வைத்தியர் ஷாபி தேர்தலில் போட்டியிடுவதாக பொய்ப் பிரசாரம்

வைத்தியர் ஷாபி தேர்தலில் போட்டியிடுவதாக பொய்ப் பிரசாரம்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியரான ஷாபி சிஹாப்தீன், 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக சமூக ஊடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரம் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. பல்வேறு வகையான சுகாதார ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த தேர்தலுக்கான ஒத்திகைகள் வார இறுதியில் நாட்டின் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து பல தவறான அறிக்கைகள் நாளாந்தம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அது போன்று வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வேண்டுமென்றே மாற்றப்பட்ட பேஸ்டர்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியரான ஷாபி சிஹாப்தீன், இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார் என்ற பிரச்சாரமொன்று சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட இவர், சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதலைத் தொடர்ந்து "சிங்கள பெண்கள் பலருக்கு கருத் தடை மேற்கொண்டார்" என்ற குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், சில மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது வைத்தியர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பாரிய பேசு பொருளாக காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 18 இலக்க வேட்பாளராக இவர் போட்டியிடுகின்றார் என்ற பிரச்சாரமொன்று சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் நாலக்க கெடஹேவாவிற்கு பேஸ்புகில் பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளும் சலனி பிரியங்கா என்பவரின் பேஸ்புக் கணக்கிலேயே இந்த விடயம் முதலில் பதிவிடப்பட்டிருந்தது.

குறித்த பதிவு தற்போது இவரின் பேஸ்புக் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த பதிவு 735 தடவைகள் பேஸ்புகில் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் விருப்பு இலக்கங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்த கடந்த ஜுன் 9ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த வர்த்தமானியில் இந்த விடயம் தொடர்பில் விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதன்போது, குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 18 இலக்க வேட்பாளராக விபுலா மகாவிதனக குணரத்ன என்பவரே போட்டியிடுகிறார் என்ற தகவல் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது. குருநாகலா மாவட்டத்திற்கு மேலதிகமாக கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் 18 வேட்பாளர்கள் இருப்பதைக் நாம் கண்டோம்.

குறித்த இரண்டு மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் 18ஆம் இலக்க வேட்பாளராக போட்டியிடுகின்ற நபர் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் விருப்பு இலக்க வர்த்தமானியில் விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் தேடினர்.

இதன்போது அக்கட்சி சார்பில் 18ஆம் இலக்க வேட்பாளர்களாக  கொழும்பு மாவட்டத்தில் சுமித் எராண்டிகாவும் கம்பாஹா மாவட்டத்தில் சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர் என்ற தகவல் வெளியானது.

இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் 18 வேட்பாளராக நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வைத்தியர் ஷாபி போட்டியிடவில்லை என்ற விடயம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

இதேவேளை, வைத்தியர் சாபி - மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் 8ஆம் இலக்க வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்ற போஸ்டரொன்று கடந்த ஜுன் 13ஆம் திகதி சிரான் குலசேகர எனும் பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டிருந்தது.

குறித்த பதிவு 67 தடவைகள் பேஸ்புகில் பகிரப்பட்டிருந்ததுடன் 26 கருத்துக்களும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் ஆராய்த போது, அதுவும் பொய்யானது என நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போஸ்டரில் பதிவிப்படப்பட்டிருந்த புகைப்படம் அனுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாஹ் ரஹ்மானுடையது என்பது பாராளுமன்ற இணையத்தளத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது


அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் 8ஆம் இலக்க வேட்பாளராக ஏ.எஸ்.எம்.புகாரி என்பவரே போட்டியிடுகின்றார் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியரான ஷாபி சிஹாப்தீன், போட்டியிடுவதாக சமூக ஊடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரம் பொய்யானது என இந்த ஆய்வின் ஊடாக நிரூபணமாகின்றமை குறிப்பிடத்தக்கது.