ஆசியாவில் தேர்தல்கள்; மாற்றத்தை உண்டுபண்ணும் பிராந்தியத்தில் மாற்றத்தை உண்டுபடுத்துபவர்

 ஆசியாவில் தேர்தல்கள்; மாற்றத்தை உண்டுபண்ணும் பிராந்தியத்தில் மாற்றத்தை உண்டுபடுத்துபவர்

கலாநிதி ரங்க கலன்சூரிய

ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev) 2023ஆம் ஆண்டுக்கான தனது எதிர்வுகூறல்களை கடந்த மாதம் முன்வைத்துள்ளார்.

"அனைத்து பாரிய பங்கு சந்தைகளும் நிதி சார்ந்த செயற்பாடுகளும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் விட்டு விலகி ஆசியாவை நோக்கி நகரும்" என அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில், இத்தகைய கூற்றுக்கள் மிகைப்படுத்தியதாக தோன்றலாம். இருப்பினும், உண்மையில் இது ஒரு புதிய எதிர்வுகூறல் அல்ல.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் 2024ஆம் ஆண்டளவில் குறிப்பாக ஆசியா உலகின் பொருளாதார சக்தியாக மாறும் என எதிர்வுகூறியிருந்தன.

ஐந்து பாரிய பொருளாதார வளமுடைய நாடுகளில் அத்தகைய பொருளாதார வளமுடைய நான்கு நாடுகள் 2024ஆம் ஆண்டளவில் ஆசியாவிலிருந்து உருவாகும். அவற்றில் எதுவும் ஐரோப்பாவை சேர்ந்திருக்காது.

சீனா முன்னிலை வகிக்கும். சீனாவை அடுத்து அமெரிக்காவும் இந்தியாவும் முன்னிலை வகிக்கும். ஜப்பானும் புதிய உலகப் பொருளாதார சக்தி வாய்ந்த இந்தோனேசியாவும் அத்தகைய நாடுகளின் குழுவில் சேரும்.

உண்மையில், ஆசியா 2024ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும். எவ்வாறாயினும், அடுத்த 24 மாதங்களுக்குள் முக்கியமான தேர்தல்களை எதிர்கொள்ள இந்த ஆசிய பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகள் தயாராகும் இத்தகைய பின்னணியில், அரசியல் ரீதியாக இந்த சவாலை ஏற்க ஆசியா தயாராக உள்ளதா என்பது மிகவும் கேள்விக்குரியதாகும்.

கவலையளிக்கக்கூடியது, தேர்தல்களின் சரியான திகதியோ அல்லது மாதமோ அல்ல. ஆனால் நிகழ்கின்ற காலமும் தேர்தலை மையமாக வைத்து இந்த வாக்கெடுப்புகளுக்கு பல மாதங்களுக்கு முன்னர் உருவாகும் சூழ்ச்சியும் கவலையளிக்கக்கூடியதாகும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மாலைதீவு, கம்போடியா மற்றும் நிச்சயமாக இலங்கை அடங்கலாக பல நாடுகள் அடுத்த 24 மாதங்களுக்குள் தீர்க்கமான தேர்தல்களை சந்திக்கவுள்ளன.

இந்தத் தேர்தல்கள் பலவற்றின் முடிவுகள் நிச்சயமாக பிராந்திய ரீதியில் மட்டுமன்றி பூகோள ரீதியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆசியா முன்னிலை வகிக்க வேண்டுமானால், உறுதியான தூர சிந்தனையுடைய அரசியல் தலைவர்கள் அவசியம்.

துரதிஷ்டவசமாக, மக்கள் வாக்களிக்க செல்லும்போது ஒத்திசைவான தெரிவுகளை மேற்கொள்வதற்கான ஆற்றல்மிக்க தலைமைத்துவம் இல்லாமை இந்தத் தேர்தல் நிலப்பரப்புகள் பலவற்றில் பொதுவாக அவதானிக்கக்கூடிய ஒரு அம்சமாக காணப்படுகின்றது.  

இந்த நாடுகள் பலவற்றில் சக்திவாய்ந்த எதிர்ப்புகள் கிடையாது. தலைமைத்துவத்தில் வலுவான இளைஞர் பிரதிநிதித்துவமும் கிடையாது. அர்த்தமுள்ள சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் முற்போக்கான தலைவர்களும் கிடையாது.

இந்தியாவை அடுத்து, இந்தோனேசியா எதிர்வரும் ஆண்டுகளில் தேர்தல் களத்தின் பின்னர் அதிகம் நாடப்படும் நாடாக மாறும். அவை உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளாக விளங்குவதால், முன்மாதிரியாக இருந்திருக்கலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவற்றின் தடப்பதிவு மாறாக புலப்படுத்துகின்றது.

