"காஸிமி வீட்டுத் தொகுதியின் 50 பேர் மாயம்": வெளியான போலிச் செய்தியின் பின்னணி என்ன?
றிப்தி அலி
புத்தளம் - ரத்மல்யாய, அல் காஸிமி வீட்டுத் தொகுதியின் 50 பேர் மாயம் என ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென நாம் மேற்கொண்ட தேடலில் உறுதியானது.
"'இந்த வீட்டுத் தொகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னாரில் மரண வீடொன்றுக்கு சென்று வந்த 50 பேரைத் தேடி வருவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்" எனத் தெரிவித்து கடந்த 2020 ஏப்ரல் 9ஆம் திகதி வெளியான சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
புத்தளம் மாவட்ட பொதுச் சுகாதாரப் பணிப்பாளர் என்.சுரேஷ் என்பவரை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்ட இந்த செய்தியில், "இந்தோனேஷியாவிலிருந்து வந்திருந்த மேற்படி நபர், சுகாதாரத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு 21 நாள்களுக்குப் பின்னர் பரிசோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவர் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அவருடன் மன்னாருக்குச் சென்றவர்கள் தொடர்பில் தேடிப்பார்த்த போது, அவர்கள் அனைவரும், அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள், தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் தெரிவித்தனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
"குறித்த சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நபர் பேரூந்தொன்றில் மன்னார் சென்றதாகவும், குறித்த பேரூந்தில் சென்றவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டு வருவதாக போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என புத்தளம் - ரத்மல்யாய, அல் காஸிம் வீட்டுத் தொகுதிலுள்ள தாராபுரம் அல் - காஸிமி ஜும்ஆ மஸ்ஜித் தெரிவித்தது.
அத்துடன் இந்த செய்தியினை கடந்த 2020 ஏப்ரல் 10ஆம் திகதி மேற்குறிப்பிட்ட மஸ்ஜித் நிராகரித்துள்ளதுடன், "புத்தளம், அல் காஸிமி தொடர்பான போலிப் பிரச்சாரங்களும் உண்மை நிலையும்" எனும் தலைப்பில் குறித்த பள்ளிவாசலினால் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது. அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"குறித்த நபர் மார்ச் 16ஆம் திகதி அதிகாலை இந்தோனேசியாவிலிருந்து அல் காசிமி சிட்டியை வந்தடைந்தார். அதன் பின்னர் மார்ச் 18ஆம் திகதி காலையில் வேன் ஒன்றின் மூலம் மன்னார் தாராபுரத்திற்கு குறித்த நபரின் மைத்துனரின் இறுதிச் சடங்குக்காக தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சென்றார்.
அதேவேளை குறித்த இறுதிச் சடங்குக்காக அல் காசிமி சிட்டி பகுதியிலிருந்து சுமார் 50 பேர்களுடன் நண்பகல் 12 மணியளவில் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று நள்ளிரவில் மீண்டும் புத்தளம் திரும்பியது.
மேலும் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பேரூந்தில் சென்றவர்களின் பெயர் விபரங்கள் சுகாதார உத்தியத்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது அல் காசிமி சிட்டி பள்ளி பரிபாலன சபையினால் வீட்டு இலக்கங்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டதுடன் குறித்த நபர்களை இனங்காட்ட சகல உதவிகளையும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும் பேரூந்தில் மரண வீட்டிற்கு சென்ற நபர்கள் இன்று வரை தங்களது வீடுகளில் இருக்கின்ற போதும் உண்மைத் தன்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்கள் பரப்புவதாவது எமது ஊருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைவதுடன் தவறான விம்பத்தை ஏனைய மக்களுக்கு காட்டுவதாகவும் அமைகின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளியுடன் தொடர்புபட்ட அல் காஸிமி வீட்டுத் தொகுதியின் 50 பேர் மாயம் என்ற செய்தியினை அப்பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரியொருவர் நிராகித்துள்ளதாக புத்தளத்திலுள்ள எமது செய்தியாளரொருவர் உறுதிப்படுத்தினார்.
அத்துடன் இந்த செய்தி பிழையாக திரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)