தென் கிழக்கு பல்கலை உப வேந்தராக றமீஸ் கடமைகளை பொறுப்பேற்பு
-நூருல் ஹுதா உமர்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று (09) திங்கட்கிழமை பதவியேற்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் என்பது சிறப்பம்சம்.
மாணவராக இருந்து, உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதியாக இறுதியாக கடமையாற்றியிருந்தார்.
சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் இள வயதில் (43 வயது) பல்கலைக்கழக உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். கொரோனா சூழ்நிலை காரணமாக குறித்த சில பேரவை உறுப்பினர்களும், பல்கலைக்கழக மூத்த நிர்வாகிகள், பீடாதிபதிகள், சில முக்கிய பேராசிரியர்கள் மட்டுமே இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய புதிய உப வேந்தர்,
"இந்தப் பல்கலைக்கழகத்தினை தலைமையேற்று வழிநடத்துவதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு என்னை ஆசிர்வதித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அதேவேளை, என்மீது நம்பிக்கைகொண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தராக என்னை நியமித்துள்ள, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
இவ்வேளையில் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் அவர்களையும், முன்னைய உப வேந்தர்களையும் கல்விமான்களையும் நிருவாகிகளையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.
எமது தாய்நாட்டினதும் இந்தப் பிராந்தியத்தினதும் வளர்ச்சியினை நோக்காகக் கொண்டு ஜனாதிபதி வகுத்திருக்கின்ற உயர் கல்விக் கொள்கையினை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
ஜனாதிபதி தொழிற் சந்தைக்கு பொருந்தக்கூடிய அறிவினையும் ஆற்றலையும் கொண்ட பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றார். எமது பல்கலைக்கழகத்தில் அதனை சாத்தியமாக்குவதற்கு நாம் முழு மூச்சுடன் செயற்பட வேண்டும். மேலும் பொறுப்புமிக்க பிரஜைகளாகவும் எதிர்காலத்தின் தலைவர்களாகவும் அவர்கள் மிளிர வேண்டும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
எனவேதான் எமது மாணவச் செல்வங்களை அத்தகைய இலக்கினை நோக்கி அழைத்துச் செல்வதாக எமது அனைவரினதும் பணி அமைய வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
இருபத்தியோராம் நுாற்றாண்டின் சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய ஆற்றலுள்ள பட்டதாரிகளை இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து உருவாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பொன்று எம்மீது சுமத்தப்பட்டுள்ளது.
உலகில் ஏற்பட்டுவருகின்ற புதிய விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப எமது பட்டதாரிகளை தயார்படுத்த வேண்டியுள்ளது. எமது பட்டதாரிகள் மத்தியில் புதிய அறிவினையும் ஆற்றல்களையும் விருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது.
அதற்காக நாம் மருத்துவத்துறை உள்ளிட்ட புதிய பீடங்களைத் தாபித்து புதிய பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை, கற்கைநெறிகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதன் மூலமே எமது பட்டதாரிகளை தொழிற்சந்தைக்கு ஏற்றவர்களாக உருவாக்க முடியும் என நான் நம்புகின்றேன்.
எமது பல்கலைக்கழகத்தின் தரத்தினைக் கூட்டி பூகோளத் தரப்படுத்தலுக்குள் எமது பல்கலைக்கழகத்தினை முன்நகர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதிலும் குறிப்பாக, எமது பல்கலைக்கழகத்தினை இந்நாட்டினதும் பிராந்தியத்தினதும் அபிவிருத்திற்குப் பங்காற்றக்கூடிய புத்தாக்க ஆய்வினை மேற்கொள்ளக்கூடிய, தரம்வாய்ந்த கல்வியினை வழங்கக்கூடிய முன்னணி உயர் கல்வி நிறுவனம் ஒன்றாக மாற்றவேண்டிய தேவையுமுள்ளது.
