விழிப்புலனற்றவர்களுக்கான உளநல செயலமர்வு

விழிப்புலனற்றவர்களுக்கான உளநல செயலமர்வு

'கொவிட் 19 காலத்தில் விழிப்புலனற்றோர் எதிர்நோக்கும் உள ரீதியான சவால்களும் தீர்வுகளும்' எனும் தலைப்பில் விழிப்புலனற்றவர்களுக்கு விடியல் இணையத்தளம் ஏற்பாடு செய்த இணையவழி செயலமர்வு கடந்த சனிக்கிழமை (09) இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

விழிப்புலனற்றவர்களுக்கான கிறீன் பிளவர் ஸ்ரீலங்கா அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவும் நீலன் திருச் செல்வம் மன்றத்தின் அனுசரணையுடனும் இந்த செயலமர்வை விடியல் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது உளவளத்துணையாளரும், அமல் சர்வதேச பாடசாலையின் உளவள ஆலோசகருமான எம்.ஐ. அகமட் இப்திகார் வளவாளராக கலந்துகொண்டு மேற்படி தலைப்பில் உரையாற்றினார். இதன்போது விழிப்புலனற்றவர்கள் கொவிட் காலத்தில் எதிர்நோக்கும் உளவியல் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் வழிகாட்டல்களையும் அவர் முன்வைத்தார்.

அத்துடன் கொவிட் 19 தொற்றுப் பரவல் மற்றும் அதற்கான தடுப்பூசிகள் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதிவாளர் டாக்டர் எம்.எஸ்.எம். நுஸைர் விளக்கமளித்ததுடன் பங்குபற்றுனர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 25 விழிப்புலனற்ற சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இவ்வாறான தொழில்நுட்பங்கள் ஊடாக செயலமர்வுகளில் பங்கேற்பது தமக்கு புதுமையான அனுபவம் எனக் குறிப்பிட்ட பங்குபற்றுனர்கள், விடியல் இணையத்தளத்தின் தொடர் செயலமர்வுகளில் தம்மையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டமைக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதேவேளை 'கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக் கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்' எனும் தலைப்பில் ஏற்கனவே விடியல் இணையத்தளம் 11 இணையவழி செயலமர்வுகளையும் 'பிறை எம்.எம்' ஊடாக நான்கு வானொலிக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடாத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.