குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்திற்கு சவூதியின் நிதியை பயன்படுத்த அனுமதி
றிப்தி அலி
தற்போது கைவிடப்பட்டுள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பால நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை சவூதி நிதியத்தின் கடனுதவியில் இருந்து பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடிவெள்ளிக்குத் தெரிவித்தன.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை சவூதி நிதியத்தினால் நிதி அமைச்சின் கீழுள்ள வெளிநாட்டு வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பதுளை - செங்கலடி வீதியின் நிர்மணத்திற்காக சவூதி நிதியத்தினால் வழங்கப்பட்ட கடனுதவியில் மிகுதியாகவுள்ள 10.5 மில்லியன் அமெரிக்க டொலரினை குறிஞ்சாக்கேணி பால நிர்மாணப் பணிக்கு பயன்படுத்த சவூதி நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்தி நிதியினை பயன்படுத்துவதற்கான அனுமதியினை கோரி கடந்த ஜுன் 21ஆம் திகதி வெளிநாட்டு வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை கடிதமொன்றினை சவூதி நிதியத்திற்கு அனுப்பியிருந்தார்.
சவூதி நிதியத்தின் அனுமதியினை உத்தியோகபூர்வமாக பெறுவதற்காக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் - கஹ்டானி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மயாதுன்ன ஆகியோர் பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பால நிர்மாணப் பணிகள் காரணமாக தற்காலிகமாக நடத்தப்பட்ட இழுவைப் படகு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி கவிழ்ந்து வீழ்ந்தமையினால் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)