அடையாளங்களும் மனப்பாங்குகளும்
அகல்யா டேவிட்
நிம்மதியற்ற நெருக்கடியான வாழ்வை விரும்புகிறீர்களா என்று எவரிடம் கேட்டாலும் அதற்கான பதில் இல்லையென்றுதான் இருக்கும். அப்படியானால் உலகில் ஏன் இன்றளவும் அமைதியற்ற நிலைமை காணப்படுகின்றது?
அதற்கான உள்ளர்ந்த பதிலைத் தேடிக் கொண்டுதான் உலகம் சுழல்கின்றது. சில சமயங்களில் ஒற்றுமை என்றால் என்ன? சமாதானம் என்றால் இப்படித்தான் இருக்கும், நல்லிணக்கும் என்பதன் வரைவிலக்கணம் இது தான் என்று வார்த்தைகளில் வரைவிலக்கணப்படுத்த முடியாமலிருக்கும்.
அன்றாடம் இடம்பெறும் அனுபவங்களும், எமக்குத் தெரிந்த அல்லது தெரியாத விடயத்தை அனுபவப் பாடமாகத் தருகிறது. சிறு புன்னகை கூட நல்லிணக்கம் மற்றும் சகவாழ்விற்கான ஆரம்பம் தான் என்று தெளிவாக உணர்த்திவிடும். அவ்வாறான ஒரு அனுபவப் பகிர்வொன்று எனக்கும் கிடைத்தது.
ஒரு ஆவணப்படம் எடுப்பது சம்மந்தமான ஆலோசனை பெறுவற்காக சமூக ஆய்வு ஊடகவியலாளரும், வளவாளரும், மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவின் நிறுவுனர்களில் ஒருவரும், இன்ரநியூஸ் மட்டக்களப்பு ஊடக இல்லம் முன்னாள் பணிப்பாளரும் தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளருமான ஒருவரை சந்தித்தேன்.
அவருடன் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் நான் அவரிடம் “நல்லிணக்கம் பற்றிய உங்கள் பார்வை என்ன என்றேன்?” அப்போது தனது அனுபத்தில் கிடைத்த நிகழ்வொன்றைக் கூறினார். மனிதர்கள் நடமாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்த காலகட்டம் அது.
2000மாம் ஆண்டு காலப்பகுதியில் வன்னிப் பிரதேசத்திற்கும் தென்னிலங்கைக்குமான கட்டுப்பாட்டுப் பகுதியாக வவுனியா இருந்தது. நாட்டின் வேறெந்தப் பகுதியிலிருந்து வவுனியாவிற்குள் நுழைவதென்றாலும் அல்லது வவுனியாவிலேயே வாழ்வதென்றாலும் அங்கே “பாஸ்” ஒன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும்.
பஸ் டிக்கெற் அளவில் சிறியதாக பல்வேறு வர்ணங்களில் படையினரால் வழங்கப்படும் “பாஸ்” கிட்டத்தட்ட 27 வகைகளில் தரம் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த வகையான “பாஸ்” நடைமுறைபற்றி அறிந்துகொள்ளும் ஆய்வுக் குழுவில் ஒருவராக நானும் வவுனியாவுக்குச் சென்றிருந்தேன்.
நான் சென்ற ஆய்வு வேலை நிறைவடைந்ததும் வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்டேன். இப்போதிருப்பதைப்போன்று அப்போது போதியளவு பேருந்துக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. குறிப்பிட்ட பஸ் சேவைகள் மாத்திரம் இடம்பெற்றன.
பஸ்களில் எப்போதும் சன நெருசலாகவே இருக்கும். முண்டியடித்துக்கொண்டு ஏறிவிட வேண்டும். எனக்கும் ஒருவாறு பஸ்ஸில் ஆசனம் கிடைத்து விட்டது. அந்த பஸ்ஸில் எனக்குப் பக்கத்து ஆசனத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்தமர்ந்து கொண்டார்.
