மாகாண சபை முறை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும்: சஜித்

மாகாண சபை முறை தற்போதுள்ள  நிலையிலேயே இருக்க வேண்டும்: சஜித்

"பதின்மூன்றாவது அரசியல் அமைப்புக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். மாகாணசபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு" என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போது எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) ஆரம்பித்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், அதற்கான யாப்பு உருவாக்கப்பட்டு சம்மேளனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ள கூட்டுக் கட்சிகளுக்கும் ஒன்றாய் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக  யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய தரப்பினர்களும் தமது நிலைப்பாடுகளை ஜனநாயக ரீதியாக முன்வைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்ட முற்போக்கான என்னப்பாட்டில் கூட்டணிக்கான யாப்பு வரைவுத் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தை மதிக்கும் சகலரும் இதில் இணைந்து கொண்டு செயற்பட முடியுமான சூழலை இதன் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பிரவேசம் நிலைத்தல் தன்மை கொண்ட ஏற்பாடாகும்.

குறுகிய கால சுய நல தேவைகளுக்காக உருவாக்ப்பட்ட அரசியல் வேலைத் திட்டமாகும்.கட்சியின் யாப்பு முழுமையாக ஐனநாயக ரீதியான ஏற்பாடுகளை உள்வாங்கிய முற்போக்கு தன்மை வாய்ந்த யாப்பாகும்.

தகுதி மற்றும் ஆற்றல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பொரும்பான்மையினரின் ஆதரவிலும் ஒப்புதளிலும் தான் பதவி நிலை நியமனங்கள் வழங்கப்படும்.

நியமனங்களுடன் பதவிகளுக்கான வேலைத் திட்டங்களும் வழங்கப்படும்.வெறும் நாம ரீதியான பதவிகள் நபர்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படமாட்டாது. உலக நாடுகள் மற்றும் நாட்டில் பரவும் கொரோனா தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அனைத்து பத்திரிகைகளுக்கும் இந்த கொரோனா தொற்று பெரும் சவாலாக காணப்படுகின்றது. பத்திரிகைகளின் விற்பனைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

எவ்வித நிபந்தனைகளுமில்லாது நாம் அதற்கு ஆதரவு வழங்குகின்றோம். ஊடகங்களை நிராகரித்துவிட்டு பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதை நாம் ஏற்றுக்கொள்ளவி்லலை.  பாராளுமன்ற அமர்வுகளில் ஊடங்களை அனுமதிப்பதற்காக நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

ஊடகங்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகளை நாங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்க தயங்க மாட்டோம். எமது கட்சி உருவாகி ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில், நாம் ஜனநாயக ரீதியிலான யாப்பொன்றை உருவாக்கியுள்ளோம். 75 பேரடங்கிய மத்திய செயற்குழு அமையவுள்ளது.

இந்த மத்திய செயற்குழுவில் தலைவரால் 50 உறுப்பினர்களின் பெயர்களை பிரேரிக்க முடியும். ஆனாலும் பிரேரிப்பதைக்கூட செற்குழுவிடமே விட்டுள்ளேன். ஏனென்றால் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு உறுப்பினர்களின் தகமைகளையும் பரிசீலிக்க வேண்டும.

மத்திய குழுவின் ஒவ்வொரு நிர்வாக உறுப்பினர்களுக்கு வெவ்வேறு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிப்பதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய இடத்தையளிப்பதே எமது கட்சியின் கொள்கை.

எமது கட்சியைப் பொறுத்தவரையில் ஆயுட்கால தலைவர் என்று எந்த பதவியும் இல்லை. தலைமைத்துவத்தை மாற்ற முடியும். எமது கட்சி உறுதியானது. தற்காலிகமான கட்சி அல்ல. நீண்ட தூர பயணத்திற்காகவும் தூர நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.

கூட்டமைப்பு அமைக்கும் போது எவர் வந்தாலும் நாம் இணைத்துக்கொள்வோம். அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி வந்தாலும் நாம் அதனையும் இணைத்துக்கொள்வோம். இது எமது புதிய அரசியல் பயணம். ஜனநாயகத்தை நோக்கிய பயணம். எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம்.

13 ஆவது அரசியல் அமைப்புக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். வெளிநாடுகளுக்கு சென்று 13 பிளஸ் என்று சொல்லிக்கொண்டு இங்கு அதற்கு எதிரான கருத்துக்களை சொல்லும் நிலையில் நாமில்லை. 13 ஆவது அரசியலமைப்பால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த மாகாண சபை முறைமை இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.  அதுவும் தற்போதுள்ள நிலையிலேயே மாகாண சபை முறைமைகள் இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.

இதேவேளை, மாகாண சபை முறையை பலப்படுத்த வேண்டுமே தவிர, அதனை பலவீனப்படுத்த எத்தனிக்கக்கூடாது. சிலர் மாகாண சபை முறையை வலுப்படுத்தாது பலவீனப்படுத்துகின்றனர்" என்றார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இங்கு  கருத்து தெரிவிக்கையில்,

"நாட்டின் இனப்பிரச்சினைக்கு கடந்த 72 வருட காலமாகவே எவ்வித அரசியல் தீர்வும் வழங்கப்படவில்லை. அதுவும் ஜே.ஆர். ஜெயவர்தனவே மாகாண சபை முறை மூலம் தீர்வொன்றை வழங்கியிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் அதில் ஒரு உறுப்பினராக இருந்தேன். ஏனவே மாகாண சபை முறைமையை பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்" என்றார்.

இந்நிகழ்வில் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.