அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரு வைத்தியர்களுக்கு கொவிட் - 19 தொற்று

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரு வைத்தியர்களுக்கு கொவிட் - 19 தொற்று

"கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்" என  வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடியல் இணையத்தளத்திற்கு மேலும் தெரிவிக்கையில்,

"எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையினை சேர்ந்த நபரொருவருக்கும், பொத்துவிலில் இருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகொண்டிருந்த எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு இன்று  (10) வியாழக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, எமது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவருக்கும், தாதியர் ஒருவருக்கும் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து கொவிட் - 19 இற்காக சிகிச்சை அளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில்  இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் கொவிட் - 19 தொற்றாளாராக இனங்காணப்பட்ட வரை  கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எமது வைத்தியசாலையில் கொவிட் - 19 தொற்றாளார்கள் இனங்காணப்பட்டதை அடுத்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எமது வைத்தியசாலையின் தொழிநுட்ப குழுவின் கூட்டம் நாளை (11) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இதனையடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்க முடியும்" என்றார் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான்