மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்
சீனாவின்வுஹான் என்ற இடத்தில் அமைந்துள்ள கடலுணவுச் சந்தையிலிருந்து தோன்றியுள்ளதாக நம்பப்படும் புதிய வகை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மத்திய நகரான வுஹான் நகரில் இந்தத் தொற்றின் காரணமாக சீனாவில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அதிகமான தொற்றுக்கள் அண்மித்த தினங்களில் பதிவாகியுள்ளன. சந்திரப் புதுவருடப் பண்டிகைக்காக மில்லியன் கணக்கான மக்கள் பயணித்து வரும் நிலையில் இவ் வைரஸ் பரவல் தொடர்பில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. சந்திரப் புதுவருடப் பண்டிகை வெள்ளிக்கிழமை (இன்று) ஆரம்பமாகிறது.
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
சாதாரண தடிமன் தொடக்கம் மத்திய கிழக்கு சுவாச நோய் (மேர்ஸ்) மற்றும் கடுமையான சுவாச நோய் (சார்ஸ்) ஈரான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தினைச் சேர்ந்ததே இந்த கொரோனா வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையே தொற்றக்கூடியவையாகும். உதாரணமாக சார்ஸ் புனுகுப் பூனையிலிருந்து மனிதனுக்கு தொற்றும் வைரஸாகும், அதேபோன்று மேர்ஸ் ஒரு வகை ஒட்டகத்திலிலிருந்து மனிதனுக்குத் தொற்றுவதாகும்.
நன்கறியப்பட்ட பல்வேறு கொரோனா வைரஸ்கள் மிருகங்களுக்கிடையே பரவியபோதிலும் இது வரை மனிதர்களுக்குத் தொற்றவில்லை. புதிய வகை கொரோனா வைரஸ்கள் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி சீன அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டன.
தற்போது அவற்றிற்கு 2019nCoV எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு இதற்கு முன்னர் மனிதர்களில் இது கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதர்களுக்கிடையே இத் தொற்று ஏற்புடுகின்றது என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் இது தொடர்பில் குறுகிய தகவல்களே வெளியாகியுள்ளன.
அதன் அறிகுறிகள் எவை?
இந்த வைரஸ் தொற்று ஏற்படுமானால் காய்ச்சல், இருமல், குறுகிய சுவாசம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளடங்கலான அறிகுறிகள் காணப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில கடுமையான சந்தர்ப்பங்களில் நியூமோனியா, பாரதூரமான சுவாசப் பிரச்சினை, சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் மரணம் கூட ஏற்படும்.
எந்தளவு உயிராபத்து மிக்கது?
சீனாவில் உருவாகி 2002 – 2003 காலப் பகுதியில் உலகம் முழுவதிலும் பரவி சுமார் 800 பேரைக் கொன்ற சார்ஸ் போன்ற ஏனைய வகை கொரோனா வைரஸ் போன்று உயிராபத்தை விளைவிக்கக் கூடியதல்ல என சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாரிய அளவில் பரவாத மேர்ஸ் மிகவும் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. இத் தொற்று ஏற்பட்டவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழந்துள்ளனர்.
எங்கு அதிகமாக இத்தொற்று பதிவாகியுள்ளது?
பெரும்பாலும் சீனாவில் அதிகமாக இத்தொற்று பதிவாகியுள்ளது. குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஹுபெயி மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்த மாகாணத்தின் தலைநகரே வுஹுன் ஆகும். இப் பகுதியிலிருந்து 571 தொற்றுக்கள் பதிவாகியும் உள்ளன.
சீனாவிற்கு அப்பால், தாய்லாந்திலிருந்து நான்கு நோயாளிகளும் தென் கொரியா, தாய்வான், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு நோயாளியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றில் வுஹான் பிரதேசத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது அண்மையில் அங்கு சென்று வந்தவர்களாகவோ இருக்கின்றனர்.
பரவலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது?
இந்த புதிய வைரஸுக்கு இது வரை தடுப்பு மருந்துகள் எவையும் கிடையாது.
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சீன அதிகாரிகள் வுஹான் பகுதிக்கான போக்குவரத்தை தடை செய்துள்ளது. விமானப் போக்குவரத்துக்கள் மற்றும் புகையிரதப் போக்குவரத்துக்கள் ஆகியன இடைநிறுத்தப்பட்டுள்ளன. விசேட காரணங்கள் இருந்தாலன்றி வெளியேற வேண்டாம் எனவும் பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
காலை 10 மணிக்கு (02:00 ஜீ.எம்.ரி) நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, தொற்றுநோய் பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவது மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதாகும் என வைரஸ் தொடர்பான நகரத்தின் மத்திய விஷேட கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளதாக அரசாங்க தொலைக்காட்சியான சி.சி.டி.வி தெரிவித்துள்ளது.
சந்திர புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக சீன அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர், குறித்த புத்தாண்டு வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பமாவதோடு நாட்டின் 1.4 பில்லியன் மக்களில் பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணங்களை மேற்கொள்வர்.
ஜப்பான், ஹொங்கொங், தாய்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசியா நாடுகள் முழுவதிலும் உள்ள விமான நிலைய அதிகாரிகள் வுஹானில் இருந்துவரும் பயணிகளை தீவிரமாக நோய்ப் பரிசோதனைக்குள்ளாக்கி வருகின்றனர்.
வுஹானில் இருந்து வரும் விமானங்களை ஐரோப்பாவில் மேம்படுத்தப்பட்ட வகையில் கண்காணிப்புக்குட்படுத்தவுள்ளதாக ஐக்கிய இராச்சியம் மற்றும் இத்தாலி அமெரிக்கா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில் ருமேனியாவும் ரஷ்யாவும் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்காவிலுள்ள சில விமான நிலையங்களும் சோதனைகளை ஆரம்பித்துள்ளன.
எங்கிருந்து ஆரம்பமானது?
வைரஸின் தோற்றம் எங்கிருந்து இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்த சீன சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். வனவிலங்கள் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படும் வுஹானில் உள்ள ஒரு கடல் உணவுச் சந்தையில் இருந்து வந்தது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலங்குகள் அங்கு காணப்பட்டமை இதற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோயாளியிடமிருந்து நோயாளிக்கு சுவாசம் மூலம் பரவியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. நாட்டில் 15 மருத்துவ ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வைரஸினால் சுகாதாரப் பணியாளர்கள் நோய்வாய்ப்படும் நிலை காணப்படுவதால் வைத்தியசாலைகளில் வேகமாகப் பரவும் ஆபத்து காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்தது என்ன?
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் உலகளாவிய பொதுச் சுகாதார அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்துவது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.
எம்.ஐ.அப்துல் நஸார்
Comments (0)
Facebook Comments (0)