தேர்தல் பிரசாரத்தில் தனது படங்களை பயன்படுத்த வேண்டாம்: ஜனாதிபதி

தேர்தல் பிரசாரத்தில் தனது படங்களை பயன்படுத்த வேண்டாம்: ஜனாதிபதி

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதாகவும், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதாகவும், பல்வேறு நியமனங்களை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின்  செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர - அனைத்து ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைப் பிரதானிகளுக்கு விசேட கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கடிதத்தின் பிரதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.