இந்தியா இன்று, மாபெரும் பேரரசர் அசோகர், அமைதிப் புரட்சியாளர் காந்தி அல்லது பன்மைத்துவமும், சமத்துவமும் உடைய முழுமையான ஒரு சமூகத்தை விரும்பிய அம்பேத்கார் மற்றும் நேரு போன்ற தூர சிந்தனையுடைய தலைவர்கள் வாழ்ந்த பூமி அல்ல.

உலகின் மிக அதிக சனத்தொகையை கொண்டிருக்கும் நாட்டின் ஆட்சியாளர்கள் இப்போது "அஸ் வெர்சஸ் தெம்" லென்ஸ் என்ற ஒரு இருமுனை எண்ணக்கருவின் ஊடாக இந்து சமய சித்தாந்தத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

நிச்சயமாக, இந்தியாவின் பொருளாதார சுட்டிகள் மனதை கவரக்கூடியனவாக உள்ளன. டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா என்ற பிரச்சாரங்கள் எதிர்காலத்தில் பல உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டை தயார்படுத்தியுள்ளன.

ஆனால் ஆய்வாளர்கள் அதன் ஜனநாயக விழுமிய முறைமை அல்லது அது இல்லாமை பற்றி கேள்வி எழுப்புகின்றனர். 73 வயதுடைய பிரதமர் மோடியின் புகழ் குஜராத் போன்ற இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால் ஹிமாச்சல் மற்றும் புதுடில்லி போன்ற இடங்களில் அவரின் புகழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஏனைய 10 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள், அதிகளவில் பலதரப்பட்ட இந்தியர்களுக்கு வாக்குப்பதிவு முறையை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் பணவீக்கம், வேலையின்மை, சமயம் தொடர்பான விமர்சனங்கள் இருந்தபோதிலும், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மோடி மூன்றாவது முறையாகவும் வெற்றி பெறுவார் என பல நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இது நிச்சயமாக அப்பகுதிக்கும், மத அடையாளத்தால் உந்தப்படும் இருமுனை தேசியவாத அரசியல்களின் ஜனநாயக உலகிற்கும் எதிர்மறையான சமிக்ஞைகளை விடுக்கும்.

உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, சுஹார்டோவுக்கு (Suharto) பிந்திய யுகத்தில் 2024 காதலர் தினத்தன்று மிகவும் கடினமான தெரிவை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பிரபல பதவியில் இருக்கும் ஜோகோ விடோடோ (ஜோகோவி) அரசியலமைப்பு ரீதியாக போட்டியிடுவதற்கு தகுதியற்றவர். இந்த விடயம் அவரது வாரிசு பற்றி இந்தோனேசியா மக்களை அநேகமாக குழப்பமடையச் செய்யலாம்.

முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஜோகோவிக்கு எதிராகப் போட்டியிட்டு, பின்னர் அரசாங்கத்துடன் இணைந்த தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ, ஜனாதிபதி பதவிக்கு ஜோகோவியின் வேட்பாளராக நிற்கலாம் என பலர் கருதுகின்றனர்.

"ஆனால் அது ஜோகோவி மற்றும் பிரபோவோ இருவரினதும் முடிவாக இருக்கலாம். அத்தகைய முடிவு மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை மீறுவதாக அமையும். மேலும் மக்கள் பிரபோவோவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்" என அடையாளம் காட்ட விரும்பாத இந்தோனேசிய இராஜதந்திரி ஒருவர் கூறினார்.

பிரபோவோ, முன்னாள் மக்களால் வெளியேற்றப்பட்ட வலிமையான சுஹார்டோவின் மருமகனாவார். இவர் பிந்தியவர்களின் செல்வாக்கற்ற பாரம்பரியத்தையே இன்னும் கொண்டு செல்கின்றார். ஆனால் அவர் ஜோகோவியுடன் இணைந்தால், அவரின் இணைவு ஒரு மாற்று சக்தியாக அமையும் என சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம், ஜோகோவி - பிரபோவோ உறவு பெரும்பாலான இந்தோனேசிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அதற்கான மாற்றுவழி என்னவாக இருக்கும்? கடும்போக்கு இஸ்லாமியர்களா?

"ஒருபோதும் இல்லை, நாம் மதச்சார்பற்ற, பன்மைத்துவ, ஜனநாயக இந்தோனேசியாவை பாதுகாக்க வேண்டும்" என பெயர் குறிப்பிடுவதற்கு விரும்பாத இராஜதந்திரி ஒருவர் கூறினார்.

எல்லா கணிப்புகளின் படியும், 25 வருட பொருளாதார திவால் நிலையின் பின்னர், உலகின் முதல் ஐந்து பாரிய பொருளாதார வள நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா உருவானது. இது இலங்கை நன்கு கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வெற்றிக் கதையாகும்.