அவரது பயம் கலந்த பதைபதைப்பு என்னையும் ஏதோமாதிரி சங்கடப்படுத்தியது. அப்பெண் ஏதோ தடுமாற்றத்தில் இருக்கிறார் என்று எனக்குள் கூறிக்கொண்டவனாய் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். அவர் பொட்டு வைத்து சாறி அணிந்திருந்ததும் அவருக்கு முன்னாலுள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்த 4 மாணவிகளுடன் அவர் தமிழில் பேசி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்ததும் அவர் ஒரு தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை என்பதை எனக்குக் குறிப்புணர்த்தியது.
அப்பொழுது பஸ் நடத்துனர் என் அருகில் நெருங்கியவுடன் “மட்டக்களப்புக்கு ஒரு டிக்கெற்” என நான் தமிழில் கேட்டு டிக்கெற்றை வாங்கிக்கொண்டபோது அந்த ஆசிரியையிடம் இருந்த அச்சமும் பீதியும் கலந்த உணர்வு ஓரளவு நீங்கியதைக் குறிப்பால் உணர்ந்துகொண்டேன்.
“நாங்களும் மட்டக்களப்புக்குத்தான் போறம்” என்று அவராகவே முன்வந்து என்னுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். வீடு, பாடசாலை என்ற நாளாந்த நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் என் வாழ்க்கையில் வன்னிக்கு வெளியே நான் வீட்டை விட்டுத் தூரப்பயணம் செல்வது இதுவே முதற்தடவை" என்று அவர் கூறினார்.
ஆனாலும் இன்னமும் அவரிடம் ஒருவித பயமும் பீதியும் கலந்த உணர்வு பற்றிக்கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. "இந்த மாணவிகளுக்கு மட்டக்களப்பில் ஒரு போட்டி நிகழ்ச்சி இருக்கிறது. அதுக்குத்தான் நான் இந்தப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டுபோறன்” என்றார்.
“நீங்கள் பஸ் கண்டக்டரிடம் தமிழில கேட்டு மட்டக்கிளப்புக்கு டிக்கெற் வாங்கேக்க எனக்கு மனசில இருந்த பயம் கொஞ்சம் போயிற்று, நீங்கள் மட்டக்களப்பு தமிழர் எண்டதால தயக்கம் போயிற்று” என்றார். மட்டக்களப்பைப் பத்தி அறிஞ்சிருக்கேனே தவிர நேரடியாகப் போய்பார்க்கல்ல” என்றும் தொடர்ந்து கூறினார். நானும் ஒப்புக்கு தலையாட்டினேன்.
என்னைப் பார்த்து நீங்கள் மட்டக்களப்பிலிருந்து வவுனியாவுக்கு வந்த விடயம்? இங்கே உறவினர்கள் இருக்கிறார்களா? வவுனியாவில் உத்தியோகம் பார்க்கிறீர்களா? அல்லது வியாபாரமா? இப்படி மூச்சு விடாமல் தன்பாட்டுக்கு கேள்விகளை அடுக்கிக்கொண்டே வந்தார்.
அந்த ஆசிரியை இன்னமும் பதற்றத்துடன்தான் இருக்கிறார் என்பதை இந்தக் கேள்விகளைக் கேட்டு அவசரமாக பதிலை அறிந்துவிட வேண்டும் என்ற ஆவலால் அவர் உந்தப்படுவதை நான் ஊகித்து அறிந்து கொண்டேன்.
நான் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கியதும் ஆசிரியை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். வவுனியாவில் “பாஸ்” என்ற ஒரு கட்டுப்பாட்டு நடைமுறை இருக்கிறதுதானே ரீச்சர் என்றேன். ஓமோம்.. அது அரச படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டுமல்ல நாங்கள் வாழும் அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதியிலும் உண்டு. “அவையளும் பாஸ் நடைமுறை வச்சிருக்கினம்” என்று அவரது ஆதங்கத்தையும் வெளியிட்டார்.
