வெறுப்பு பேச்சினை கட்டுப்படுத்த முடியுமா?
றிப்தி அலி
"எமது நாட்டில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்பு பேச்சுகள் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவை அதிகமாக இடம்பெறுகின்றன.
இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் பல்வேறு விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்" என்கிறார் சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி ராஜநாயகம்.
ஒரு நபர் அல்லது குழு ஒன்றினைக் குறிப்பிட்டு அவர்கள் அவர்களாக இருப்பதன் அடிப்படையில் வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் அவர்களின் மதம், இனம், தேசியம், குலம், நிறம், பரம்பரை, பால்நிலை அல்லது ஏனைய அடையாளக் காரணிகளின் அடிப்படையில் தாக்குதல் தொடுக்கும் வகையில் அமைந்த இழிவான அல்லது பாகுபாடுமிக்க மொழியாடலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பேச்சு, எழுத்து அல்லது நடத்தை வடிவில் அமைந்த எந்தவொரு தொடர்பாடலும் வெறுப்புப் பேச்சாகும் என வெறுப்பு பேச்சு மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மூலோபயம் செயற்பாட்டு திட்டம் தெரிவித்தது.
சமூக ஊடகங்களின் வருகையினை அடுத்தே இந்த வெறுப்பு பேச்சு சமூகத்தில் அதிகம் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்கள் வாயிலாகவே இந்த வெறுப்பு பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரே சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வெறுப்பு பேச்சு எமது நாட்டினை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியிலேயே பேஸ்புக் இலங்கை அரசியலில் அதிக தாக்கம் செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் அரசியல், அபிவிருத்தி செயற்பாடுகள் போன்று பல்வேறு செயற்திட்டங்களை தீர்மானிக்கும் சக்தியாக பேஸ்புக் மாறியது. இவ்வாறான நிலையிலேயே வெறுப்பு பேச்சுக்களும் அதிகமாக பேஸ்புக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக எமது நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும், ஏனைய இனத்தவர்களை தாக்கும் வகையிலான வெறுப்பு பேச்சுக்களை பேஸ்புக்கில் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனாலேயே 2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் திகன பிரதேசத்திலும் 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் குருநாகல் மாவட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முiறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பல உயிர்ப் பலிகள் ஏற்பட்டதுடன், பல கோடி பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.
எனினும் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், பேஸ்புக்கின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டமையினால் இதற்காக அந்த நிறுவனம் கடந்த மே மாதம் பகிரங்க மன்னிப்பு கோரியது.
அதாவது இரண்டு வருடங்களின் பின்னரே இந்த மன்னிப்பு கோரப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும். எனினும் பேஸ்புக் நிறுவனத்தினர் மன்னிப்புக் கோருவது இது முதற் தடவையல்ல. மியன்மாரிலும் இனங்களிடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்திற்கு குறித்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சம்பவங்களினை அடிப்படையாக வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் பேஸ்புக் ஊடாக வெறுப்பு பேச்சு முன்னெடுக்கப்படும் என ஏற்கவே அனுமானிக்க கூடியதாக இருந்தது.
இதற்கமைய, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் மற்றும் ர்யளாவயப புநநெசயவழைn ஆகியன இணைந்து ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் சமூக ஊடக கண்காணிப்பினை முன்னெடுத்தன.
இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பிலான அறிக்கையொன்றினை இரு அமைப்புக்களும் இணைந்து கடந்த ஜுலை 24ஆம் திகதி வெளியிட்டிருந்தன. அதன் ஒரு பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது:
"கடந்த வருடம் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் 828 பதிவுகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிக்கையிட்டோம். இதில் 10.96 சதவீதமான 90 பதிவுகளை மாத்திரமே பேஸ்புகினால் நீக்கப்பட்டது.
இவற்றினை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனத்திற்கு சுமார் 60 நாட்களுக்குள் மேல் தேவைப்பட்டது. தேர்தல் சட்டம் மற்றும் பேஸ்புக்கின் சமூக தரம் ஆகியவற்றினை மீறும் வகையிலான இந்த அனைத்து பதிவுகளும் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பதிவிடப்பட்டிருந்தது".
இது போன்று நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையத்தினர் சமூக ஊடகங்களையும் விசேடமாக கண்காணித்தனர். இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையத்தினரினால் இலங்கையில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, "1,900 தீங்கு விளைவிக்கக்கூடிய இணையத்தள பதிவுகளை பிரஜைகள் கண்காணிப்பு குழுவினால் இனங்காணப்பட்டது. இதில் சில பதிவுகள் 200,000 தொடக்கம் 2 மில்லியன் வரையான பின்பற்றுனர்களைக் கொண்ட பேஸ்புக் பக்கங்களின் நிர்வாகிகளினால் பதிவேற்றம் அல்லது மீள் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது" என இந்த கண்காணிப்பு நடவடிக்கையினை அடுத்து சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையம் தெரிவித்தது.
"இதில் சில பதிவுகளை மாத்திரமே பேஸ்புக் நீக்கியுள்ளது. அத்துடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இறுதி 48 மணி நேர காலப் பகுதியில் பேஸ்புக்கில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதில் கட்டணம் செலுத்திய பிரச்சாரமும் உள்ளடக்கப்பட்டிருந்து' எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அவதானிப்புகளை அடுத்து சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில் சமூக ஊடகங்கள் தொடர்பில் இரண்டு சிபாரிசுகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவிற்கும் பிரதான சமூக ஊடக நிறுவனங்களிற்கும் இடையில் உத்தியோகபூர்வ தொடர்பாடலை ஏற்படுத்தல், தனியுரிமை மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தினை அமுல்படுத்தல் ஆகியனவே இந்த சிபாரிசுகளாகும்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த சிபாரிசுகள் இன்றியமையாததொன்றாகும். எனினும் கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையத்தினரினால் இந்த சிபாரிசுகள் வெளியிடப்பட்ட போதிலும் இதுவரை அமுல்படுத்தப்படதாக தெரியவில்லை.
