தப்லீக் பணிக்காக வந்த இந்தோனேஷியர்களுக்கு மதம்சார் சுற்றுல்லா எனக் கூறியே வீசாவே பெறப்பட்டுள்ளது
எப். அய்னா
தப்லீக் பணிகள் தொடர்பில் நுவரெலியா பள்ளிவாசலில் இருந்த போது கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு இந்தோனேஷியர்களும் மர்க்கஸ் இஸ்லாமிய நிலையத்தின் பொறுப்பில் இலங்கைக்கு மதம்சார் சுற்றுல்லாவை முன்னெடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வீசா நீடிப்புக்கு முன் அறிவித்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட எட்டு இந்தோனேஷியர்கள் தொடர்பிலும், அவர்களது பெயர், கடவுச்சீட்டு இலக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதியே மர்கஸ் இஸ்லாமிய நிலையத்தினால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றின் மூலம் அனைத்து விடயங்களும் முன்வைக்கப்பட்டே வீசா பெறப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் இவர்கள் சன்மார்க்க சுற்றுல்லாவிலேயே வருவதாக குறிப்பிட்டு அதற்காவே வீசா பெறப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர்கள் நுவரெலியா அல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலில் வந்திருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக உரிய அனுமதிகளோடு நாட்டுக்குள் வந்துள்ள இந்தக் குழுவினர் தொடர்பில் விசாரணையாளர்கள் எனும் ரீதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் எந்த தகவல் பரிமாற்றங்களையும் செய்து அவர்களது விபரங்களை சரி பார்க்கவில்லை என்பது பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கை ஊடாகத் தெரியவந்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)