நுண்கடனும் பெண்களும்:"சிக்கலில் சிக்கியோரை மீட்போம்!"
சபீர் மொஹமட்
கொழுந்து விட்டெரியும் வெயிலில்! அடை மழை! இரத்தத்தை உறிஞ்சும் கொசு! இத்தனைக்கும் மத்தியில் தமது உரிமைக்காக அம்மக்கள் தொடர்ந்தும் 55 நாட்கள் குரல் கொடுத்தார்கள்.
சாரி அணிந்தும், சல்வார் அணிந்தும், சட்டை அணிந்தும், அபாயா அணிந்தும் அனைத்து இன, மதப் பெண்களும் வந்தமர்ந்து கொள்வார்கள். நண்பகலில் தலைக்குmமேல் தகரம்! வெப்பத்தால் பெருக்கெடுக்கும் வியர்வை, சோர்வு ஆனாலும் அவர்கள் தமது எதிர்ப்புணர்வைக் கைவிடவில்லை.
இப்பெண்கள் மட்டுமல்ல நாடெங்கும் வடக்கு கிழக்கு உட்பட 17 மாவட்டங்கக்களில் எதிர்பு ஆர்பார்பாட்டம் கடந்த மாதங்களில் இடம்பெற்றன. இவ்வாறு எல்லாப் பெண்களும் கூடியது எதற்காக?
நுண்கடன் சூழ்ச்சி வலையில் இருந்து தம்மையும் தமது சந்ததிகளையும் விடுவிப்பதற்காகவே அவர்கள் ஒன்றாய்க் கூடி போராடிக்கொண்டிருந்தனர். நாடளாவிய ரீதியில் நுண்கடன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சுமார் 28 இலட்சம் பெண்களை அதிலிருந்து மீட்க வேண்டுமென ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
நுண்கடன் என்பது கிராம மட்டத்தில் வங்கியில் கடன் பெறமுடியாதவர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கடன் கொடுக்கப்படுவது அவரவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்காகும். அதாவது அவர்களின் உற்பத்தி, கைத்தொழிலை மேம்படுத்துவதற்காகும்.
“குறிப்பாக, கிராமப்புற பெண்களை ஆடு-மாடு வளர்ப்பு, சிறுவியாபாரம், மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுத்துவதன் மூலம் தங்கள் வறுமையை தாங்களாகவே ஒழித்து கொள்வதற்கு உதவுவதுதான் இதன் நோக்கம்” என்று ‘பெண்களுக்கான உலக வங்கி’(WOMENS WORLD BANKING -WWB ) என்ற அமைப்பு கூறுகிறது.
ஆனால் நுண்கடன் திட்டத்திற்கு எதிராக இலங்கையில் பெண்கள் கிளர்ந்தெழுந்து எதனால்? வறுமையை நீக்கவந்த 'கடன் வசதி' இன்று பல குடும்பங்களை வறுமைக்குள் தள்ளி வீதியில் நிறுத்தியுள்ளது. பல பெண்களின் தற்கொலைகளுக்கு காரணமாகியுள்ளது.
அதற்காக எல்லா இனப் பெண்களும் கூடிநின்று தம் பலத்தைக் காட்டினர். இந்தக் கடன் சுமையை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தினர். அதிலும் இந்த கொரோனா காலம் உலக நாடுகளே பொருளாதாரத்தை இழந்து நிற்கின்ற நிலையில் அன்றாடம் உழைத்து உண்ணும் இவர்களிடம் கடனை வசூலிக்க இந்த நுண்கடன் நிதிநிறுவனங்கள் வரிந்து கட்டிக்கொன்று நிற்கின்றன.
அரசின் அனுமதியுடன் கிராமங்கள் எங்கும் பரந்து விரிந்திருக்கும் இந்த நிதி நிறுவனங்களை அவற்றின் வட்டி கொடுப்பனவுகளை உரியமுறையில் கட்டுப்படுத் அரசு தவறியது ஏன்?
மாறிமாறி ஆட்சி பீடமேறுகின்ற சகல அரசியல்வாதிகளும் வெறுமனே தமது வாக்குப் பெட்டிகளை நிரப்ப மீன் பிடிக்கும்போது வீசுகின்ற தூண்டில் தீனிபோல்இ நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களை பயன்படுத்தியுள்ளனர். தற்போதைய அரசும் பதவிக்கு வந்து பல பௌர்ணமிகளும் அமாவாசைகளும் கடந்துள்ளன.
பதவிக்கு வருகின்ற புதிய ஜனாதிபதி ஒரே நாளிலே எமது கடன்களை நீக்குவார் என்ற நம்பிக்கையில், வாக்களித்துவிட்டு இன்னமும் விடியாத பல இரவுகளுக்குள் கடன் வாங்கிய மக்கள் விடியலுக்காய் காத்திருந்து களைத்துவிட்டனர். கடந்த வருடமும் இதே போல் தூண்டில் வீசிய இந்த அரசு காலை உணவையே மதியமும் உண்பதைப் போல ஜனாதிபதித் தேர்தலின் போது அளித்த அதே வாக்குறுதிகளைப் பொதுத் தேர்தலிலும் அளித்து விட்டு தற்போது இம்மக்களை கைகழுவி உள்ளார்கள்.
மேலும் இந்நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கம் மட்டுமே காரணமாகி விட முடியாது. கடந்த நல்லாட்சி அரசு கூட மக்களுக்கு பல நம்பிக்கை தரக்கூடிய தேர்தல் வாக்குமூலங்களை அளித்தே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். 2019 ஜனாதிபதி தேர்தலின் போது எதிர் கட்சியில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவும் தமது தேர்தல் பிரச்சாரங்களின் போது தான் ஆட்சிக்கு வந்தால் நுண்கடன் நெருக்கடிக்கான ஒரு நிரந்தர தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனாலும் 2015ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தில் தான் ஒரு அமைச்சராக இருந்த போதும் பற்றி எரிந்துகொண்டிருந்த நுண்கடன் நெருப்பின் மீது ஒரு வாளி நீர் கூட ஊற்றவில்லை என்பதே யதார்த்தம்.
இலங்கையில் நுண்கடன் நெருக்கடியானது புற்றுநோய் போல் நாடு முழுதும் வியாபிக்க தொடங்கியது 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னரே ஆகும். இது பற்றி 2019.10.31 ஆம் திகதி வெளிவந்த ராவய பத்திரிகையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"இலங்கையில் நுண் கடன் திட்டத்தில் ஏற்பட்ட பாரிய திருப்புமுனைகளாக 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும்இ 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தையும் குறிப்பிடலாம். சுனாமி அனர்த்தத்தின் பின் சர்வதேச அளவில் இலங்கைக்கு பாரியளவில் நிதி கிடைத்தது. அந்நிதியினைக் கொண்டு பல்வேறு நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் குறித்த பணம் தவறான முறையில் உபயோகிக்கப்பட்டமை தொடர்பில் பல அறிக்கைகளும் உள்ளன"
கண்ணுக்கெட்டிய தொலைவில் தேர்தல்கள் எதுவும் இல்லாமையால் நுண்கடன் நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கின்ற அதிலும் இந்தக் கொரோனாக் காலத்தில் தவிக்கும் மக்களைப்பற்றி பேசுவதற்கோ அவர்கள் பக்கம் நின்று கொள்ளவோ யாரும் இல்லை.
அவை தனிநபர் பிரச்சினைகளாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அதனால்தான் இந்த பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டனர். ஆனால் நிதி நிறுவனங்கள் இந்த சூழலையும் பயன்படுத்தி அமைதியாக முன்பை விட சூட்சமமான முறையில் கிராமப்புற மக்களை குறிப்பாக பெண்களை இலக்கு வைத்து வேட்டையில் இறங்குகிறார்கள்.
