தொழில் முயற்சிசார் பாடசாலைத் தோட்டங்களை அமைக்க அவுஸ்திரேலிய நிதியுதவி
பாடசாலை சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதற்காக வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தொழில் முயற்சிசார் பாடசாலைத் தோட்டங்களை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் ஊடாக அவுஸ்திரேலியிடமிருந்து 200இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் நிதியைப் பெறவுள்ளன.
தொழில்முயற்சி பாடசாலைத் தோட்டங்கள் திட்டமானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகின்றது.
இந்த திட்டமானது தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 100,000 இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கான கண்டுபிடிப்பு அடிப்படையிலான கற்றல் அணுகுமுறையை இந்தத் திட்டம் கொண்டுள்ளது, அங்கு அவர்களுக்கு தங்கள் பாடசாலைத் தோட்டங்களில் சத்தான விளைபொருட்களின் ஆதாரங்களாக மாற்றும் திறனைப் பற்றிக் கற்றுக்கொடுக்கப்படும்.
இது மாறுபட்ட மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுக்கு உதவுவதுடன், தொழில் முனைவோர் சிந்தனையை விவசாயத்தில் பயன்படுத்த உதவுகின்றது.
உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து, விவசாயம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 505 பாடசாலை ஆசிரியர்களுக்கு கண்டுபிடிப்பு அடிப்படையிலான கற்றல் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
பாடசாலை அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிசெலுத்தலை மேற்பார்வையிடும் ஒரு முக்கிய திட்ட பங்காளியாக செயல்பட ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள விவசாயக் கழகத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.
இது தோட்டங்களில் இருந்து அறுவடைகளை விற்பனை செய்வதையும் மேற்பார்வையிடும், மேலும் தனியார் துறை நிறுவனங்கள், மாணவர்களின் பெற்றோர்கள், உள்ளூர் சந்தைகள் அல்லது FAO மூலம் தேசிய பாடசாலை உணவுத் திட்டம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, தோட்டங்களின் அறுவடைகள் வருமானம் ஈட்டுவதை உறுதிசெய்யும் - அதன் மூலம் திட்ட காலத்திற்கு அப்பால் தோட்டங்களின் நிலைத்தன்மையை இது உறுதி செய்கின்றது.
இது தொடர்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவிக்கையில் "பாடசாலை தோட்டக்கலையானது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், கற்றலுக்கும் உதவும். பாடசாலைத் தோட்டக் கலையில் மாணவர்களை ஈடுபடுத்துவதும், ஊட்டச்சத்தின் பயன்கள் குறித்து அவர்களுக்கு கற்பிப்பதும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பிற்காக உங்கள் உணவை உற்பத்தி செய்வதன் பெறுமதியை சுட்டிக்காட்டுவதற்கு இந்த நிகழ்ச்சி உதவுகின்றது" என்றார்.
"அவுஸ்திரேலியா மக்களின் இந்த தாராளமான உதவியை நாங்கள் பாராட்டுகிறோம், இது பாடசாலை மாணவர்களிடையே உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மற்றும் நிலையான பாடசாலை முதல் வீட்டிற்கு அறிவு பரிமாற்ற அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளது" என்று இலங்கைக்கான FAO பிரதிநிதி விம்லேந்திர ஷரன் கூறினார்,
"பாடசாலைத் தோட்டங்கள் குழந்தைகள் சுறுசுறுப்பான கற்றலில் ஈடுபடுவதற்கு வளமான சூழலை வழங்குகிறது. உணவு நுகர்வுப் பழக்கவழக்கங்கள் மற்றும் புதிய விவசாயக் கருத்துகள் மீதான மனப்பான்மை மாற்றத்தைத் தூண்டும் வகையில், மாணவர்கள் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், விரிவாக்கம் மூலம் சமூகங்களுக்கும் அறிவு பரிமாற்றப்படும்' என அவர் மேலும் கூறினார்.
FAOஆனது கல்வி அமைச்சு, விவசாயத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் ஊவா, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் தலைமைச் செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகள் மற்றும் ஊட்டச்சத்து குறித்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும்.
Comments (0)
Facebook Comments (0)