வக்பு நிதியத்தில் 8 கோடி ரூபா இருப்பு!

வக்பு நிதியத்தில் 8 கோடி ரூபா இருப்பு!

றிப்தி அலி

வக்பு நிதியம் என்று அழைக்கப்படும் முஸ்லிம் தர்ம நிதியத்தில் தற்போது சுமார் 8 கோடி ரூபா காணப்படுகின்ற விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.

இலங்கை வங்கியில் நடைமுறை மற்றும் சேமிப்பு என 2 வங்கிக் கணக்குகளை இந்த நிதியம் பேணி வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய கடந்த ஜுன் 30ஆம் திகதி இதன் நடைமுறைக் கணக்கில் 10 இலட்சத்து 70 ஆயிரத்து 526 ரூபா மற்றும் 36 சதமும் முதாரபா சேமிப்புக் கணக்கில் 8 கோடி 18 இலட்சத்து 69 ஆயிரத்து 898 ரூபா மற்றும் 69 சதமும் மிகுதியாகவுள்ளது.

இந்நியதியத்தின் கணக்கறிக்கைகள் வருடாந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கூறுகின்ற போதிலும், கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 8 வருடங்களாக இதன் கணக்கறிக்கைகள் கணக்காய்வு செய்யப்படாத விடயமும் தற்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நிதியத்திற்கு கிடைக்கப் பெறும் நன்கொடையில் பெரும்பாலான நிதித் தொகை இதுவரை செலவளிக்கப்படாமல் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவலறியும் கோரிக்கைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என். நிலோபரினால் கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட பதிலின் ஊடாகவே மேற்படி விடயங்கள் தெரியவந்தன.

1982ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க திருத்தச் சட்டம் மற்றும் 1962ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஆகியவற்றின் ஊடாக திருத்தியமைக்கப்பட்ட 1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாசல்கள் தரும நம்பிக்கைப் பொறுப்புக்கள் அல்லது வக்புகள் சட்டத்தின் ஊடாகவே இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியம் உருவாக்கப்பட்ட திகதியினை மேற்படி சட்டத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கூறுகின்ற போதிலும், அது தொடர்பிலான எந்தத் தகவலும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

இதேவேளை, சபையொன்றினால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியத்தினை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல், முஸ்லிம் தரும நம்பிக்கைப் பொறுப்புக்கள் ஆகியவற்றின் வருடாந்த நிகர வருமானத்தின் 6 சதவீதமும், முஸ்லிம் சியாரங்களின் வருடாந்த நிகர வருமானத்தின் 10 சதவீதமும் நன்கொடை என்ற அடிப்படையில் இந்த நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டும்.  
பள்ளிவாசல் கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு, முஸ்லிம்கள் அல்லது ஏனைய பிரிவினரின் வறுமைக்கான நிவாரணம், முஸ்லிம்கள் அல்லது ஏனைய பிரிவினரின் கல்வி முன்னேற்றம், பொதுவாக இஸ்லாத்தின் முன்னேற்றம், முஸ்லிம்கள் அல்லது ஏனைய பிரிவினரின் வேறு நன்மை பயக்கும் நோக்கங்கள், நிதியத்தின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு ஏற்படும் செலவுகளுக்கான கொடுப்பனவு ஆகிய 6 பிரிவுகளின் கீழ் மாத்திரமே இந்த நிதியத்திலுள்ள பணத்தினை செலவு செய்ய முடியும்.