20க்கு முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவளித்தது வரலாற்று துரோகம்: இம்ரான்
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
இருபதாம் திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இன்று இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்.
இன்று இவர்கள் செய்தது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம். இவர்கள் ஆதரவு அளித்ததால்தான் இன்று இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 18ஆம், 19 ஆம், 20ஆம் திருத்த சட்டம் என மூன்றுக்கும் அதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்த சட்டமூலங்களில் என்ன உள்ளது என்றாவது தெரியுமா என எனக்கு தெரியவில்லை.
இவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை எடுத்து பார்த்தால் முழுவதும் இனவாதம் பேசியே வாக்கு சேகரித்தனர். இந்த அரசு ஆட்சிக்கு வந்தால் இலங்கை மியன்மாரை போன்று மாறும் என கூறினர். இன்று எந்த முகத்தை கொண்டு மீண்டும் மக்கள் முன் செல்வர்.
இவர்கள் இந்த அரசுக்கு வழங்கிய இந்த அதிகாரம் மூலம் விசேடமாக கிழக்கில் தொல்பொருள் செயலணி போன்று பல வழிகளில் பறிபோகவுள்ள எமது காணிகளுக்கும் சிங்கள குடியேற்றங்களுக்கும் எமது உரிமைகளுக்கும் என்ன தீர்வை வழங்கப் போகிறார்கள்.
இன்னும் ஓரிரு தினங்களில் ஊடகங்கள் முன்வந்து எமது மாவட்ட அபிவிருத்திக்காக ஆதரவாக வாக்களித்தோம் என கூறுவார்கள். பசி என்பதற்காக ஹராமான உணவுகளை என்னால் உண்ண முடியாது.
இவர்கள் உண்பார்களா என எனக்கு தெரியாது. எதிர்வரும் காலங்களில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாம் அமைக்கவுள்ள ஆட்சியில் இவர்களுக்கு நாம் சிறந்த பதிலை வழங்குவோம்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)