வித்தியாசமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும், பங்களாதேஷின்  தேர்தல் கதையும் சற்று ஒத்ததாகவே காணப்படுகின்றது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தம்மை எதிர்க்கின்றவர்களை தமது சொந்த அரசியல் பிழைப்புக்காக அழித்தொழிக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள்.

ஆனால் அது ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதுதான் பங்களாதேஷில் நடந்துள்ளது. பங்களாதேஷின் வலிமையான பெண்மணி ஷேக் ஹசீனா, இப்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகின்றார்.

அவர் தனது எதிராளிகளை அநேகமாக ஒழித்துவிட்டார். 4,000 எண்ணிக்கைக்கும் அதிகமான எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவும் இந்தியாவும் ஹசீனா இல்லாத பங்களாதேஷை காண, நாட்களை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருக்கின்றன. டாக்காவிலும் புறநகர் தெருக்களிலும் சமூக இடையூறுகளும் பிளவுகளும் தோன்றியுள்ளன.

வலுவான ஜனநாயக எதிர்ப்பு இல்லாத நிலையில், பங்களாதேஷ், அரசியல் நிலப்பரப்பிற்குள் கடும்போக்கு இஸ்லாமிய குழுக்கள் வலிமை பெறுவதை ஒரேயொரு மாற்றுத் தெரிவாகக் காண்கின்றது.

இது நிச்சயமாக கடுமையான பிராந்திய விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமான அரச தரப்பினரின் பாரிய ஈடுபாடு, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள பங்களாதேஷின் தேர்தலில் மிக முக்கியமான ஒரு அம்சமாக விளங்கும்.

இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் பொதுத் தேர்தலை சந்திக்கும். அணுசக்தி வளமுடைய நாட்டில் பல ஆண்டுகளாக நிலவி வருகின்ற அரசியல் கொந்தளிப்புக்கு தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என இன்னும் துடிதுடித்துக்கொண்டிருக்கும் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியுடன் முற்றுப்புள்ளி வைத்து, சீரழிந்து வரும் பொருளாதாரத்திற்கும் ஒருபோதும் தீராத சுற்றாடல் அழிவுகளுக்கும் நிரந்தர தீர்வைக் காண முடியும் என பாகிஸ்தானியர்கள் நம்புகின்றனர்.

2022ஆம் ஆண்டானது, பாகிஸ்தானில் நடந்த இந்த அனைத்து பேரழிவுகளிலும் சம்பந்தப்பட்ட ஒரு ஆண்டாகும். மேலும், எதிர்வரும் தேர்தல்கள் நாட்டின் சர்ச்சைக்குரிய "ஸ்தாபனம்" (ஆழமான அரசு) அரசியலில் இருந்து விலகியிருப்பதற்கான ஒரு வரலாற்று கூற்றுக்கு ஒரு உன்னத லிட்மஸ் சோதனையாக இருக்கும்.

"இது பாகிஸ்தானில் வாழும் நம் அனைவருக்கும் வரவேற்கத்தக்க கூற்றாகும். ஆனால் அவர்கள் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என ஒரு பிரபல உள்ளூர் பத்திரிகையாளர் அஸ்மா ஷிராசி பதிலளித்தார்.

பிராந்தியத்தின் பொருளாதார வலிமையைக் கருத்தில் கொள்கின்ற போது, இந்தத் தேர்தல்களின் முடிவுகள் பாரியளவில் பிராந்திய ரீதியிலும் பூகோள ரீதியிலும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆசியாவிற்கு சரியான, முழுமையான, ஜனநாயகத் தலைமைத்துவம் இல்லையென்றால், ஏற்கனவே பலர் எதிர்வுகூறிய பொருளாதார நன்மைகளை அடைந்துகொள்ள முடியாமல் போகலாம்.

எனவே, பொருளாதாரம், அரசியல் ஆகிய அடிப்படைகளில் ஆசியா முன்னேற வேண்டுமானால் எமக்கு இரண்டு கூறுகள் தேவை: தூர சிந்தனையுடைய தலைவர்களும் கல்வியறிவுடைய வாக்காளர்களும் என்பதே அந்த இரண்டு கூறுகளாகும். நாம் அத்தகைய இரு தரப்பினரையும் இழக்கின்றோம் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

ஆசியாவின் ஊடகம் மற்றும் அரசியல் ஆய்வாளரான கலாநிதி ரங்க கலன்சூரிய, அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராவார். அத்தோடு, முன்னாள் இராஜதந்திரியும் ஆவார். rkalansooriya@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அவரை தொடர்புகொள்ள முடியும்.