நிதி நிறுவனங்கள் வலை விரிப்பது அரசியல்வாதிகளுக்கோ பணம் படைத்தவர்களுக்கோ அல்ல. எனவே இதனுள் சிக்கித்தவித்து வேதனையை உணர்ந்த பெண்களை பாதுகாப்பதற்காக ஒரு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தனர்.
2000 ஆம் ஆண்டுகளில் விவசாய கடன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டமானது ஆட்சியில் இருந்த சந்திரிகா அம்மையாரின் அரசையே உலுக்கியது. அப்போதைய அரசை அதிரவைத்த அந்த போராட்டங்கள் நிகழ்ந்த போர்க்களம் ஹிகுரக்கொட அரசசபை மண்டபம். இன்று இல்லத்தரசிகளின் உயிரினை பலியெடுத்துக்கொண்டுள்ள நுண்கடன் பொறியினை எதிர்த்துப்போராட தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும் போராட்டத்தினை முன்னின்று வழிநடத்துகின்ற வழிகாட்டியும், அன்று விவசாய கடனுக்கு எதிராக குரல் கொடுத்த கௌடுள்ள ஜயதிஸ்ஸ என்றழைக்கப்படுகின்ற முற்போக்கு விவசாய கூட்டமைப்பின் தலைவர் ஜயதிஸ்ஸவே ஆகும்.
மேலும் இப்பெண்கள் தெரிவு செய்த இடம் அதே ஹிகுரக்கொட அரச சபை மண்டபம். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதளவில் அந்த சத்தியாகிரக போராட்டம் தற்காலிகமாக இடை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்கள் முகம் கொடுத்து வந்த இன்னல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
தனிநபர்களாக நாம் பெண்களின் அனுபவங்களை பெறுவதற்காக பயணித்தோம். பொலன்னறுவ, சுங்காவிலவிற்கு சென்றது நோன்பு காலத்திலேயாகும். சுங்காவில பெரிய பள்ளிவாயலருகே செல்லும்போது மாலை நேரமாகிவிட்டதால் பள்ளிக்கு கஞ்சினை பெற ஓரிருவர் வந்துகொண்டிருந்தனர்.
அதனிடையே பள்ளியினுள் கதைத்துக் கொண்டிருந்த ஊர் பெரியவர்கள் சிலரை அணுகி நாம் அங்கே சென்றதன் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தினோம். அதாவது "நுண் கடன் வாங்கி பின்னர் அதனை கட்டிக் கொள்ள முடியாமல் நெருக்கடிக்குள்ளாகி தவிக்கின்ற மக்கள் பற்றிய தகவல் அறிய வந்துள்ளோம்".
எனினும் நாம் நினைத்ததைவிட காரியம் கடினம் என்பதனை அவர்களுடைய முக பாவனையிலும் பதில்களில் இருந்தும் அறிய முடிந்தது. அங்கிருந்த ஒருவர் "நாம் ஊருக்கு கடன் கொடுக்க வருபவர்களை அனுமதிப்பதில்லை, அவர்கள் வந்தால் மறுகணம் வந்த வழியே திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்றார்.
இவ்வாறு பதிலளிப்பதற்கு இருமுறை தயங்கியபோது தான் ஒரு விடயம் பற்றி தெளிவானது. அதுதான் இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வட்டி என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகும். வாங்கவோ கொடுக்கவோ ஏன் சாட்சியாக கூட கையெழுத்திடவே முடியாத அந்த வட்டியுடன் கூடிய கடனையே அவ்வூர் மக்கள் வாங்கி அவதிப்படுகின்றார்கள்.
"நானும் ஒரு நோன்பாளி தான், காலையில் ஒரு யோகட்டை மட்டுமே உண்டு நாள் முழுதும் கடன் வாங்கி கஸ்டப்படுகின்ற மக்களைத்தேடி பொலநறுவை பூராக அலைகின்றேன். தெரியாத்தனமாக கடன் வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கட்டி கொண்டு பல பெண்களும் கஸ்டப்படுகின்றார்கள்.