“அப்ப பின்னை பாஸ் நடைமுறையை இல்லாமலாக்கப் போகினமோ அது பெரிய காரியமப்பா” என்று அவரது ஆற்றாமை கலந்த ஏக்கத்தைக் கேள்வியாகவும்; பதிலாகவும் வெளியிட்டார் ஆசிரியை. அவர்கள் பாஸ் நடைமுறையை இல்லாமலாக்குவார்களோ தொடர்ந்து வைத்திருப்பார்களோ அதுபற்றி எனக்குத் தெரியாது ரீச்சர் ஆனால் “பாஸ்” நடைமுறைகளால் மனித நடமாட்டங்கள் எவ்வளவு அவஸ்தைக்குள்ளாகியிருக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்காகவே நான் வவுனியாவுக்கு வந்தேன் என்று கூறினேன்.
“நீங்கள் துணிஞ்ச கட்டைதான்” என்று எனக்கு ஒரு பாராட்டுச் சான்றிதழையும் அவர் தயக்கமின்றித் தந்தார். அப்பொழுது அந்த ஆசிரியையும் தாங்கள் வாழும் வன்னிப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதிலும் உள்நுளைவதிலுமுள்ள பாஸ் நடைமுறைகளை விலாவாரியாகச் சொன்னார்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அடையாள அட்டைகளைப் பிணையாக வைத்து விட்டு “பாஸ்” பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அரச கட்டுப்பாட்டில் இல்லாத வன்னியில் ஆட்களைப் பிணையாக வைத்துவிட்டுத்தான் வன்னியை விட்டு வெளிப் பிரதேசங்களுக்கு வர முடியும்.
இவ்வாறு ஆட்பிணை வைக்க முடியாத பலர் தமது நோய்களுடனேயே உழன்ற விடயங்களையும் துயரம் தாளாது சொல்லிய ஆசிரியையிடமிருந்து ஆற்றாமை கலந்த பெருமூச்சு அவரைப் புதுப்பிப்பதும் ஆறுதல்படுத்துவதுமாய் இடைக்கிடையே வந்து போனது. இவ்வாறு கட்டுப்பாட்டுப் பகுதி கட்டுப்பாடற்ற பகுதி என்று எப்பகுதியில் வாழ்ந்தாலும் அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் பல்வேறுபட்ட விடயங்களை உரையாடிக்கொண்டு வரும்போது அரை மணித்தியாலத்திற்குக் குறைவான நேரம்தான் பஸ் பயணித்திருக்கும் இராணுவ சோதனைச்சாவடி வந்தது.
காவற் சாவடி கண்ணுக்கெட்டிய தூரம் இருக்கும் இடைவெளியில் பஸ் சோதனைக்காக நிறுத்தப்படுகிறது. “ஒக்கம பஹின்ட ஒன கவுருத் வாடிவெலா இன்டபே பேஹெலா பயிங் யன்ட அத்தன செக்கரனவா” எவரும் பஸ்ஸில் அமர்ந்திருக்க முடியாது இறங்கி அங்கே சோதனை செய்யும் இடத்திற்குச் செல்லுங்கள்” என்று அவ்விடத்தில் காவலுக்கு நின்ற உத்தியோகத்தர் கூறினார்.
“நீங்கள் முந்திப் போயிடாதேயுங்கோ எனக்கு சிங்களமும் தெரியாது அவையள் ஏன் மட்டக்களப்புக்கு போறியள் எண்டு ஏதாவது கேட்டால் நான் முழுசவேணும். அதால கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கோ. உந்தப் பிள்ளைகளையும் இறக்கி கூட்டிக்கொண்டு போகவேணும்” என்றார் ஆசிரியை. அவர் வேண்டுகோள் விடுத்தாலும் விடுக்காவிட்டாலும் பதற்றத்துடன் முதன்முதலாக வெளியிடப் பயணம்செய்யும் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற முடிவை நான் எப்போதோ எடுத்திருந்தேன்.
