
"ஆதில் தொடர்பில் கனடாவிலுள்ள தனது மகளிடமும் அந்த நாட்டுப் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்" என காத்தான்குடியிலுள்ள அவரது தாய் எம்.ஐ. பரீதா, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் இந்த நபர், காத்தான்குடியைச் சேர்ந்தவராவார். கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு மாணவர் விசா மூலம் சென்றவர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில், 1989ஆம் ஆண்டு பிறந்தார் என அவரது தயார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மேற்படி நபர்,மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரிஇ அட்டுலுகம பிரதேசத்திலுள்ள பாடசாலை மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.
இவருடைய தந்தை முகம்மட் சம்சுதீன் அரச பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்று பெற்ற பின்னர்இ தற்போது தனது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.
ஆதிலுக்கு ஒரு சகோதரியும் இரண்டு ஆண் சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆதில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவார்.
ஆதிலின் தாய் மட்டுமே தற்போது அவர் பிறந்த ஊரான காத்தான்குடியில் உள்ளார். பொலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆதிலின் தாயை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.
நன்றி: பிபிசி தமிழ்
Comments (0)
Facebook Comments (0)