அவர்களைப் பற்றிய சரியான தகவல்கள் உரிய அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் சென்றடைந்தால் அன்றி ஒருபோதும் அவர்களுக்கு தீர்வுகள் கிடைக்காது" என்பதை அவர்களுக்கு தெளிவு படுத்திய பின்னரே அவ்வூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி அவரை சந்திக்கும்படி கூறினார்கள்.
அப்பெண்ணின் குடிலோ பள்ளியில் இருந்து கூப்பிடு தூரத்திலேயே அமைந்துள்ளது. பள்ளிக்கு மிக அருகில் உள்ள இப்பெண்ணின் நிலைமையே இவ்வாறு என்றால், ஊர் பள்ளி நிர்வாகத்தின் கண்ணில் மண்ணைத் தூவி எத்தனை நிதிநிறுவனங்கள் இவ்வூர் மக்களை ஏமாற்றி கடன் கொடுத்து இருப்பார்கள்.
குறித்த பெண் எங்களிடம் வேண்டிக்கொண்ட ஒரேயொரு விடயம் தனது அடையாளத்தினை வெளிப்படுத்த வேண்டாம் என்பது மட்டுமே. பெயர் குறிப்பிட விரும்பாத இந்தப் பெண் எம்முடன் உரையாடுகையில், தமது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஒரு நிதிநிறுவனத்திடம் மட்டுமல்ல, பல்வேறு நுண் நிதி நிறுவனங்களில் இருந்தும் கடன் வாங்கியுள்ளமை தெரிய வந்தது.
அவரது கணவர் ஒரு கட்டடத் தொழிலாளி, அவ்வப்போது கணவருக்கு ஏற்படுகின்ற உடல் நலக்குறைவு காரணமாக அவர்களின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததுள்ளது. இதற்கிடையில் சுயதொழில் ஒன்றினை ஆரம்பிப்பதற்காக நிதி தேவைப்பட்டபோது புகழ் பெற்ற முன்னணி நிதி நிறுவனங்களின் உதவியைப் பெறுவது அவர்களுக்கு கடினமானதாக இருந்து வந்துள்து.
இந்நிலையிலேயே நுண் கடன் நிறுவனங்கள் இவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் வந்துள்ளன. அதற்காக அவர்கள் கோரியது பெண்கள் குழுக்களை அமைப்பது மட்டுமேயாகும். மதங்களும் நம்பிக்கைகளும் எவ்வளவுதான் தடைகளை இட்டிருந்தாலும் இவ்வாறு பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை இனங்காண்பதென்பது அந்நிறுவனங்களுக்கு இலகுவானதொரு விடயமாகவே இருந்ததுள்ளது. அவ்வாற பெண்களை ஒன்றிணைத்து ஒருகுழுவாக்கி ஒவ்வொருவரினதும் நம்பிக்கையை அவர்களுக்கு பொறுப்பாக்கி கடன்களை வழங்கியுள்ளனர்.
பெண்களும் தாம் குழுவாக இணைந்து பணம்பெறுவது இலகுவாக உள்ளது. தமது குடும்ப கஸ்டத்திற்கு இது உதவி என நினைத்து வட்டிகள் பற்றி எந்த அறிவும் இல்லாது வலைக்குள் சிக்கியுள்ளனர். ஒருவரிடம் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு நிதி நிறுவனத்திடம் கடன்பெற்ற கதைகளும் உண்டு.
சுங்காவிலையில் மாத்திரமன்றி முழு இலங்கையிலும் கடன் வாங்கியவர்களின் நிலைமை இதுதான். கொரோனா காரணமாக கடன் வாங்கிய முக்கால்வாசிப் பேர் தொழிலின்றி திண்டாடுகிறார்கள். ஏனெனில் நிரந்தரமான வருமானம் ஈட்டுகின்றன எவருக்கும் நுன் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை.
