கம்பஹா விக்ரமாராச்சி சுதேச பல்கலையின் உப வேந்தர் ரஷ்யாவிற்கான தூதுவராக நியமனம்

கம்பஹா விக்ரமாராச்சி சுதேச பல்கலையின் உப வேந்தர் ரஷ்யாவிற்கான தூதுவராக நியமனம்

கம்பஹா விக்ரமாராச்சி சுதேச பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உப வேந்தராக செயற்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே, ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சேவையை பொறுப்பேற்பதற்காக ரஷ்யாவிற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சேவை குறித்து திட்டமிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றை நேற்று (28) செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வரலாற்று நட்பை நினைவுகூர்ந்த  பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு ஜனிதா ஏ லியனகேவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவியான ஜனிதா ஏ லியனகே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.