சரி ரீச்சர் நீங்கள் பிள்ளைகளையும் இறக்கிக்கொண்டு வாங்கோ என்று கூறி நானும் அவர்களை முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் சென்றேன். ஆசிரியை ஊகித்தபடியே ஏன் மட்டக்களப்புக்கு பள்ளிக்கூடப் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று சோதனைச் சாவடியில் இருந்த சிப்பாய் கேட்க ரீச்சர் என்னைத் திரும்பிப் பார்த்து “சிங்களத்திலை சொல்லுங்கோ” என்றார்.
அவர்கள் கல்விப் போட்டி நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகிறார்கள் என்று நான் கூறினேன். அதன்பிறகு அவர்கள் கொண்டுவந்த பைகள் எல்லாம் சோதனையிடப்பட்ட பின்னர் பஸ்ஸில் ஏற அனுமதித்தார்கள் படையினர். பஸ்ஸில் ஏறி மீண்டும் பொதிகளை எல்லாம் வைத்து அமர்ந்தோம். பஸ் பயணிக்கத் தொடங்கியது. ஆசிரியை சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
“உப்பிடி இன்னம் மட்டக்களப்பு போகும் வரைக்கும் கனக்க செக் பொயின்ற்றுகள் இருக்கோ” என்று கேட்டார் ஆசிரியை. ஓம், ரீச்சர் கிட்டத்தட்ட 42 செக் பொயின்ற்றுகள் இருக்கு. அதிலே ஒன்றிரண்டு கடுமையான இடங்கள் என்றேன். ஆசிரியையின் முகம் சற்று வாட்டம் கண்டது. “அத்தனையிலும் இறங்கி நடக்க வேணுமே” என்று கேட்டார்.
ஆம் என்றேன். இப்பொழுது இன்னும் அவர் சலிப்பால் சோர்ந்து விட்டதை அவரது முகம் துல்லியமாகக் காட்டியது. சோதனை முடித்து… மீண்டும் ஏறி அமர்ந்து … அடுத்த சில நிமிடங்களில் அடுத்த சோதனைச் சாவடி… சிலவேளை ஒரு சோதனைச் சாவடி முடித்து பஸ்ஸில் ஏறி பொதிகளை வைத்துக் கொண்டு அமர்வதற்கிடையில் “முன்னால இறங்கி நடந்து போங்கோ செக் பொயின்ற் இருக்கு யாரும் இறங்காமல் இருக்க வேண்டாம் பிறகு எங்களுக்குத் திட்டுவாங்கள்” என்று பஸ் நடத்துநரும் சிப்பாயின் உதவியாளர் போல கட்டளையிடுவார்.
பஸ்ஸில் பயணித்தவர்களில் பலர் இடைக்கிடையே உள்ள பகுதிகளில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். வவுனியாவில் தொடங்கி இடைக்கிடை ஏறியவர்கள் பெரும்பாலானோர் பஸ்ஸுக்குள் இருந்து சிங்கள மொழியில் உரையாடிக் கொண்டு பயணித்ததால் “உதெல்லாம் சிங்கள ஏரியாவே” என ஆசிரியை மெல்லிய தொனியில் என்னிடம் கேட்டார்.
நான் ஆம் என்று தலையசைத்தேன். அப்பொழுது ஆசிரியை தனது குரலை இன்னும் தாழ்த்திக் கொண்டு மிகவும் ரகசியம் போல பேசத் தொடங்கினார். “சிங்களவங்கள் தங்கடை வளவுகளுக்கு எல்லை போட்டு நம்மட தமிழரைப்போல பெரிய மதில்களோ முள்ளுக் கம்பிகளோ வேலிக் கட்டைகளோ நாட்டுறதில்லைப் போல பூ மரங்களும் காய் கனி மரங்களும்தான் அவங்கட வளவு எல்லையில வளருது வளவு நிறைஞ்ச மாதிரி சாமான்கள் போட்ட போட்ட இடத்தில கிடக்குது கவனிச்சியளோ என்று ஆசிரியை தனது அவதானிப்பை ஆச்சரியமும் அர்த்தமும் கலந்த விதத்தில் வெளிப்படுத்தினார்.
