யுனிசெப்பின் இலங்கைக்கான புதிய பிரதிநிதி - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

யுனிசெப்பின் இலங்கைக்கான புதிய பிரதிநிதி - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர்கள் அவசர நிதியத்தின் (யுனிசெஃப்) இலங்கைக்கான புதிய பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தனது நற்சான்றுகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் நேற்று (05) திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.

நற்சான்றுகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் குணவர்தன, 1950 களின் முற்பகுதியில் இருந்து சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில் இலங்கையுடனான யுனிசெப்பின் ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தார்.

இலங்கையில் யுனிசெஃப் மேற்கொண்டுள்ள சிறப்பான பணிகளையும், குறிப்பாக இலங்கைச் சிறார்களை எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தியை நோக்கிய மாற்றத்தின் முகவர்களாக மாற்றியமைக்கும் முகமாக மேம்படுத்துவதற்கும், கல்வியறிவூட்டுவதற்கும் மற்றும் செயற்படுத்துவதற்குமான அதன் முயற்சிகளையும் அமைச்சர் குணவர்தன பாராட்டினார்.

யுனிசெப்பின் கொவிட்-19க்கான பிரதிபலிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார். குழந்தைப் பருவம், நடுத்தர குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் என வகைப்படுத்தப்பட்ட ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியின் கட்டங்களை சாதகமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட யுனிசெப்பின் சிறுவர் மைய அணுகுமுறையை விரிவாகக் கூறிய யுனிசெப்பின் நாட்டிற்கான பிரதிநிதி, நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை, குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாக இணைக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் யுனிசெஃப் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புவதாக அடிக்கோடிட்டுக் காட்டினார்.