நிமல்சிரி விசேட தேவையுள்ள ஒருவர். பிறப்பிலேயே அவர் அப்படித்தான் என நீங்கள் தவறாக நினைத்துவிட வேண்டாம். குடும்ப சுமையை தன் தோள் மீது சுமந்து நிமல்சிரி 2000ஆம் ஆண்டு வெளிநாடு சென்றிருக்கிறார். ஆனால் 2007 ஆம் ஆண்டு எதிர்பாராத தாக்குதல் ஒன்றிற்குள்ளாகி ஊனமுற்ற நிலையில் இலங்கை வந்திருக்கிறார்.
"இவரை இலங்கைக்கு கொண்டு வரும்போது மயக்கமடைந்த நிலையிலேயே இருந்தார். சிறிது காலத்திற்க பிறகு, இந்த நிலைமையை கண்ட மனைவியும் பிள்ளைகளும் இவரை விட்டு பிரிந்துவிட்டனர். நிமல்சிரியின் தாய் சந்திராவதிதான் கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சையளித்து ஓரளவிற்கு அவரைக் காப்பாற்றி வருகின்றார்."என்றார் நிமல்சிரியின் மாமி பிரேமாவதி.
முஸ்லிம் பெண்ணான பிரேமாவதியின் கணவர் இறந்துவிட்டடார். சரளமாக சிங்கள மொழியை பேச முடிந்த பிரேமாவதி தலையினை மறைக்கும் துணியைப் போடாவிட்டால் ஒரு முஸ்லீம் பெண் என்பதை இனம் காணவே முடியாது. அவருடைய மூத்த மகன் ஒரு மௌலவி. இரண்டாவது மகனும் அண்ணனையே பின்தொடர்கிறார். இந்த நிலையில் தனது உறவினரான நிமல்சிரியின் தாய் பற்றி மேலும் கூறினார்.
"நிமல்சிரியின் மேலதிக மருத்துவ செலவுகளுக்காக மாடொன்றை வளர்க்க கடன் வாங்கினார். ஆனால் வாங்கி ஒரு சில நாட்களில் அந்த மாடு இறந்து விட்டது. கடன் கட்ட வழியில்லை. கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி பணம் கேட்டு வீடு தேடிவந்து ஏசிவிட்டு போவார்கள்" என்றார்.
இப்பொழுதெல்லாம் சந்திராவதி தனது வயதான குழந்தையை கட்டிலிலே வைத்துவிட்டு ஆடு மேய்க்க போய்விடுகிறார். மாலையில் வயலுக்குச் செல்கிறார். இரவிலே வீட்டு வேலைகளையும் செய்து சிறுகச் சிறுக பணம் சேமித்து தனது பிள்ளைக்கு வைத்தியம் செய்கிறார். கடனையும் அடைக்கிறார்.
முஸ்லிம் சிங்கள என வேறுபாடுகாட்டாத இம்மக்களிடம் மனிதபிமான பிணைப்பு மட்மே காணப்படுகிறது. சுங்காவில் சிங்களவர்கள் தமிழை சரளமாகவும் முஸ்லீம்கள் சிங்களத்தை சரளமாகவும் கதைக்கிறார்கள். சில சமயங்களில் பக்கத்திலுள்ள முஸ்லீம் வீடுகளில் இருந்து சந்திராவதிக்கும் மகனுக்கும் உணவு கிடைக்கும்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே இவர்களை மருந்துக்காக அனுராதபுரம் வரை அழைத்துச் செல்வார்கள். எந்த வேறுபாடுமற்ற இவர்களிடம் நுண்கடனும் எந்த வேறுபாடுமற்று கழுத்தை நெரிக்கிறது.
சுங்காவிலவிலிருந்து பொலன்னறுவை நோக்கி 15 கி.மீ தூரத்தில் தம்பாலா காணப்படுகிறது. தம்பலா இப்போது ஒரு மீன்பிடி கிராமம். ஆனால் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்த மிகப்பெரிய முஸ்லிம் விவசாய கிராமங்களுள் தம்பாலையும் ஒன்று.
