ஒன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல்
ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் (Online Registration System) பெற்றுக்கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து உறுப்பினர்களும் தமது தகவல்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்த முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
இந்த தகவல் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை காரணமாக தற்பொழுது பாராளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்களை திரட்டுவதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அதேபோன்று உறுப்பினர்களின் வசதி கருதி இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் தேர்தல் தொகுதிகளில் இருந்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என தம்மிக தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் https://registration.parliament.lk எனும் இணைய பக்கத்திற்கு பிரவேசித்து உரிய கடவுச்சொல்லை பயன்படுத்தி இந்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த கடவுச்சொல் தொடர்பில் அறிவுறுத்துவதற்கு பாராளுமன்ற பணியாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதியுரை செய்வதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் உறுப்பினர்களின் தரவுகள் கட்டாயம் தேவைப்படுவதுடன் முடிந்தளவு விரைவில் அவற்றை வழங்குமாறு பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)