உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்களுக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் மூலம் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் கடும் போக்குத் தன்மையை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக சுயாதீனமான முஸ்லிம் புத்திஜீவிகளின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் கடும் போக்குத் தன்மையை தளர்த்துவதற்கான பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது புனர்வாழ்வுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைத் தெரிவுசெய்யும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான சட்ட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென தெரிவு செய்யப்பட்டவர்களை பயங்கரவாத விசாரணைப்பிரிவும் குற்றவியல் விசாரணைப் பிரிவும் இணைந்து, சட்ட ஏற்பாடுகள் ஊடாக புனர்வாழ்வுத் திட்டத்துக்கு இடமாற்றம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கையில், "ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் கடும்போக்கு தன்மையை தளர்த்தும் திட்டத்துக்காக தெரிவு செய்யப்படுபவர்கள் என்னிடம் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
புனர்வாழ்வு குழு அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. அவர்கள் பின்பு சமூகத்துக்குள் விடுவிக்கப்படுவார்கள். உள்ளூரைச் சேர்ந்த எந்த கட்சியையும் அரசியலையும் சேராத சுயாதீனமான முஸ்லிம் புத்திஜீவிகள் இந்த திட்டத்துக்கு உதவி புரிவதற்காக இணைத்து கொள்ளப்படுவார்கள்.
இது முற்றும் முழுவதும் புதிய புனர்வாழ்வளிக்கும் திட்டமாகும். வேறுபாடான திட்டமாகும். இது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டமை போன்ற திட்டமில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் போரிட்டார்கள்.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டார்கள். இந்த திட்டத்திலிருந்தும் புதிய திட்டம் வேறுபட்டதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் மார்க்க புத்திஜீவிகளின் ஒத்துழைப்புகளும் பெற்றுக்கொள்ளப்படும்.
12,500 தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டனர். போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களும் புனர்வாழ்வளிக்கப்படுகிறார்கள்"என்றார்.
Vidivelli
Comments (0)
Facebook Comments (0)