ஆசிரியை அவதானம் செலுத்திய இந்த விடயம் ஏற்கெனவே எனது சிந்தனைக்கும் வந்த ஆதங்கமானபடியால் நானும்இ அதனை ஆமோதிக்கும் வகையில் “ஓம் ரீச்சர் எல்லைகள் போட்டுப் பிரிப்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்றது விளங்குது அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் மீது அவர்கள் அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதோட இயற்கைச் சூழலையும் பேணிப் பாதுகாக்கிறார்கள் என்றேன்.
அதோடு ஆசிரியை நிற்காமல் அவர் சோதனைச் சாவடிகளில் அவதானித்த இன்னொரு விடயத்தையும் இலேசாகச் சொன்னார். “அவைக்கு (சிங்களவர்களுக்கு) அடையாள அட்டை தனிச் சிங்களத்திலை கிடக்கு. நமக்கு (தமிழர்களுக்கு) தமிழிலையும் சிங்களத்திலையும் எண்டு ரெண்டு பாஷையிலயுமல்லோ கிடக்கு, அப்ப அவையள் என்ன இனம் எண்டு அடையாள அட்டையைப் பார்த்த மாத்திரத்திலே லேசாக் கண்டு பிடிப்பினமல்லோ” என்று அவரது உள்ளச்சமும் பயப் பீதியும் வெளிப்படும் விதத்தில் என்னிடம் குசுகுசுத்த குரலில் கேட்டார்.
ஆசிரியையின் கேள்வியில் மறைந்துள்ள அர்த்தத்தின் அச்சமும் ஐயமும் இன அடையாளம் ஆளுகைக்கூடாக வடிவமைக்கப்படுகின்ற ஆபத்துக்களை எனக்கு உணர வைத்தது. தேநீருக்காக பஸ்ஸை நிறுத்துமிடம் வந்தது. “அரைமணித்தியாலம் பஸ் நிக்கும்” என்று அறிவித்தலைச் செய்தார் பஸ் நடத்துனர். எல்லோரும் இறங்கி ஹோட்டலுக்குள் சென்றனர். அப்பொழுது இந்த ஆசிரியை மட்டும் பஸ்ஸை விட்டு இறங்காமல் தான் அழைத்து வந்த மாணவிகளுடன் இருந்தார்.
இது முஸ்லிம் கடையா என்று கேட்டார் ஆசிரியை. ஆம் என்று சொல்லி அவரது பதிலுக்கு எதிர்பார்க்காமல் நீங்கள் பயப்பட வேண்டாம். இது முற்றிலும் வேறுபட்ட சூழலிலுள்ள பகுதி எனவே என்னோட வந்து நீங்களும் உங்களோடு கூட வந்த மாணவிகளும் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது அந்த ஆசிரியை பஸ்ஸை விட்டுக் கீழிறங்கினார்.
அவருக்கும் அவரது பாதுகாப்பில் வந்த மாணவிகளுக்கும் நானே எனது செலவில் பகற் போசனத்தையும் இன்னும் நொறுக்குத்தீனி இனிப்புக்கள் பழ ரசங்கள் என்பனவற்றையும் வாங்கிக் கொடுத்து உபசரித்தேன். மீண்டும் பஸ் பயணத்தைத் தொடர்ந்தபோது ஏன் ரீச்சர் பஸ்ஸை விட்டு இறங்காமல் இருந்த நீங்கள் என்று கேட்டேன்.
அது ஏனோ தெரியவில்லை வேற இன ஆக்களைக் காணேக்கை கொஞ்சம் பயம்தான் என்றார் ரீச்சர். அதோடு நிற்காமல் மட்டக்களப்பின் அடுத்துவரும் ஊர்கள் அங்கு வாழும் சமூகங்கள்பற்றி அறிந்துகொள்ள ஆசிரியை ஆவலாக இருந்தார். “மட்டக்களப்பு மாவட்டத்திலை எல்லாரும் இப்ப தமிழர்கள்தானே இருக்கினம்?” என்று கேட்டார்.
