மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னரான ஆரம்ப அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய வங்கியினை மீண்டுமொரு முறை வழிநடாத்துவதனைப் பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதுடன் இப்பொறுப்பினை ஏற்பதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினையும் உறுதிப்பாட்டினையும் மிகவும் தாழ்மையுடன் நினைவு கூறுகின்றேன்.
ஆயிரக்கணக்கான எமது நாட்டு மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நல்வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படாது எனவும் பொருளாதாரம் தொடர்ந்து உறுதிப்பாட்டினை நோக்கி வழிநடத்தப்படும் எனவும் நான் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கின்றேன்.
மத்திய வங்கியில் உள்ள சிறந்த ஆளணியின் நெருக்கமான ஒத்துழைப்பினையும் அனைத்து ஆர்வலர்களிடமிருந்தும் ஆதரவையும் எதிர்பார்ப்பதோடு நான் அவர்களுடன் ஆரம்ப கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவுள்ளேன்.
அரசாங்கம், வங்கியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், கடன் வழங்குநர்கள், கடன்பெறுநர்கள், முதலீட்டாளர்கள், அபிவிருத்தியாளர்கள், பணி வழங்குநர்கள், கைத்தொழில் வியாபாரங்கள், பரிவர்த்தனை நிலையங்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மிக முக்கியமாக, இலங்கை மக்கள் பொருளாதார உறுதிப்பாட்டினை உணர வேண்டும். அப்போது தான் தேவையற்ற அச்சம் நீங்கப்பெறுவதுடன் பாதகமான எதிர்பார்க்கைகள் அதிகரிக்கப்படாதுமிருக்கும்.
அக்குறிக்கோளினை அடைய, குறிப்பாக தற்போதைய நேரத்தைப் போன்ற கொந்தளிப்பான நேரங்களில் மத்திய வங்கி அனைத்து பொருளாதார ஆர்வலர்களுக்கும் தெளிவானதும் உறுதியானதுமான வழிகாட்டலை வழங்க வேண்டும்.
ஆதலால், எனது பார்வையின் கீழ் மத்திய வங்கியின் முதன்மையானதும் அவசரமானதுமான முன்னுரிமையானது விரும்பத்தக்க பாதையில் இலங்கையின் பேரண்ட பொருளாதார அடிப்படைகளின் நகர்வு தொடர்பில் தெளிவினை வழங்குவதன் மூலம் நிதியியல் துறையில் உறுதிப்பாட்டினை ஏற்படுத்துவதாகும்.
அவ் இலக்கினை நோக்கிச் செல்வதில், மத்திய வங்கி அக்குறிக்கோளினை நோக்கிய அதன் சுய அர்ப்பணிப்பினைப் பிரதிபலிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகவிருப்பதனால் குறுங்கால வழிகாட்டல் வடிவிலான கொள்கைத் தொகுப்பொன்றினை அறிவிப்பதுடன் அது சகல ஆர்வலர்களினாலும் பின்பற்றக் கூடியதாகவிருக்கும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)