தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் விசேட கரிசனை
போதியளவு கண்காணிப்பு பொறிமுறைமையின்மை
மூன்றாம் தரப்பின் செலவுகள் கட்டுப்படுத்தப்படாமை
பிரச்சார நன்கொடைகளுக்கு வரையறைகள் காணப்படாமை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த இந்த மசோதாவானது பயன்படுத்தப்படக் கூடாது
"தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் மசோதா" எனும் தலைப்பில் முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IRES) போன்ற அமைப்புக்கள் பல ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரங்களுக்கான நிதிக் கட்டுப்படுத்தல் தொடர்பில் வலுவான சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.
தேர்தல் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மீதான நன்கொடையாளர்களின் அல்லது நிதியளிப்பவர்களின் தேவையற்ற செல்வாக்கைத் தடுத்தல், தேர்தல் களத்தில் புதிதாக நுழைந்தவர்கள் மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான கள வாய்ப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பொது நிதியினை தவறாக பயன்படுத்தல் மற்றும் வாக்குகளை வாங்குதல் போன்ற தேர்தல்களுக்கு அதிகப்படியான மற்றும் சட்டவிரோதமான செலவுகளை மேற்கொள்வதை தடுத்தல் போன்ற தேர்தல் பிரசார நிதியளிப்பை ஒழுங்குபடுத்தும் சட்டமொன்றினை இயற்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.
எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் 2022 நவம்பர் மாதம் 29ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதாவானாது குறித்த நோக்கங்களை நிறைவேற்ற ஏற்புடையதாக இனங்காணப்படவில்லை.
இம்மசோதாவானது வெளிநாட்டு அரசாங்கங்கள், இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அநாமதேய நன்கொடையாளர்கள் போன்றவற்றின் தேர்தல் பிரச்சார பங்களிப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.
எனினும், ஒரு வேட்பாளர், கட்சி அல்லது சுயேச்சைக் குழு எந்த மூலங்கள் அல்லது முறையிலிருந்தும் எவ்வளவு நிதியைப் பெற முடியும் என்பதற்கு எந்த வரையறைகளும் விதிக்கப்படவில்லை. ஆகவே இது தேவையற்ற செல்வாக்கினை செலுத்த இடமளிக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக நிர்ணயிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தொகை குறித்து இம்மசோதா முன்னறிவிக்கிறது. இருப்பினும், குறித்த தொகையானது போதியளவான தகவல்களுடன் பரிசீலிக்கப்படவில்லை.
மேலும், இது போதுமான கண்காணிப்பு பொறிமுறையினை கட்டமைக்கவில்லை. வேட்பாளர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் மூன்றாம் தரப்பினர்கள் மேற்கொள்ளக்கூடிய செலவுகளை இம்மசோதா கட்டுப்படுத்துவதில்லை.
ஆகவே, குறித்த முன்மொழியப்பட்ட செலவு வரையறைகளானது இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கத்தையே புறந்தள்ளும். செலவின் வரையறைகளைச் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நடைமுறையும் போதுமானதாக அல்லது வலுவானதாக அமையவில்லை.
வேட்பாளர்கள் கணக்காய்வு/தணிக்கை செய்யப்பட்ட விபரங்களைத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மட்டுமே இம்மசோதா வெளிப்படுத்துகிறது.
வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் என அனைவரினதும் கணக்கு விபரங்களையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் வெளிப்படுத்தல் மற்றும் அதனை பராமரித்தல் மேலும் குறித்த விபரங்கள் டிஜிட்டல் வடிவில் (இணைய வழியில்) பொதுமக்களினால் அணுகக்கூடியதாகவும் எளிதாக அவதானிக்கக்கூடியதாகவும் மற்றும் முறைகேடுகளை முறையாக அடையாளம் காணும் வாய்ப்பினை வழங்குதல் என்பன ஒரு வினைத்திறனான சட்டத்தின் தேவைப்பாடுகளாகும்.
இந்த மசோதாவானது பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உட்படுத்தப்பட்ட போது, உயர் நீதிமன்றத்தினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பானது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேர்தல் பிரச்சார நிதியளிப்பு ஒழுங்குமுறையின் தேவையினை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, மசோதாவில் காணப்படுகின்ற குறைகளை அல்லது இடைவெளிகளை நிவர்த்தி செய்யாது அவசர அவசரமாக நிறைவேற்ற முனையாமல் இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபடுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கூட்டானது அரசாங்கத்தினை கேட்டுக் கொள்கிறது.
ஓர் பலவீனமான கட்டுப்படுத்தல் ஒழுங்குமுறைமையானது அரசியல் மற்றும் தேர்தல் செயல்முறையின் சட்டபூர்வமான தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையினை சீர்குலைக்க வழிவகுக்கும் அதேவேளை இவ்வாறான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் நோக்கங்களை அடைந்து கொள்வதும் சவாலாக அமையும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு குறித்த தேர்தல் பிரசார நிதியளிப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஓர் காரணியாக பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கூட்டு மேலும் வலியுறுத்துகிறது.
Comments (0)
Facebook Comments (0)