இவ்வாறான சூழ்நிலையிலேயே எமது நாடு பாராளுமன்ற தேர்தலொன்றை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி சந்திக்கவுள்ளது. இதற்கான பிரச்சார நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்ட நிலையினை அடைந்துள்ளது.
"எனினும், பெரும்பாலான வேட்பாளர்கள் வெறுப்பினைத் தூண்டும் வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக' தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) தெரிவித்தது.
இந்த பாராளுமன்ற தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் வெறுப்பு பேச்சு குறைவாக காணப்பட்ட போதிலும் தற்போது மிக அதிகமாக காணப்படுகின்றது என கண்காணிப்பு ஊஆநுஏ இன் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
"இந்த கொவிட் - 19 நோய் பரவலை விட வேகமாக வெறுப்பு பேச்சு பரப்பப்படுகின்றது. இதனால் 1,000 விரும்பத்தகாத செயற்பாடுகளை உருவாக்குவதற்கு ஒரு வெறுப்பு பேச்சு போதும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"பாராளுமன்ற தேர்தல் காலப் பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் அபே ஜன பலய ஆகிய இரண்டு கட்சிகளினாலுமே இந்த வெறுப்பு பேச்சு அதிகமாக முன்னெடுக்கப்படுவதாக" மஞ்சுள கூறினார்.
"ஒரு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே ஏற்பட்டுள்ள விருப்பு வாக்கு போட்டிக்காகவும் இந்த வெறுப்பு பேச்சு முன்னெடுக்கப்படுவதை அவதனிக்க கூடியதாக உள்ளதாக"அவர் தெரிவித்தார்.
வெறுப்பு பேச்சு தொடர்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அவதானமாக இருப்பதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்போம் என்றார்.
இந்த வெறுப்பு பேச்சுக்களினை சமய மற்றம் சிவில் சமூகத் தலைவர்களே கட்டுப்படுத்த வேண்டும். எனினும் அவர்களினாலேயே வெறுப்பு பேச்சு முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்கும் போது மிகக் கவலையாக உள்ளது என CMEV இன் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் கூறினார்.
இதேவேளை, "வெறுப்பு பேச்சு என்பது புதிய விடயமொன்றல்ல. அரசியலின் ஒரு பகுதியான இது நீண்ட காலமாக காணப்படுகின்றது. எனினும் சமூக ஊடகங்களின் வருகையினை அடுத்து அதிகம் பேசப்படுகின்றது" என களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், பௌத்த கற்கைகளுக்கான வல்பொல ராகுல நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான கல்கானந்த தம்மானந்த தேரர் கூறினார்.
"இந்த வெறுப்பு பேச்சு அனர்த்தமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். வெறுப்பு பேச்சின் ஊடாக சாதாரன மக்களை இனம், மதம் என்று பிரிக்கப்படுகின்றனர்" என அவர் குறிப்பிட்டார்.
"வெறுப்பு பேச்சு தேர்தல் காலங்களிலே அதிகமாக காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணைக்குழு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலினை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது பேஸ்புக்கின் ஊடாகவே பரவலாக முன்னெடுக்கப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக தேர்தல் ஆணைக்கழுவும் பேஸ்புக் நிறுவனமும் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
"எனினும், குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் இதுவரை எழுத்து மூலமான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை" என சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஆய்வாளருமான அமந்த பெரேரா குற்றஞ்சாட்டினார்.
"வாய்மொழி மூலமான ஒப்பந்தத்திற்கமைவாகவே இரண்டு அமைப்புக்களும் இணைந்து செயற்படுகின்றன. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட ரீதியான வகையிலே. குறித்த அமைப்புக்கள் செயற்பட வேண்டும்" என அவர் கூறினார்.
வெறுப்பு பேச்சு தொடர்பான அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு பேஸ்புக்கிற்கு சமர்ப்பிக்கின்ற போதிலும் அது தொடர்பில் போதுமான நடவடிக்கைகள் இதுவரை அந்த நிறுவனத்தினால் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேர்தல் காலப் பகுதியில் வெறுப்பு பேச்சு அதிகமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய செயற்பாடாகும் என அதன் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹுல் தெரிவித்தார்.
"வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனினும் ஐஊஊPசு சட்டத்தின் கீழே வெறுப்பு பேச்சுக்கு எதிரான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ளவதாக" அவர் குறிப்பிட்டார்.
இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழு சிபாரிசுகளை வழங்கியுள்ளது என ஆணையாளர் ஹுல் கூறினார்.
பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனத்துடன் இணைந்து உத்தியோகபூர்வமற்ற முறையில் தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. எனினும் அவர்களின் செயற்பாடு மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதையே அவதானிக்க முடிகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் இலங்கையில் பேஸ்புக் மூலமான வெறுப்புப் பேச்சுக்களை கட்டுப்படுத்துவது என்பது சவால்மிக்க ஒன்றாகவே மாறியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம், தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒன்றுபட்டு திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.
அதன் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். இன்றேல் அடுத்து வரும் தேர்தல்களிலும் வெறுப்புப் பேச்சு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதை இப்போதே உறுதிபடக் கூறமுடியும்.
Comments (0)
Facebook Comments (0)