ஊடகவியலாளர்களுக்கான NVQ சான்றிதழ் எப்போது வழங்கப்படும்?
றிப்தி அலி
"தேசிய பயிலுனர் அதிகார சபையினால் (NAITA) ஊடகவியலாளர்களுக்கு NVQ என்று அழைக்கப்படும் தேசிய தொழிற் கல்வித் தகுதி சான்றிதழ் வழங்குவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" என்கிறார் சாய்ந்தமருதினைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் நூறுல் ஹுதா உமா.
கடந்த பல வருடங்களாக பிராந்திய ஊடகவியலாளராக ஹுதா செயற்பட்டு வருகின்றார். அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழொன்றை இந்த துறையில் பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவொன்று இவரிடம் காணப்படுகின்றது.
இந்த அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய பயிலுனர் அதிகார சபையினால் கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு இவரும் விண்ணப்பித்திருந்தார்.
"எனினும் இதுவரை NVQ சான்றிதழ் வழங்கப்படவுமில்லை, அதற்கான மதிப்பீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை என ஹுதா தெரிவித்தார். "எவ்வாறாயினும் இந்த சான்றிதழ் தொடர்பான நேர்முகப் பரீட்சையொன்று கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இராஜகிரியவிலுள்ள NAITA தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதற்காக சுமார் 5,500 ரூபா செலளித்து கொழும்பு சென்று வந்தேன். அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் எந்தத் தகவலுமில்லை" என அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய ஊடகவியலாளர் ஹுதா போன்று NVQ சான்றிதழை பெறுவதற்காக விண்ணப்பித்த 150க்கு மேற்பட்;ட ஊடகவியலாளர்கள் இலவு காத்த கிளி போன்று இன்று வரை காத்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் ஆராயும் முகமாக NAITAவிற்கு கடந்த மார்ச் 3ஆம் திகதி தகவல் அறியும் விண்ணப்பமொன்றினை சமர்ப்பித்திருந்தோம். இதற்கு NAITA வின் தர விடயத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி ஆர்.எம்.பி.ஏ. சமரதிவாகரவினால் கடந்த மார்ச் 16ஆம் திகதி வழங்கப்பட்ட பதிலில் இதுவரை ஊடகவியலாளர்களுக்கான NVQ சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
"எனினும் ஊடகவியலாளர்களுக்கான NVQ சான்றிதழ் வழங்கும் செயற்திட்டம் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், இறுதி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்" என தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நசீர் அஹமட், இந்த அதிகாரசபையின் தலைவராக 2018/19ஆம் ஆண்டு காலப் பகுதியில் செயற்பட்ட போது அவரின் அறிவுறுத்தலுக்கமைய ஊடகவியலாளர்களுக்கு NVQ சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக NAITA தெரிவித்தது.
இதற்கான முன் கற்றல் அங்கீகார (RPL) விண்ணப்பம் கடந்த 2019.09.06ஆம் திகதி முதல் 2019.10.18ஆம் திகதி வரையான காலப் பகுதியில் NAITAவினால் கோரப்பட்டது.
NAITAவின் அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்ட, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியலா, பொலனறுவை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட அலுவலங்களின் ஊடாகவும், சமூக ஊடங்கள் மூலமாகவும் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
குறித்த NVQ சான்றிதழ் வழங்கலுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2019.09.27 என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அப்போதைய தவிசாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் 18.10.2019ஆம் திகதி வரை விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களின் வேண்டுகோளிற்கமைய இந்த செயற்த்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கும் NAITA, அது தொடர்பான ஆவணங்கள் எதுவுமில்லை எனத் தெரிவித்தது.
இந்த சான்றிதழிற்காக 471 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் NAITAவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் 184 பேர் மாத்திரமே கலந்துகொண்டனர்.
"இந்த NVQ சான்றிதழிற்கான இறுதி மதீப்பீட்டுப் பணிகள் தற்போது நடைபெறகின்றன. இந்த இறுதி மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டு நிலையங்கள் எதுவும் நாட்டில் இல்லை.
இதனால், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து இறுதி மதிப்பீடு மிக அவசரமாக மேற்கொள்ளப்படும்" என தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் NAITAவின் பணிப்பாளர் திருமதி சமரதிவாகர தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முன் மதிப்பீடு ஆகியவற்றிற்காக கடந்த மார்ச் 16ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 70,006.00 ரூபா நிதி செலவளிக்கப்பட்டது என NAITA தெரிவித்தது.
மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வு செயற்திட்டத்திற்காக RPL பிரிவுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், மாவட்ட முகாமையாளர்கள் மற்றும் மாவட்ட அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வானொலி ஊடகவியலாளர்களுக்கு தரம் நான்கு NVQ சான்றிதழ் வழங்குவதற்கான மதீப்பீடு கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி நடைபெற்றுள்ளது. கடந்த வருடம் NAITA வினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட சில ஊடகவியலாளர்கள், இந்த மதிப்பீட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் இந்த செயற்திட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் NAITAவின் தவிசாளர் தரங்க நளின் கம்லதினை தொடர்புகொண்டு நாம் வினவினோம். இது தொடர்பில் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
"ஊடகவியலாளர்களுக்கு NVQ சான்றிதழ் வழங்குவதற்கான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற நிலையங்கள் எதுவும் நாட்டில் இல்லை.
இதனால், குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பிரிவு எமது NAITAவின் தலைமையக்தில் ஸ்தாபிக்கப்பட்டு மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாமல், மேற்குறிப்பிட்ட ஆணைக்குழுவினால் இந்த மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பரிசோதகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் மதிப்பீடு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த மதிப்பீட்டினை சுமார் 80 பேர் இதுவரை நிறைவுசெய்துள்ளனர். எனினும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட கொவிட் முடக்கம் காரணமாக இந்த மதிப்பீட்டினை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போனது.
தற்போது கொவிட் முடக்கம் நீக்கப்பட்டுள்ளமையினால், குறித்த மதிப்பீட்டினை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளோம். எவ்வாறாயினும் இந்த வருட இறுதிக்குள் குறித்த மதிப்பீடு நிறைவுசெய்யப்பட்டு ஊடகவியலாளர்களுக்கான NVQ சான்றிதழ் நிச்சயம் வழங்கப்படும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)