இந்தப் பல்கலைக்கழத்தின் மூலம் பல்லினப் பண்பாட்டிற்குள் தாய் நாட்டினை நேசிக்கும், அதன் வளர்ச்சிக்குப் பங்களிக்கக் இளைய தலைமுறையினர் உருவாக வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
ஆகவேதான் அந்தப் பாதையில் நாம் நடந்து செல்வதற்கு எமது பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் இன்றியமையாதது. அதனை எமது பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு ஊழியர்களும் எனக்கு வழங்குவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
இந்த விடயங்களை பேசுகின்றபோது, எமது பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் அவர்களை அண்மையில் நான் வீடு தேடிச் சென்ற ஞாபகம் எனக்கு வருகிறது.
அவ்விஜயத்தின் போது பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் எனக்கு பின்வரும் அறிவுரையினைக் கூறினார். "நீங்கள் கற்ற பல்கலைக்கழகத்திலிருந்து அப்பல்கலைக்கழகத்திற்கே நீங்கள் ஓர் உப வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒரு சொத்து. நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் தரத்தினை உயர்த்துவதுடன் அது மூழ்கிப் போவதற்கு ஒருபொழுதும் இடமளிக்காதீர்கள்" இந்த அறிவுடைமைமிக்க வார்த்தைகளையே அவர் என்னிடம் கூறினார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பொறுப்பேற்ற பின்னர், எமது நிருவாகத்தில் பிரதேசவாதம், கட்சிவாதம், குழுவாதம் அல்லது பல்கலைக்கழகத்தின் ஆரோக்கியத்திற்கு கேடான ஏனைய எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்போவதில்லை.
இந்தப் பல்கலைக்கழகத்தில் எவ்வடிவிலான ஒழுங்கீனமான நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கும் அனுமதியளிக்க முடியாது. அதனை என்மீது சுமத்தப்பட்ட மிக முக்கியமான ஒரு பொறுப்பாக நான் கருதுகின்றேன்.
எமது நிருவாகத்தின் கீழ் இந்தப் பல்கலைக்கழகத்தினை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்த்துள்ளேன். அதற்கான கதவு எமது நிருவாகத்தில் திறந்திருக்கும். மிகவும் முக்கியமாக, இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு ஊழியர்களும் தமது கடமைகளை சட்டத்திற்கு கட்டுப்பட்டு செவ்வனே நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளது.
அவ்வாறு எமது ஊழியர்கள் ஒவ்வொருவரும் தமது கடமைகளை ஆற்றுவார்கள் என நான் நம்புகின்றேன். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிரூபங்கள், தாபன விதிக்கோவை, அரசாங்க அறிவுறுத்தல்கள் போன்றவை எமக்கு வழிகாட்டியாக அமைகின்றன. அவற்றை முறையாக பின்பற்றியொழுகி சிறந்ததொரு நிருவாகத்தினை எமது பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
எனவேதான், உங்கள் ஒவ்வொருவரினதும் பதவி நிலைகளைக் கருத்திற்கொள்ளாமல் இந்தப் பல்கலைக்கழகத்தினைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு உயர் கல்வி கேந்திர நிலையமாக எமது பல்கலைக்கழகத்தினை மாற்றம் பெறச்செய்வதற்கும், இந்தப் பல்கலைக்கழகத்தினை மற்றுமொரு வளர்ச்சிக் கட்டத்திற்கு முன்நகர்த்திச் செல்வதற்கும் உங்கள் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் கேட்கின்றேன்.
இது எமது பல்கலைக்கழகம். இது உங்களுடைய பல்கலைக்கழகம் - இது எம் எல்லோருடைய பல்கலைக்கழகம். எனவேதான் இப் பல்கலைக்கழகத்தினை இறைவனுடைய உதவியால் நாம் எல்லோரும் சேர்ந்து கட்டியெழுப்புவோம். இறுதியாக இந்த வைபத்தினை ஒழுங்கு செய்த எமது பல்கலைக்கழக நிருவாகத்தினருக்கு எனது நன்றியினைக் கூறி விடைபெறுகின்றேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)