“இல்ல ரீச்சர் முஸ்லிம் ஆக்களும் இருக்காங்க” “அப்ப அவங்களால நம்மட தமிழர்களுக்கு கரச்சல் இல்லையோ? ஆசிரியையின் கேள்வி. இல்லை ரீச்சர் மட்டக்களப்பில வாழ்ற தமிழர் முஸ்லிம்கள் அவங்களும் அவங்கட பாடுமாக அமைதியாக வாழ்றாங்க என்றேன்.
“முஸ்லிம் ஊர்களைத் தாண்டியே மட்டக்களப்புக்கு போகவேணும்?” என்று ஆசிரியை கேட்டார். ஆம், மூன்று ஊர்களைத் தாண்ட வேண்டும் ரெதீதென்ன ஓட்டமாவடி ஏறாவூர் என்றேன். பயமில்லையே? “அவங்கள் ஒருத்தரும் ஒண்டும் செய்யமாட்டினமே” என்று ஒருவித அச்ச உணர்வோடு கேட்டார்.
இல்லை அப்படி ஒன்றும் நடக்காது ரீச்சர் என்றேன். கடைத் தெருக்களுடன் கூடிய ஓட்டமாவடி நகரைக் கடக்கும்போது தொப்பியோடு ஆண்களும் ஹபாயா சல்வார் ஆடைகளுடன் பெண்களும் காணப்பட அது முஸ்லிம் ஊர் என்று ஆசிரியை அடையாளம் கண்டுகொண்டார். இதேபோல ஏறாவூர் முஸ்லிம் ஊரையும் ஊடறுத்துச் செல்லும்போது அங்குள்ளவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை வைத்து அது முஸ்லிம்கள் வாழும் ஊர் என அடையாளம் கண்டுகொண்டார் ஆசிரியை.
கூடவே ஏறாவூரிலுள்ள ஒரு பஸ் நிறுத்துமிடத்தில் சிலர் இறங்கும்போது அவ்விடத்தில் 1990ஆம் ஆண்டு ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களின் பெயர் பொறித்த நினைவுத் தூபியைக் கண்டு ஆசிரியை நீண்ட பெருமூச்சொன்றை விட்டு சுமார் 10 - 15 நிமிடங்கள் அமைதியாகி இருக்கும்போதே பஸ் மட்டக்களப்பை நெருங்கியது. ரீச்சர் நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது, நீங்கள பிள்ளைகளோடு பாதுகாப்பாக சென்று வாருங்கள்.
நான் மீண்டும் திரும்பி ஏறாவூருக்குப் போக வேண்டும் உங்களுக்குப் பாதுகாப்புக்காகவே மட்டக்களப்பு வரை வந்தேன் என்றேன். உங்களுக்கு ஏதாவது தேவைகள் உதவிகள் பிரச்சினைகள் என்றால் எனக்கு அறியத் தாருங்கள் நீங்கள் வவுனியாவுக்குப் போகும்போதும் உதவி தேவையென்றால் தயங்காமல் கூப்பிடுங்கள் என்றேன்.
திரும்பிப் போகும்போது களைப்படையாமல் ஏதாவது நொறுக்கு தீனியும் பானங்களும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று நான் ஒவ்வொருவருக்குமாக 100 ரூபாய் பணத்தை 4 மாணவிகளுக்கும் காகிதத்தில் இட்டுக் கொடுத்தேன். நன்றியோடு என்னை நோக்கிய ஆசிரியை எனது விலாசத்தை எழுதித் தருமாறும எப்போதாகிலும் வன்னிப் பக்கம் வந்தால் கட்டாயம் வீட்டுக்கு வருமாறும் அன்புக் கட்டளை இட்டார்.
அந்தக் கணப் பொழுதில் நான் எழுதிக் கொடுத்த ஹுஸைன் என்ற எனது பெயரையும் ஏறாவூர் என்ற விலாசத்தையும் வாசித்துப் பார்த்த ஆசிரியை அதிர்ந்தே போனார். அப்போ நீங்கள் முஸ்லிமே? என்று ஆச்சரியமாகக் கேட்கும்போதே அவரது கண்கள் கலங்கியது தெரிந்தது.
