பலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட இணைப்பை கைவிடவும்: இலங்கை
பலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட இணைப்பை கைவிடுமாறு இலங்கை அரசாங்கம் இஸ்ரேலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கத்திடம் அழைப்பு விடுத்துள்ள சர்வதேச சமூகத்துடன் இணைந்துகொள்வதுடன், அமைதியை நோக்கிய உரையாடலைத் தொடருமாறு அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கின்றது.
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு நேற்று (16) வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது விடயம் 7: ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசம் தொடர்பான சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல் இடம்பெற்றது.
இதில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் பதில் வதிவிட பிரதிநிதியான தயானி மென்டிஸ் விசேட உரையாற்றினார். குறித்த உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தயானி மென்டிஸ்,
"1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய பிரதேசத்திலான மனித உரிமைகளின் நிலைமை தொடர்பில் சிறப்பு அறிக்கையாளர் திரு. மைக்கேல் லிங்க் முன்வைத்த அறிக்கையை இலங்கை கவனத்தில் கொள்கின்றது.
அணிசேரா இயக்கம் சார்பாக அஸர்பைஜான் வழங்கிய அறிக்கையுடன் இலங்கை தன்னையும் இணைத்துக் கொள்கின்றது. ஐக்கிய நாடுகள் சாசனம், சம்பந்தப்பட்ட சாசனங்கள் மற்றும் பாதுகாப்பு சபை, பொதுச் சபை ஆகியவற்றின் தீர்மானங்கள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களின் கடுமையான மீறலாக அமையும் இஸ்ரேலின் திட்டமிட்ட இணைப்பு தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இஸ்ரேலிய நடைமுறைகளை விசாரணை செய்வதற்கான ஐ.நா. விஷேட குழு மற்றும் சிறப்பு அறிக்கையாளர் ஆகியோர் எழுப்பியுள்ள கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.
மேலும், இந்த இணைப்புத் திட்டமானது, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் ஜோர்தான் பள்ளத்தாக்கிலும் வாழும் பலஸ்தீனியர்களின் மனித உரிமைகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்வதற்கு வழிவகுக்கும் என்றும் சிறப்பு அறிக்கையாளர் எழுப்பியுள்ள கவலைகளை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம்.
அரசு ஒன்றிற்கான பலஸ்தீன மக்களின் உரிமை மற்றும் அவர்களது பிரதேசத்திலுள்ள இயற்கை வளங்களுக்கான நியாயமான மற்றும் தவிர்க்கமுடியாத உரிமையின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை இலங்கை தொடர்ந்தும் உறுதியுடன் பேணி வருகின்றது.
பலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய மக்களின் நியாயமான மற்றும் முக்கியமான பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், முன்மொழியப்பட்ட இணைப்புத் திட்டம் நெருக்கடியை மேலும் ஆழமாக்குவதற்கும், நிலையான அமைதியை நோக்கி முன்னேறுவதற்கான பலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய மக்களின் உண்மையான நம்பிக்கையை பாதிப்படையச் செய்வதற்கும் மட்டுமே பங்களிக்கும் என இலங்கை கருதுகின்றது.
மேற்கண்ட சூழலில், சர்வதேச சட்டத்திற்கு இணங்குமாறும், திட்டமிடப்பட்ட இணைப்பைக் கைவிடுமாறும் இஸ்ரேல் அரசாங்கத்திடம் அழைப்பு விடுத்துள்ள சர்வதேச சமூகத்துடன் இலங்கை இணைந்து கொள்வதுடன், அமைதியை நோக்கிய உரையாடலைத் தொடருமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது.
பலஸ்தீன மக்களின் அரசு ஒன்றிற்கான தவிர்க்க முடியாத உரிமைகள் மற்றும் 1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் இரு அரசுகளுக்கான தீர்வை அடைந்து கொள்வது தொடர்பான ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது" என்றார்
Comments (0)
Facebook Comments (0)