ராமமேஸ்வரம் - தலை மன்னார் கப்பல் சேவை: உரிய அனுமதி இன்னும் கிடைக்கவில்லை
தமிழ் நாட்டின் ராமமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியினை பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சுக்கள் இதுவரை அனுமதி வழங்கிவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இந்த கப்பல் சேவைக்கு இந்தியத் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராமாணிக்கம் எழுப்பிய விடயத்துக்குப் பதிலளித்த போதே வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது நிலவும் கொவிட் சூழல் காரணமாக கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை விரைவுபடுத்துவதறான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஏற்கனவு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், இலங்கையர்களுக்கு விவசாயத்துறையில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு கொரியத் தூதுவர் விசேட யோசனையை முன்வைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருந்தபோதும் தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக இந்த நடவடிக்கை காலதாமதம் அடைந்துள்ளபோதும் இதனை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரியாவில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க குறிப்பிடுகையில்,
"பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள வெளிநாட்டு நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக அந்நாட்டின் யுத்த வீரர்கள் வெளிநாடுகளில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறான பின்னணியில் இலங்கை படைவீரர்கள் தமது தாய்நாட்டைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கையின் போது கூட மனித உரிமைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நியாயமற்றது என்றும், இந்நாட்டுப் படைவீரர்களின் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும்" அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய அரசாங்கங்களின் இறைமைக்கு எதிராக மனித உரிமை பயன்படுத்தப்படும் விடயத்தில் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் படைவீரர்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை உலகத்துக்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, "இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கடந்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக இது தொடர்பில் சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் சூழலுக்கு மத்தியில் பல உலக நாடுகள் இலங்கையை சிவப்பு வலயத்தில் உள்ள நாடாக அறிவித்திருப்பதால் நாடு தொடர்பான இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அந்தந்த நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இங்கு குறிப்பிட்டார்.
சில நாடுகளில் காணப்படும் நிலைமைகள் காரணமாக இது சிக்கலான விடயமாக இருப்பதாகவும், முடிந்தளவு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இம்மாதம் 15ஆம் திகதி பதவியேற்கவிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிடுகையில், வெளிநாட்டு அலுவல்களுடன் தொடர்புபட்ட பொது மக்களின் முறைப்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளான தம்மிடம் முன்வைக்கப்படுவதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு இணைப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
வெளிநாட்டு சேவைகள் தொடர்பான பரீட்சையை நடத்துவது காலதாமதம் அடைந்திருப்பதாகவும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டினார்.
தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக பரீட்சையை நடத்துவது காலதாமதம் அடைந்திருப்பதாகவும், பரீட்சைகள் திணைக்களம் விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சின் செயலாளர் பதிலளித்தார்.
2018ஆம் ஆண்டே இறுதியாக இப்பரீட்சை நடத்தப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு சேவைகளில் அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் இங்கு புலப்பட்டது.
இந்தப் பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சாணிக்கியன் இராசமாணிக்கம், காமினி வலேபொட, கலாநிதி சுரேன் ராகவன், யதாமினி குணவர்த்தன மற்றும் சுதத் மஞ்சு ஆகியோரும், வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)