நான் வருகிறேன் ரீச்சர் என்றவுடன் அவர் கூட்டி வந்த அந்த பள்ளிப்பிள்ளைகளும் அன்பு கலந்த பார்வையில் சிறு புன்னகையுடன் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்… கையில் நான் கொடுத்த பணக் காகிதத்துடன்…… ” கதையைச் சொல்லி முடித்தவர் இந்தக் கருத்துக்களையும் முன்வைத்தார்.
நாம் இலங்கையர் என்ற சிறப்பு அடையாளத்தை பெறுவதற்கு ஒருங்கிணைப்பை கூட்டுறவை சகவாழ்வை எவ்விடத்தில் இழந்திருக்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். நல்லிணக்கத்திற்கான உள்ளுர் சூழலையும் மனிதாபிமானத்தையும் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதுவித கலாசாரத்திற்குள் நாம் இப்பொழுது வந்து நிற்கிறோம்.
அப்படிப்பட்டதொரு மனப்பாங்கு ஆபத்தானது. ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களை அயலவராகக் கொண்டிருப்தில் நாம் பெருமையடைகின்றோமா வெறுப்படைகின்றோமா? நமது சுக துக்கங்களிலும் பங்கெடுக்க ஏனைய சமூகத்தவர்களுக்கு இடமளிக்கின்றோமா? நமது வளர்ச்சியிலும் ஆக்கபூர்வச் செயற்பாடுகளிலும் பங்கெடுக்க நாம் அடுத்த சமூகத்தாரை அனுமதிக்கின்றோமா?
வர்த்தகப் பங்காளியாக ஏனைய மதத்தை, இனத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கின்றோமா? ஏனைய சமூகத்தவரோடு ஒரே வீட்டிலே வசிப்பதற்கு விரும்புகின்றோமா? என்பதையும் சிந்தித்துணர்ந்து பார்க்க வேண்டும்
வாழ்விடம், கல்விக் கூடம் வேலைத் தளம் தொழில்துறை சார்ந்த இடங்கள் பொழுது போக்கிடங்கள் சமய கலாசார பண்பாட்டு இடங்கள் இங்கெல்லாம் மற்றவர்களோடு எவ்வாறு பரிமாற்றங்களைஇ ஊடாட்டங்களை தொடர்பாடலை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதைப பற்றிச் சிந்திக்க வேண்டும்.
நமது பிள்ளைகளை இனம் சார்ந்து சமயம் சார்ந்து மொழி சார்ந்து கல்வி கற்பிக்கும் சூழல் நடைமுறைதான் தற்போதைக்கு உள்ளது. இவற்றையெல்லாம் நாம் மாற்றியமைக்க வேண்டும். இன அடையாளங்களையும் எல்லைகளையும் கடக்க வேண்டும். பாலர் வகுப்பு முதற்கொண்டு 13 ஆண்டுகள் வரை மாணவர்களை இனவாத மதவாத மொழிவாத அடிப்படையிலான பாடசாலைகளில் கற்கச் செய்து விட்டு எந்தவிதமான ஆயத்தப்படுத்தல்களும் இல்லாமல் சம்பந்தப்பட்ட மாணவனோ மாணவியோ பாடசாலையை விட்டு வெளியேறியதும் 14ஆம் வருடம் முதல் திடீரென இன ஒற்றுமையாக இருந்துகொள் என்று கூறுவதும் சகவாழ்வைப் பற்றிப் போதிப்பதும் பொருத்தமில்லாத ஒன்று. சிந்திப்போம் செயற்படுலோம்.
MWRAF நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான சமாதான ஊடகவியல் இருநாள் பயிற்சி நெறியினை தொடர்ந்து சமாதான ஊடகவியலின் அடிப்படைகளை கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
Comments (0)
Facebook Comments (0)