இலங்கையில் இந்தியாவின் 73வது குடியரசு தின கொண்டாட்டங்கள்

 இலங்கையில் இந்தியாவின் 73வது குடியரசு தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 73வது குடியரசு தினம் இன்று (26) புதன்கிழமை உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது.

உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் மூலமாக நாள் முழுவதும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணம் அனுஷ்டிக்கப்படும்.

உயிர் தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்திய உயர் ஸ்தானிகர் அவர்களின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

இந்திய ஜனாதிபதியின் செய்தியின் முக்கிய குறிப்புக்களும் உயர் ஸ்தானிகரினால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் விசேட வீடியோ செய்தி ஒன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சபையோர் மத்தியில் திரையிடப்பட்டது.

தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

கிட்டத்தட்ட 10 இந்திய மாணவர்கள் கல்வி கற்றுவரும் இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின நிகழ்வுகளிலும் இந்நாளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொள்ளவுள்ளார்.

அந்நிகழ்வுகளின்போது புத்த பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கைக்குரிய மகா சங்கத்தினரால் விசேட பிரார்த்தனைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நண்பர்களுக்காக மாலை விசேட வரவேற்பு உபசாரம் ஒன்றும் இந்திய
இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. உலகளவில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 73வது குடியரசு தின நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ்வை முன்னிட்டு  ஜனவரி 26ஆம் திகதி முதல்  பெப்ரவரி 4ஆம் திகதி வரையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

பாரிய கலாசார நிகழ்வு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாளி வளாகத்தில் இரவீந்திரநாத் தாகூரின் சிலையினை திறந்து வைத்தல், வர்த்தக ஊக்குவிப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இத்தருணத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயமும் பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை
அனுஷ்டித்துள்ளன.