எமது வர்த்தகம் - அடுத்தது என்ன?
எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர்
(பணிப்பாளர், சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம், காத்தான்குடி )
இலங்கை ஒரு பல்லின சமூக நாடு. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என வித்திசமான அடையாளங்களோடு எப்படி நாம் வாழ்கிறோமோ அதேபோல் நமக்கே உரிய தனித்துவ வருமான மூலங்களையும் நாம் கொண்டிருக்கிறோம்.
சிங்கள சமூகம் ‘கூடுதலாக’ அரச உத்தியோகங்களிலும் பாதுகாப்புக் கட்டமைப்புக்களில் தொழில் புரிவதன் மூலமும் தமது ஜீவனோபாயத்தை தேடிக் கொள்கிறது. தமிழ் சமூகம் மிகக் கூடுதலாக அரச உத்தியோகங்களில் தங்கியிருக்கிறது.
ஒரு காலத்தில் விவசாயத்தில் கூடுதலாக தங்கியிருந்த இலங்கை முஸ்லிம்கள், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையினர், முப்பது வருடகால இனப்பிரச்சினையின் விளைவால் அந்த வருமான மூலத்தினை இழக்க வேண்டி ஏற்பட்டது.
‘வியாபாரத்திலேயே நாம் திறன் உள்ளவர்கள்’ என்ற அடிப்படையில் எமது வருமான மார்க்கத்தின் அடுத்த தெரிவு மீளவும் வியாபாரமாய் மாறத்தொடங்கியது. இலங்கையில் பாரிய தொழில் நிறுவனங்களை நிறுவக் கூடிய சக்தி எம்மிடம் இருக்கவில்லை. ‘நடுத்தர’ வியாபாரங்களையே பரவலாக நிறுவினோம். அதில் வெற்றிபெறத் தொடங்கினோம்.
இலங்கையின் முக்கிய நகரங்கள் எங்கும் நமது வியாபாரங்கள் வியாபித்தன. ஆனால், சில இனவாத சக்திகளின் திட்டமிட்ட ‘முஸ்லிம் வியாபார வெறுப்பு’ நடவடிக்கைகள் எமது அந்த ஜீவநோபாய மூலத்தையும் கேள்விக் குறிக்குள்ளாக்கத் தொடங்கின.
இந்நிலைமையில்தான் இப்போது எமது வியாபாரங்களின் மேல் இன்னுமொரு அடி விழுந்து கொண்டிருக்கிறது. கொரோனா வடிவில் இம்முறை வந்திருக்கின்ற இந்த பாரிய சவால் எமது வியாபார முயற்சிகளை எங்கு கொண்டுபோய் விடும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை. எமது சகோதரர்கள் சிலர் செய்து கொண்டிருந்த ஒரு சில ‘பாரிய தொழில் முயற்சிகள்’ மீளமுடியாத பாதாளத்தை நோக்கி செல்லத் தொடங்கியிருக்கின்றன. நடுத்தர வியாபார நிறுவனங்கள் திணறத் தொடங்கியிருக்கின்றன. அநேகமான சிறு வியாபாரிகள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய இந்நிலைமை நம்மை நம்பிக்கை இளக்கச்செய்து விடக்கூடாது. இப்போதுதான் நாம் நமது வியாபாரத்தின் மீதான நம்பிக்கையையும் அதன் வளர்ச்சிக்கான எமது அர்ப்பணிப்பையும் கூட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது ஸ்திரமான பொருளாதாரம் என்பது எமது சமூகத்தின் இருப்போடு நேரடியாக சம்மந்தப்பட்ட விடயம். ஒரு கோணத்தில், எமது பொருளாதாரம் அல்லது வியாபாரம்தான் இலங்கையில் எனைய சமூகங்களோடு நாம் ஒன்றி வாழ்வதற்கும் உதவிக் கொண்டிருக்கிறது.
இன்றுள்ள நிலைமைகளில் எமக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு வகையான ஓய்வை...
1. எம்மையும் எமது பொருளாதார மூலங்களையும், வியாபாரங்களையும், வியாபாரங்களின் தன்மைகளையும் ஒரு முறை மீளாய்வு செய்வதற்கும், திட்டமிடல்களைச் செய்வதற்கும், அவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின் அவற்றை யோசிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. எமது வர்த்தக நடவடிக்கைகளைப் பொறுத்தளவில் எமக்கு முன்னே நிறைய அனுபவங்களும் படிப்பினைகளும் இருந்திருக்கின்றன. சில வேளைகளில் தோல்விகளைக் கூட சந்தித்திருக்கிறோம். நிறையவே சவால்களை சந்தித்திருக்கிறோம். இந்நிலைகள் ஏன் எமக்கு வந்தன?
அவற்றிலிருந்து நாம் எவ்வாறு விடுபட்டிருக்க முடியும்? வருகிற காலங்களில் எவ்வாறு எமது வியாபாரங்களிலுள்ள சிக்கல்களை நிவர்த்திக்கப் போகிறோம்? இப்போது இருக்கின்ற நிலை மாறுகின்றபோது எமது வியாபாரத்தை எவ்வாறு மீளக் கட்டமைப்பது அல்லது கொண்டு செல்வது போன்ற விடயங்களை அலசி ஆராய்வதற்கு எமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த ஓய்வு நேரத்தை செலவழிக்க வேண்டும்.
3. எமது வர்த்தகத்திலிருந்து கிடைத்த வருமானத்திற்கு ஏற்ப எமது செலவுகள் அமைந்திருந்தனவா? நாம் எந்தளவு சிக்கனத்தன்மையை கடைப்பிடித்தோம்? எமது வர்த்தகம் சில வேளைகளில் எமது ஆடம்பரத்திற்கும் துணை போய் இருக்கிறதா? அப்படியாயின் அது எமது வர்த்தகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு என்ன? வங்கிகளோடு எமக்கிருந்த தொடர்பு எமது வர்த்தகத்தில் ஏற்படுத்திய தாக்கம் நேர்த் தன்மையானதா அல்லது மாற்றமானதா? எமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லப் வர்த்தகம்சார் அறிவு எது? அவர்களுக்கு நாம் விட்டுச்செல்லப் போகும் மூலதனம் எது?
இறக்குமதி வர்த்தகத்தைப் போல ஏற்றுமதி வர்த்தகத்திலும் எம்மால் ஈடுபடமுடியுமா? இலங்கையில் இருக்கின்ற சுற்றுலா துறை சார் சாதகத்தன்மைகள் என்ன? வெளிநாடுகளில் வர்த்தகங்களை உருவாக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் என்ன என்பது பற்றியெல்லாம் நாம் யோசிக்க, திட்டமிட வேண்டியுள்ளது.
இப்போதைக்கு இந்தக் கட்டுரை இது தொடர்பில் உங்களை சிந்திக்க வைக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் நிலைமைகள் சீரடைகின்றபோது இவ்விடயம் தொடர்பான தொடர் கருத்தரங்குகள், வழிகாட்டல்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்ய எமது சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம் எதிர்பார்க்கிறது.
‘எதுவும் கடந்து போகும்!’ பயம் வேண்டாம். நிதானமாக சிந்திப்போம். அடுத்த கட்டத்திற்கு எம்மை தயார் படுத்திக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் எமக்கு இன்னும் இருக்கிறது.
(கட்டுரையாளரை 0777563496 என்ற இலக்கத்தில் whatsapp மூலமாக அல்லது jawahir25@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்.)
Comments (0)
Facebook Comments (0)