ஊடகவியலாளர் தரிஷாவின் வீட்டை சோதனைக்குட்படுத்தி, மடிக்கணனியை எடுத்துச் சென்ற சிஐடியினர்

ஊடகவியலாளர் தரிஷாவின் வீட்டை சோதனைக்குட்படுத்தி, மடிக்கணனியை எடுத்துச் சென்ற சிஐடியினர்

சன்டே ஒப்சவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான தரிஷா பெஸ்டியனின் மடிக்கணினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த கணினியில் காணப்படும் தனிநபர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி தன்னுடைய மடிக்கணினியை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் எடுத்துச் சென்றதாக நியூயோர்க் டைம்ஸ் ஊடகவியலாளரும், சண்டே ஒப்சவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான தரிஷா பஸ்டியன்ஸின் தெரிவித்துள்ளார்.

மே 29 மற்றும் ஜூன் 4ஆம் திகதிகளில் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கொழும்பில் உள்ள தரிஷாவின் வீட்டிற்கு வந்து, நீதிமன்ற ஆணைப்பத்திரம் இல்லாமல் அவரது மடிக்கணினியை கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் இம்முறை நீதிமன்ற ஆணையுடன் பொலிஸார் மடிக்கணினியை கைப்பற்றியுள்ளனர்.

இதே விசாரணையின் போது முன்னொரு சந்தர்ப்பத்தில், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனது அழைப்பு தரவு பதிவுகளைப் பெற்று, அவற்றை ஆராய்ந்து பின்னர் தகவல்களை அம்பலப்படுத்தியதாக தரிஷா தெரிவித்துள்ளார்.

“ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில், எனது தொலைபேசி பதிவுகளை பகிரங்கமாக வெளியிடுவது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன், இது எனக்கு தொடர்புடையவர்களையும் கடுமையாக ஆபத்தை ஏற்படுத்தியது” என தரிஷா பஸ்டியன்ஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சட்ட அமுலாக்க நிறுவனங்களின் எந்தவொரு விசாரணையையும் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன், எனது கணினியை ஆய்வு செய்வதன் ஊடாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் எந்தவொரு குற்றச் செயலையும் கண்டுபிடிக்காது என்று நான் நம்புகிறேன். சட்ட அமுலாக்க நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட கணினியின் வன்பொருள், மென்பொருள், தரவுகள், ஆவணங்கள் மற்றும் எனக்கு சொந்தமான மின்னணு பொருட்கள் /சாதனங்கள் தொடர்பிலும், நடைமுறைச் சூழல் தொடர்பிலும் நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பரில் இடம்பெற்ற கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றவியல் விசாரணையுடன் அவரது பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக தரிஷா பஸ்டியானிஸ் தெரிவித்துள்ளார்.

தனது தொழில்முறை சகாக்களிடம், தன்னுடைய மின்னணு சாதனங்கள் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும்  தரிஷா தெரிவித்துள்ளார்.