உலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல்
2020 ஜனவரி 24 ஆம் திகதி உலக கல்வி தினத்தை உலகம் கொண்டாடுகிறது. மனித நலனையும், நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் அடைவதில் கல்வியின் முக்கியத்துவத்தை கௌரவிக்குமுகமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இவ்வாண்டின் கல்வி தினம் கல்வியையும் அதனைக் கற்றலையும் மனிதகுலத்தின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க வளமாக நிலைநிறுத்துகிறது. அத்தோடு, அடிப்படை உரிமைக்கும் பொது நன்மைக்குமான அதன் வகிபாகத்தை மீள் உறுதிப்படுத்துகிறது.
அந்த வகையில் நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை இது செயற்படுத்துகிறது. இது ‘அனைவருக்கும் சமமானதும் தரமானதுமான கல்வி மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வி’ என்ற இலக்கினுள் அடங்குகிறது.
2020 நிகழ்ச்சி நிரலில் கல்வியை வழிநடத்த ஐ.நா.வுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் அடிப்படையில், யுனெஸ்கோ அதனுடைய வளங்களைப் பயன்படுத்தி, கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான பங்காளர்களுடன் இணைந்து உலகெங்கிலும் இத்தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் கல்வியால் மக்களை வளப்படுத்துவதிலும், பூகோளத்தைப் பாதுகாத்தலிலும், சுபீட்சத்தைக் கட்டியெழுப்புவதிலும், அமைதியை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
2020 ஆம் ஆண்டின் கருப்பொருள் ‘மக்கள், பூகோளம், சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல் என்பதாகும். கல்வியின் ஒருங்கிணைந்த தன்மை, அதன் மனிதநேய நோக்கங்கள், அத்துடன் நமது கூட்டு வளர்ச்சிக் குறிக்கோள்களுக்கான மையத்தன்மை ஆகியவற்றை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மக்கள்
கல்விக்கான மனிதநேய அணுகுமுறை, கல்வியின் பல தனிப்பட்ட மற்றும் கூட்டு நோக்கங்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் குறிக்கிறது. கல்வி என்பது தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சியினை மையமாகக் கொண்டது. அனைத்து மக்களும் தங்கள் திறமைகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள உதவுவதும், அவர்களின் சொந்த வாழ்க்கையின் பொறுப்பு மற்றும் சமூகத்திற்கு பங்களிக்கும் திறன் உள்ளிட்ட அவர்களின் படைப்புத் திறன்களை உணர்ந்து கொள்வதும் இதன் நோக்கம்.
கல்வி என்பது, வறுமை மற்றும் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவது, உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவது, பாகுபாட்டை எதிர்கொள்வது போன்றவற்றுக்கான ஒரு சக்திவாய்ந்த வினையூக்கியாகும். மேலும் தனிநபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் தமக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும் ஆய்வுரீதியான முடிவுகளை எடுப்பதற்கும் அது இன்றியமையாதது.
இது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுப்படுத்த உதவும். அத்துடன் பாதிக்கப்படக்கூடிய மக்களை மேம்படுத்துவதன் மூலம் சமத்துவத்தை மேம்படுத்த உதவும். இறுதியில், வறுமை, பாலின சமத்துவமின்மை மற்றும் சமூகத் தனிமை போன்ற பல பரிமாண சமூக சவால்களை எதிர்கொள்ள கல்வி நமக்கு உதவுகிறது.
பூகோளம்
தனிப்பட்ட மற்றும் கூட்டு மனித நடவடிக்கைகள் பூகோளத்திற்கும் அதன் இருப்புக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் சீரழிவு, விரைவான பல்லுயிர் இழப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும் அதிகரித்துவரும் அவசரப் போக்குகளை அவதானிக்கையில், தற்போதைய அபிவிருத்தி முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யாவிட்டால் மனித உயிர்வாழ்வு ஆபத்தானதாக மாறுமென விஞ்ஞானிகள் நமக்கு நினைவூட்டுகிறார்கள்.
முறையான, முறைசாரா கற்றல் வாய்ப்புகளினூடாக சுற்றுச்சூழலின் நிலையான இருப்பு பற்றிய அறிவுள்ள சிறந்த சமூகமொன்றை அரசு, சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் முன்முயற்சிகளுடன் இணைந்து உருவாக்க முடியும். கல்வியின் பெறுமானங்கள் முன்மாதிரிகளை வடிவமைக்கிறது.
இது திறன்கள், கருத்துகள் மற்றும் கருவிகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. அவை நீடித்த நடைமுறைகளை மாற்றியமைக்கவோ அல்லது நிலைநிறுத்தவோ உதவுகின்றன. மேலும் இயற்கையான உலகத்துடன் மனிதர்கள் ஒன்றி வாழ வழியமைக்கின்றன.
சுபீட்சம்
யாரையும் விட்டுவைக்காத மொத்தமான வளர்ச்சிக்கு வாழ்க்கைத்திறன் உள்ளிட்ட கல்வி அவசியமானது. கல்வியும் பயிற்சியும் சமமாக வழங்கப்பட்டால், அது வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும், ஏழைகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சமத்துவமின்மையைக் குறைக்கவும் உதவும். கல்வியில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பது பின்தங்கிய குழுக்களையும் நெறிப்படுத்துவதற்காக அணுகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
யுனெஸ்கோ நடத்திய ஆய்வின்படி, நிலையான அபிவிருத்தி இலக்கு 4 ஐ நடைமுறைப்படுத்தினால், அனைத்து மக்களும் உயர்கல்வியை முடித்தால், உலக வறுமை பாதியாகக் குறைக்கப்படலாமெனத் தெரிவிக்கிறது.
சமாதானம்
தொடர்ச்சியான வன்முறை மற்றும் ஆயுத மோதல்கள் அனைத்து மனித உரிமைகளையும் மதிப்பிழக்கச் செய்கின்றன. மேலும் அவை பெரும்பாலும் கல்வி உரிமையை மீறுகின்றன. வன்முறையைத் தடுப்பதற்கும், நிலையான அமைதியை அடைவதற்கும் ஜனநாயக மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களும் நன்கு செயற்படும் நீதிக் கட்டமைப்பும் அவசியமானது. கல்வி என்பது அரசியல் பங்கேற்பு, உள்ளடக்கம், வாதிடுதல் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான ஒரு நிபந்தனையாகும்.
கல்வி, அமைதியை ஊக்குவிக்கும். 50 ஆண்டுகளில் 100 நாடுகளின் தரவுகளுடன் மேகொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் , பாரிய கல்வி இடைவெளிகளைக் கொண்டவர்கள் மோதலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமென்று கண்டறியப்பட்டுள்ளது. சமாதானத்தை வளர்ப்பதிலும் நல்லிணக்கத்திலும் கல்வி முக்கிய பங்கு வகிக்க முடியும்.
மக்கள், பூகோளம், சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல் என்ற யுனெஸ்கோவின் இந்த வருடத்துக்கான தொனிப்பொருளுடன் இணைந்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் கல்விக்கான அதனது இலக்கினை வகுத்து செயற்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக யுனெஸ்கோவுடன் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் இணைந்து பணியாற்றுகிறது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்
Comments (0)
Facebook Comments (0)