ஐ.நா பொதுச் சபையில் இன்றிரவு ஜனாதிபதியின் உரை

ஐ.நா பொதுச் சபையில் இன்றிரவு ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டில் இன்று (22) புதன்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது நாள் அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளது.

இந்த உரை இன்றிரவு 9.30 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, கொவிட் தொற்றுப் பரவலைத் தோற்கடித்து, உலகின் முன்னால் காணப்படும் மிக முக்கியமான சவாலை வெற்றிகொள்ள, அனைவரும் அணிதிரள வேண்டுமென்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), உலக நாடுகளின் அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜோ பைடன்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை நேரப்படி, நேற்று (21) மாலை 6.30 மணிக்கு, நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில், இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமானது.

இதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த உலக நாடுகளின் அரச தலைவர்கள், ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸினால் (Antonio Guterres), மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.

ஐ.நா பொதுச் செயலாளர் நாயகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசாரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அரச தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டதன் பின்னர், அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பமானது.

“கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்பதே, இம்முறை அரச தலைவர்கள் மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

இதன்போது உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி, காலநிலைப் பிரச்சினைகள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு, மனித மாண்பு மற்றும் மனித உரிமைகள் போன்று தற்காலத்தில் காணப்படும் மிக முக்கியமான சவால்கள் அனைத்துக்கும் முகங்கொடுப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கத் தயாரெனத் தெரிவித்தார்.

யுத்தங்களில் ஈடுபடுபதற்குப் பதிலாக, ஒற்றுமையான எதிர்காலத்துக்கான சவால்களை எதிர்கொள்வதற்கு, வளங்களை அர்ப்பணிப்பது தொடர்பிலும் அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளதென்று, ஜோ பைடன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres), பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவர் அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) ஆகியோர், கூட்டத்தொடரின் முதல் நாள் உரைகளை நடத்தினர்.

உலகம் தற்போது விழித்துக்கொள்ள வேண்டிய காலம் கனிந்துள்ளதென, பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில், ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

“நாங்கள் தற்போது, ஒரு பள்ளத்தின் விளிம்பில் நின்றுகொண்டு, தவறான திசை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எமது உலகம், தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவ்வாறில்லையாயின், பிளவுபட்டு பிரிந்துக் காணப்படுகின்றது என்றும் கூறலாம்” என்று, பொதுச் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

“செல்வந்த நாடுகளில், அதிகப்படியானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், ஆபிரிக்கர்களில் 90 சதவீதமானோருக்கும் அதிகமானோர், இன்னமும் முதலாவது டோஸ் தடுப்பூசிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானம் எனும் பரீட்சையில் நாம் வெற்றிபெற்றிருந்தாலும், நீதி நெறிமுறை எனும் பரீட்சையில் நாம் தோல்வியடைந்துள்ளோம்” என்றும், பொதுச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

“சவால்கள் பல இருக்கின்ற போதிலும், கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் ஈட்டிக்கொண்ட வெற்றியைக் கொண்டாட, ஒரு நொடியேனும் வழங்கப்பட வேண்டும்” என்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவர் அப்துல்லா ஷாஹிட், தனதுரையின் போது எடுத்துக்காட்டினார்.

“கொவிட் 19க்கு எதிராக, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், மனிதச் சமுதாயத்தால் பல்வேறு வகையான வெற்றிகரமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. டசின் கணக்கான நாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், மனிதகுலத் திறமையின் மிகச் சிறந்த வேலைத்திட்டத்துக்காக, ஒற்றுமையாகப் பணியாற்றியுள்ளனர். மனித வரலாற்றில் மாபெரும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், தற்போது உலகில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் காணப்படினும், தடுப்பூசி ஏற்றலை முன்னோக்கிக் கொண்டுசெல்வதன் முக்கியத்துவத்தை, அரச தலைவர்களிடம் அப்துல்லா ஷாஹிட் எடுத்துரைத்தார்.