கிட்டத்தட்ட 1,500 ஹெக்டேர் அதாவது 6 சதுர கிலோமீட்டர் அளவிற்கு அம்மக்கள் விவசாயம் செய்து நாட்டு மக்களுக்கு உணவளித்துள்ளார்கள். ஆனால் தற்போது அம்மக்களின் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்பின்னர் இம்மக்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்கள்.
எனினும் வாவி அமைந்திருப்பது சரணாலயத்திற்கு உள்ளே என்பதால் வனஜீவராசிகள் திணைக்களம் அதனையும் தடுத்தது. தம்பாலா விவசாயிகளால் இப்போது அந்தப்பகுதிக்கு செல்லவே முடியாதுள்ளது. அவ்வாறு சென்றால் வனஜீவராசிகள் திணைக்களம் இவர்களை கைது செய்து பிணையின்றி சிறைச்சாலையில் அடைத்து விடுவார்கள்.
அவ்வாறு வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்ற இம்மக்களும் இன்றளவில் அதீத வட்டிக்கு ஏமாற்றப்பட்டு நுண் கடன் வலையில் சிக்கி தவிக்கின்றார்கள். முன்னர் விவசாயம் செய்து பின் வெளிநாடு சென்று அதன் பின்னர் தாயகம் திரும்பிய பரீதா உம்மா கடன் வாங்கியது தனது சுகயீனமுற்றிருந்த குழந்தையை காப்பாற்றுவதற்கே ஆகும்.
அவர் மேலும் கூறுகையில் "முதலில் நாங்கள் கடன் வாங்கும்போது இதன் பாரதூரம் பற்றி; அறிந்திருக்கவில்லை. கொஞ்ச காலம் செல்லும்போதுதான் இதன் அதீத வட்டியினை நாம் உணர்ந்தோம். அதிக கடன் சுமையில் நாம் திண்டாடிக் கொண்டிருக்கும் போது இனிமேல் கடன் கட்ட தேவையில்லை என பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இருந்து தகவல் வந்தது. அதன்பின் நாங்கள் பணம் கட்டவில்லை.
பின் திடீரென மீண்டும் மீதி பணத்தை கட்டுமாறு கடிதம் வரத்தொடங்கியது. ஓரிரு மாதங்கள் தாமதமானால் கொழும்பில் இருந்தும் அழைப்புகள் வரும். உரியமுறையில் பணம் கட்டாவிட்டால் எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக அவர்கள் கூறுவார்கள்.
எம்மிடம் உள்ள அனைத்தையுமே நாங்கள் தற்போது இழந்துள்ளோம். இனிமேலும் இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை" என சிகிச்சை பலனின்றி இறந்து போன தனது குழந்தையின் புகைப்படத்தை கையில் வைத்த வண்ணம் பரீதா உம்மா கண்ணீருடன் கூறினார்.
இவ்வாறு கடன் எடுத்த காரணங்களே அழிந்த நிலையில் கடன் இன்னும் முடியாதுள்ளது. இலகுவாக ஒரு தொகைப்பணம் கிடைக்கிறது. அதைவைத்து ஏதாவது செய்யலாம் என நினைத்து இந்த ஏழை மக்கள் விழுந்தது படுபாதாளத்தில்! இதற்குள் அவர்களைத் தள்ளியதில் அரசுக்குதான் பெரும் பொறுப்புண்டு.
நிதி நிறுவனங்களின் வட்டிவீதங்கள் பற்றியும் நிதி நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு பற்றியும் அரசின் பாராமுகமே; பிரதான காரணம்; என பலரும் கூறிவரும் நிலையில், எல்லாப் பெண்களும் இணைந்து இதற்க குரல் கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அது பொறியில் அகப்பட்ட பெண்களை மீட்பதற்கு உதவ வேண்டும்!.
Comments (0)
Facebook Comments (0)