சர்வதேச அறபு மொழித் தினம்: இலங்கையில் அறபு மொழி வளர்ச்சிக்கு பாலமாக அமையட்டும்
எம்.எல்.பைசால் (காஷிபி)
1973ஆம் ஆண்டு ஐ.நா சபை அதன் பொது அமர்வு ஒன்றில் அறபு மொழியினை ஐ.நா சபையின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக தீர்மானித்து அதே ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதியினை சர்வதேச அறபு மொழித் தினமாகப் பிரகடனப்படுத்தி தீர்மானமும் நிறைவேற்றியது.
அறபு மொழியினை உத்தியோகபூர்வ மொழியாக அறிவிப்புச் செய்ததோடு மாத்திரம் விட்டு விடாது பல அறபு நாடுகளின் கோரிக்கையின் பிரகாரம் அம்மொழி ஐ.நா வின் தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.
இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இம்மொழியினை இன்று ஒரு நாளில் உலகின் பல பாகங்களிலும் உள்ளவர்களில் 467 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உபயோகிக்கின்றனர்.
Internet பாவனையில் உள்ள நான்கு மொழிகளில் அறபு மொழி அதிக பாவனையில் உள்ள ஒரு மொழியாகவும் பிரான்ஸ் மற்றும் ரஷ்ய மொழிகளை விட துரித வளர்ச்சி பெற்று பயன்படும் ஒரு மொழியாகவும் இது காணப்படுகிறது.
அறபு மொழி முஸ்லிம்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக உள்ளது. மார்க்க விவகார செயற்பாட்டில் இம்மொழியின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இஸ்லாமிய ஷரீஆவின் மூலாதாரங்கள் இம்மொழியில் இருப்பதும், அல் குர்ஆனின் மொழியாக இருப்பதும், இலக்கியம், வரலாறு, வைத்தியம் போன்ற பல கலைகளுக்குரிய மொழியாக இருப்பதும் முஸ்லிம்களிடம் மாத்திரம் இல்லாது ஏனையவர்களாலும் மேற்கத்தைய நாடுகளில் ஆய்வுக்குள்ளாகும் ஒரு மொழியாகவும் இது காணப்படுகின்றமையும் இதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.
இம்மொழி தனித்துவமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. உலகம் அழியும் வரை உயிர் வாழும் ஒரு மொழி, தனித்துவமான எழுத்துக்களால் வேறுபட்டுள்ள மொழி, பொருட் செறிவுள்ள சொற்களை கொண்ட மொழி, சிக்கல்கள் அற்ற தெளிவாக விளங்குவதற்கு இலகுவான மொழி, இராகம் மற்றும் எதுகை மோனை உடன் கூடிய மொழி போன்ற சிறப்பம்சங்களால் இது ஏனைய மொழிகளை விடவும் சிறப்புற்று விளங்குகிறது.
இலங்கையில் அறபு மொழி வளர்ச்சியில் அறபுக் கல்லூரிகள் பங்காற்றுகின்றன. நூற்றாண்டு கால அறபு மொழி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இங்கே காணப் படுகின்றன.
ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைகளத்தில் இதற்கான துறை உருவாக்கப்பட்டதோடு இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அறபு மொழிக்கான பீடம் அமையப் பெற்றுள்ளது வரை இதன் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இலங்கையில் உள்ள பாடசாலைகளில் அறபு மொழி ஒரு துணைப் பாடமாகவும் பின்னர் க.பொ.த.(சா/த) பிரிவில் அறபு இலக்கியம் ஒரு துணைப் பாடமாக பாடத் திட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர கலைப் பிரிவில் முதன்மைப் பாடமாகவும் இது அமையப் பெற்றுள்ளதுடன் இலங்கை பரீட்சை திணைக்களம் நடாத்தும் அஹதிய்யா தர்மாச்சாரியா பரீட்சை மற்றும் அல் ஆலிம் பரீட்சைகளிலும் பரீட்சிக்கப்படும் ஒரு பாடமாக்க கொள்ளப் படுகின்றது.
இவ்வாறான வழிமுறைகள் இலங்கையில் காணப்பட்ட போதிலும் குறிப்பிட்ட சாராரைத் தவிர இம்மொழி ஏனையவர்களை சென்றடையவில்லை.
பாடசாலைகளில் இம்மொழி கற்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் பற்றி பொறுப்பாளர்கள் சிந்திப்பதில்லை, மார்க்கம் கற்றவர்கள் மாத்திரம் தான் இம்மொழியில் பரீட்சயம் பெறவேண்டும் என்ற பிழையான அபிப்பிராயம் இங்கு நிலவுவதையும் அவதானிக்கலாம்.
இம்மொழி இலங்கை முஸ்லிம் மாணவர்களிடம் அறிமுகப் படுத்தப் படல் வேண்டும்.அதற்கான வழிமுறைகளைப் பற்றி முஸ்லிம் கல்வியலாளர்கள் சிந்தித்து செயற்படல் வேண்டும்.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக அறபு நாடுகளை நோக்கிச் செல்லும் மிகப் பெரும்பாலான இளைஞர்களுக்கு அறபு மொழியில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருப்பது அவர்களுக்கு மிகவும் துணை நிற்கும்.
இந்நிலையில் சர்வதேச அறபு மொழித் தினத்தினை மையமாகக் கொண்டு அதனை மாணவர்களிடம் அறிமுகப் படுத்தும் வேலைகளை முன்னெடுத்தல் சிறப்பாக அமையும்.
அறபுக் கல்லூரிகளிடையே இத்தினத்தினை மையமாகக்கொண்டு போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும் இலங்கை மக்களிடையே அறபு மொழியினை வளர்க்கலாம்.
Comments (0)
Facebook Comments (0)